»   »  'உள்குத்து' - படம் எப்படி? #UlkuthuReview

'உள்குத்து' - படம் எப்படி? #UlkuthuReview

Posted By:
Subscribe to Oneindia Tamil

'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், நந்திதா, பால சரவணன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் 'உள்குத்து'. ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைக்க பி.கே.வர்மா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். பிரவீன் கே.எல் எடிட்டராகப் பணியாற்றி இருக்கிறார். 'உள்குத்து' படம் செம காட்டு காட்டியிருக்கிறதா, இல்லை ஊமைக்குத்தாகக் குத்தியிருக்கிறதா..? வாங்க பார்க்கலாம்.

படத்தின் ஹீரோ தொடங்கி வில்லன், அவனது அடியாட்கள் வரை ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறு மாதிரி உலாவுகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் வன்மம், பழி வாங்கும் உணர்வு, விசுவாசம் எப்படி வெளிப்படுகிறது என்பதுதான் 'உள்குத்து' படத்தின் ஒன்லைன். ஹீரோவை விட, வில்லன்களுக்கே அதிகமான வசனங்களையும் காட்சிகளையும் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள். அலட்டல் இல்லாத வழக்கமான நடிப்பை அப்படியே இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறார் அட்டகத்தி தினேஷ்.

Ulkuthu movie Review

கந்துவட்டி ப்ளஸ் ரௌடியிசத்தை ஃபுல் டைம் தொழிலாகவும் பார்ட் டைமாக படகு செய்யும் வேலையும் பார்க்கும் லோக்கல் தாதா சரத் லோஹிதஸ்வா. அவரது மகனாக திலீப் சுப்பராயன். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். கோவம் வந்தால், உடன் இருப்பவர்களையே கழுத்தை நெரித்துக் கொல்லும் தாதா அப்பா சரத், அவருக்குத் தப்பாமல் பிறந்த மகன் திலீப் இருவரும் தினேஷ் வாழ்க்கையில் எப்படி குறுக்கிடுகிறார்கள்... அவர்களுக்கு தினேஷ் திருப்பிக் கொடுத்தது என்ன என்பதுதான் கதை.

பால சரவணன் இருக்கும் குப்பத்துப் பகுதிக்கு வந்து சேர்கிறார் தினேஷ். தான் எம்.பி.ஏ படித்திருப்பதாகவும் குடும்பப் பிரச்னையில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாகவும் சொல்லி அவரிடம் அடைக்கலம் கேட்கிறார். அப்பாவியாக இருக்கும் தினேஷை நம்பி தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் 'சுறா சங்கர்' பாலசரவணன். அவரது தங்கை நந்திதா. பால சரவணன் வீட்டுக்குள் அடைக்கலமான தினேஷ், வில்லன் குரூப்பைச் சேர்ந்த ஒருவர் பால சரவணனை அடிக்க, அவரைப் போட்டுப் புரட்டி எடுக்கிறார். இது தெரிந்து திலீப் சுப்பராயன் துரத்த அவரையும் துவைத்தெடுக்கிறார். இப்படி வான்டடாக பிரச்னைகளை இழுத்துபோட்டு சரத் லோஹிதஸ்வா குரூப்பை ஏன் இந்த வெளு வெளுக்கிறார் என்பது நம்மைப் போலவே பாலசரவணனுக்கும் புரியவில்லை.

படகுப்போட்டியில் கலந்துகொள்ளும் தினேஷை போட்டுத்தள்ள ஆட்களை அனுப்புகிறார் சரத். அதில் புத்திசாலித்தனமாக தப்பித்த தினேஷ் போட்டியில் விட்டுக்கொடுத்து வில்லனுக்கு நெருக்கமாகிறார். இதற்கிடையே, நந்திதாவும் தினேஷும் காதலிக்கிறார்கள். தினேஷ் அடிதடிக்காரர் என்பது தெரிந்ததும் கலங்கிப் போகிறார். அவரிடம் ஃப்ளாஷ்பேக் சொல்லி தன் நிலையைப் புரிய வைக்கிறார் தினேஷ். லோஹிதஸ்வாவும், திலீப் சுப்பராயனும் தினேஷின் வாழ்வில் எந்த வகையில் குறுக்கிட்டார்கள் என்பது இரண்டாம் பாதி.

Ulkuthu movie Review

படத்தின் தொடக்கத்தில் மெதுவாக இழுக்கும் படம், தினேஷ் வில்லன் ஆட்களை அடித்ததும் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. அப்பாவியாக அறிமுகமான தினேஷ் யார் என்னவென்றே தெரியாமல் வில்லன்களை பிரிக்கும் காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இருவருக்கும் இடையேயான பின்னணி என்ன என்கிற கேள்வியே இடைவேளை வரை படத்தை நகர்த்திச் செல்கிறது. இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் திலீப் சுப்பராயன் யோசிக்காமல் எதையும் செய்யும்
ஈகோ பிடித்த வில்லனாக அசத்தியிருக்கிறார். சரத் லோஹிதஸ்வாவுக்கு மிரட்டல், சோகம், இழப்பு என கலவையாக ஸ்கோர் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைச் சரியாகவும் பயன்படுத்தி இருக்கிறார்.

