twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உன்னாலே உன்னாலே - விமர்சனம்

    By Staff
    |

    கிழக்குக் கடற்கரைச் சாலை பக்கமும், டைடல் பூங்காக்களிலும், பிட்ஸா ஹட்ஸ்கள், பப்களிலும், உலா வரும் இளைஞர்களை மையமாக வைத்து, அவர்களுக்காகவே படம் எடுக்கும் ஹைடெக் பார்ட்டி ஜீவா.

    அவரது முதல் படமான 12 பி ஆகட்டும், இப்போது வந்துள்ள உன்னாலே உன்னாலே ஆகட்டும் இரண்டுமே அந்த ரகத்தினருக்கான படம்தான்.

    பெண்கள், காதல், நண்பர்கள், பிட்ஸா, பப் என ஐந்து முக்கிய விஷயங்களைப் பற்றி மட்டுமே அறிந்த, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்ற கனவுகளை மட்டுமே வைத்துக் கொண்டுள்ள ஃப்ரீக் இளைஞர்களுக்கான படம் இது.

    சாப்ட்வேர் என்ஜீனியருக்கும், இரண்டு அழகிய பெண்களுக்கும் இடையே பூக்கும் காதலை விவரித்துள்ளார் உன்னாலே உன்னாலே படத்தில்.

    கொஞ்சம் கதையை உற்றுப் பார்த்தால் மின்சாரக் கனவே படத்தின் சாயல் தெரிகிறது. படத்தின் காட்சிளுக்காக ஜீவா அதிக சிரமப்படவில்லை போலும். பல ஆங்கில மற்றும் இந்திப் படங்களிலிருந்து ஆங்காங்கே சிலவற்றை உருவி இப்படத்தில் தமிழ்மயமாக்கியது போலத் தெரிகிறது.

    இத்தனை சந்தேகங்கள் இருந்தாலும் கூட படத்தை கையாண்ட விதம்தான் ஜீவாவை காப்பாற்றியிருக்கிறது. வினய் அழகாக இருக்கிறார். சாப்ட்வேர் என்ஜீனியரான வினய், சதாவைக் காதலிக்கிறார். சதாவும் சாப்ட்டான சாப்ட்வேர் பொண்ணுதான்.

    கோவிலில் முதன் முதலில் சந்தித்தபோதே காதல் வலையில் விழுந்து கண் கோர்த்து, கரம் கோர்க்கிறார்கள். ஆனால் நாட்கள் போக போக இருவருக்கும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள். நமக்குள் ஒத்துவராது என்று புரிந்து கொள்கின்றனர்.

    பெண்களுடன் ஜாலியாக சுற்றுவது வினய்யின் பழக்கம். அதேபோல நண்பர்கள் கூட்டமும் அதிகம். இவையெல்லாம் சதாவுக்குப் பிடிக்கவில்லை. நீ எனக்கு மட்டுமே, எனக்காக மட்டுமே என்று கூறுகிறார் சதா. இது பிரச்சனையாக பிரிகிறார்கள்.

    வேலை நிமித்தமாக மெல்போர்ன் பறக்கிறார் வினய். அங்கு தனிஷாவை சந்திக்கிறார். பப்ளியான, வேடிக்கை, வினோதங்கள் நிறைந்த ஜில் ஜில் பெண் தனிஷா.

    விமானத்தில் வினய்யுடன் வலியக்கப் போய் அறிமுகப்படுத்திக் கொள்ளும் தனிஷா, சட்டென்று நட்பாகி விடுகிறார். மெல்போர்ன் பயணத்தில் இருவரும் மிக நெருங்கி விடுகிறார்கள்.

    இந்த சமயத்தில்தான் எதிர்பாராதவிதமாக மெல்போர்னில் சதாவை சந்திக்கிறார் வினய். சதா, வினய் பிரிந்ததை தெரிந்து கொள்கிறார் தனிஷா. இருவரின் கருத்து வேறுபாடுகளையும் அறிந்து கொள்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க களம் இறங்குகிறார்.

    ஆனால் அவரது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. அதேசமயம், வினய் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார் தனிஷா. அதன் பிறகு என்ன நடந்தது, தனிஷா காதல் வென்றதா, சதா காதல் ஜெயித்ததா என்பதுதான் கதை.

    தமிழ் சினிமாவில் ஹீரோ என்றாலே 3 நாட்களாக வளர்ந்த லேசான தாடி, நல்ல உசரம், கேஷுவலான சட்டை, பேன்ட் என்று ஒரு டிரண்ட் வந்து விட்டது போல. வினய்யும் இப்படித்தான் படத்தில் பாதி நேரம் பக்கிரியாக வருகிறார்.

    கிட்டத்தட்ட பிளே பாய் கணக்கில் பெண்களுடன் கொட்டமடிக்கிறார் வினய். அந்த ரோலுக்கு அவரது வயசும், உருவும் ரொம்ப நன்றாகவே பொருந்தி வருகிறது.

    மாதவனையும், சூர்யாவையும் மிக்ஸியில் போட்டு கடைந்தெடுத்தது போல ஒரு உருவம். படத்துக்கு சரியாக பொருந்தியுள்ளார்.

    ஆனால் வசனம் பேசும்போதுதான் சொதப்பலாக இருக்கிறது. தமிழை தமிழ் போலவே பேச அவர் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தமிழுக்கு நல்லது.

    ஆனால் தமிழைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள். அதிலும் தமிழ் பேசத் தெரிந்தால் அதை பெரிய தகுதியிழப்பாக கருதும் காலம் இது.

    சதாவுக்கு சீரியஸான ரோல். அழகாக நடித்திருக்கிறார். வினய் மீதான தனது பொசசிஸ்வனஸைக் காட்டும்போது பின்னி இருக்கிறார். வாழ்க்கையில் என்னவெல்லாம் அடிப்படையாக தேவை என்பதை உணர்ந்த பொறுப்பான பெண்ணாக வந்து போயிருக்கிறார். பார்ப்பதற்கும் அழகாக, கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறார்.

    தீபிகா என்ற கேரக்டரில் வந்துள்ள தனிஷா, கிளாமரில் பின்னியிருக்கிறார். நவ நாகரீக பெணணுக்கேற்ற உடல் வாகு, ஸ்டைல் எல்லமே இருக்கிறது தனிஷாவிடம். குறிப்பாக அவரது கண்கள் பல கதைகள் பேசுகிறது.

    ராஜு சுந்தரமும் நடித்துள்ளார். சிரிக்க வைக்க முயன்றுள்ளார். ஆனால் கஷ்டப்பட்டால்தான் மாமே அது வருது.

    இயக்குநர் ஜீவாவை விட கேமராமேன் பல இடங்களில் வெளுத்து வாங்கியுள்ளார். குறிப்பாக மெல்போர்ன் அழகை வாரிக் கொண்டு வந்து நம் கண் முன் விரித்துக் காட்டுவது சிம்ப்ளி சூப்பர்ப்.

    இசை ஹாரிஸ் ஜெயராஜாம். சொல்லிக் கொள்கிறார்கள். ஐந்து பாட்டில் ரெண்டு தான் தேறுகிறது. மற்ற பாடல்களில் சத்தம்தான் ஜாஸ்தியாக இருக்கிறது.

    மடிச்சுக் கட்டிய வேட்டியோடு படம் பார்க்க வருகிறவர்களுக்கான படம் அல்ல இது, இக்கால ஹைடெக் இளைஞர்களுக்கானது. எனவே அந்த வட்டத்தினரை மட்டும் கவரக் கூடிய படமாக வந்திருக்கிறது உன்னாலே உன்னாலே.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X