'சுறா சங்கர்னா சும்மாவா...' என கையை முறுக்கும் பாலசரவணன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். 'சுறா சங்கர்னா சும்மாவா...' என ஹீரோ தினேஷும் அவ்வப்போது பாலசரவணனை வில்லன் குரூப்பிடம் போட்டுக் கொடுத்து கிலி கிளப்புகிறார். குப்பத்து தலைவராக நடித்திருக்கும் செஃப் தாமு ஸ்டாண்ட் அப் காமெடியன் போல அவ்வப்போது திரையில் தோன்றி 'சுறா சங்கர்னா சும்மாவா' ரியாக்‌ஷன் காட்டுகிறார். போதாக் குறைக்கு, வில்லன் சரத்தும் 'சுறா சங்கர்னா சும்மாவா' என டயலாக் பேசுகிறார். நாலுவாட்டி சொன்னதுக்கே இரிடேட் ஆகுதே... இந்த டயலாக்கை படத்தில் நூற்றிச்ச் சொச்சம் முறை மாற்றி மாற்றிச் சொல்லி வெறியேற்றுகிறார்கள். இந்த டயலாக் வரும்போது மட்டும் காதைப் பொத்திக்கொண்டால் முழுமையாகப் படம் பார்த்து வெளியே வரலாம். குப்பத்து தலைவராக நடித்திருக்கும் செஃப் தாமு ஃப்ரேமை மறைத்து நின்றதைத் தவிர பெரிதாக எதையும் செய்யவில்லை. அவ்வப்போது அவர் வரும் காட்சிகளுக்கு வேறு நடிகரைப் பிடித்திருக்கலாம். அல்லது ஃப்ரீயா விட்டிருக்கலாம்.

வில்லன் சரத் யாரையாவது கொல்ல முடிவெடுத்தால் கபடி விளையாடியே சம்பவத்தை முடிக்கிறார். வெங்கல்ராவ் தலையைப் பிடித்த வடிவேலுவைப் போல சரத் லோஹிதஸ்வாவிடம் கழுத்தைக் கொடுத்தால் உடும்புப் பிடியாகப் பிடித்து உயிர்போன பின்புதான் விடுவார். அதே கபடி விளையாட்டில் சரத்துக்கு தினேஷ் அள்ளு கிளப்புவது ஹைலைட். ஆக்‌ஷன் காட்சிகளில் யதார்த்தம் மிஞ்சாமல் புகுந்து விளையாடி இருக்கிறார் தினேஷ். அடிதடிகளை விட சிம்பிளாக கத்தியைச் சொருகி சோலியை முடித்திருப்பது தினேஷுக்கும், ரசிகர்களுக்கும் நன்மை தருகிறது.

தினேஷின் மச்சானாக ஜான் விஜய், அக்காவாக சாயா சிங் ஆகியோர் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரௌடியான ஜான் விஜய் காதல் மனைவி சாயா சிங்கிடம் குழையும் காட்சிகளிலும், உண்மை தெரிந்துவிடக்கூடாது என கடைசி நேரத்திலும் பதறும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஶ்ரீமன் குரோதம் மிகுந்த ரௌடியாக மிரட்டி இருக்கிறார். ஹீரோயின் நந்திதா தினேஷை பார்த்ததுமே காதல் கொண்டு, மருகும் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கும் அதிகமான வசனங்களும், காட்சிகளும் இல்லை.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை. பின்னணி இசை உணர்வுகளைக் கிளறச் சிரமப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் அழுத்தமே இல்லாமல் கடந்து போகின்றன. ட்விஸ்டாக வரும் ஃப்ளாஷ்பேக் காட்சியும் அழுத்தமில்லாமல் மேலோட்டமாக நகர்ந்து, ரசிகர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த மறுக்கிறது. படம் முழுக்க மீனவக் குப்பத்தில் நடந்தாலும் மீனவர்களின் வாழ்வியலை மனதைக் கவரும் வகையில் பதிவு செய்யத் தவறியிருக்கிறார்கள். ஒரே டோனிலேயே கஷ்டமில்லாமல் கேமராவை செலுத்தி இருக்கிறார் பி.கே.வர்மா. வழக்கமான ரௌடி - ஹீரோ பாணி கதைதான் என்றாலும் படத்தின் கடைசியில் நல்ல மெசேஜ் ஒன்றையும் சொல்லிக் கவர்ந்திருக்கிறார்கள். அதற்காகவாவது படம் பார்க்கலாம். 'உள்குத்து' ரசிகர்களை ஊறப்போட்டு ஊமைக்குத்தாகக் குத்தவில்லை என்பதே ஆசுவாசம்.

English summary
Read 'Ulkuthu' movie review here. Attakathi Dinesh, Nandita Swetha, Bala saravanan are playing lead roles in the film 'Ulkuthu'. 'Ulkuthu' is an action comedy drama film directed by Caarthik Raju. How is this film..? Read One india review here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X