twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடகறி விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    2.5/5

    எஸ் ஷங்கர்

    நடிப்பு: ஜெய், சுவாதி, பாலாஜி, அருள்தாஸ், வெங்கட் பிரபு, சன்னி லியோன், கஸ்தூரி

    ஒளிப்பதிவு: எஸ் வெங்கடேஷ்

    இசை: விவேக் ஷிவா, மெர்வின் சாலமன்

    தயாரிப்பு: தயாநிதி அழகிரி

    இயக்கம்: சரவணராஜன்

    எளிய கதை, சின்னச் சின்ன சம்பவங்கள், சுவாரஸ்யமான காதல் காட்சிகளின் தொகுப்பாக வந்திருக்கிறது வடகறி.

    சென்னையின் நடுத்தரக் குடும்பத்துப் பையன் ஜெய். ஆட்டோக்கார அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரியுடன் வசிக்கும் அவருக்கு, மெடிக்கல் ரெப் வேலை கிடைக்கிறது. ஒரு நல்ல போன் வாங்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் ஒரு கொரியன் செட்தான் வாங்க முடிகிறது. அந்த போனோ, போகிற இடங்களிலெல்லாம் ரிங்டோன் என்ற பெயரில் லவுட்ஸ்பீக்கர் கணக்கில் சத்தம் போட்டுத் தொலைகிறது.

    ஒருநாள் 'ஆளுக்கு 500 ரூபா போட்டு ஒரு நல்ல போனாவது வாங்கிக் கொடுங்கடா' என வெங்கட் பிரபு கமெண்ட் அடிக்க, அன்று பார்த்து ஒரு ஐபோனை அநாதையாகக் கண்டெடுக்கிறார். திருப்பிக் கொடுக்கலாம் என முயற்சிக்கும்போது, 'தேடி வந்த அதிர்ஷ்டத்தை விட்டுடாத மச்சி,' என அட்வைஸ் தருகிறார் பாலாஜி. ஐபோன் இருந்தாதான் பெண்கள் விழுவார்கள் என்ற உபரித் தகவலைத் வேறு தர, திருப்பித் தரும் எண்ணத்தை தள்ளிப் போடுகிறார்.

    பாலாஜி வீட்டு எதிர்வீட்டில் உள்ள தோழி வீட்டுக்கு அடிக்கடி வரும் சுவாதியைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் ஜெய். ஆனால், 'அவளுக்கு ஏற்கெனவே ஆள் இருக்கான், நீ அவ ப்ரெண்டை லவ் பண்ணு' என பாலாஜி கொடுத்த யோசனையை நம்பி, தோழியிடம் காதல் சொல்ல முயலும்போதுதான், சுவாதிக்கு காதலன் என யாருமில்லை என ஜெய்க்கு தெரிகிறது.

    உடனே, அந்தத் தோழியிடமே சுவாதி மீதான தன் காதலைச் சொல்கிறார். உடைந்து போகும் தோழி, சுவாதியிடம் சண்டைக்குப் போக, வீம்புக்காகவே ஜெய்யை காதலிக்க ஆரம்பிக்கிறார் சுவாதி. தன்னிடம் உள்ள ஐபோனைப் பார்த்து மயங்கித்தான் சுவாதி காதலிப்பதாக நம்புகிறார் ஜெய்.

    இதை சுவாதியிடம் சொல்ல, பெண்கள் என்ன அவ்வளவு கேவலமா என வெளுக்கிறார் அவர். சுவாதியின் மனநிலை, எம்ஜிஆர் ரசிகரான தன் அண்ணனின் நேர்மையை நினைத்துப் பார்க்கும் ஜெய், அந்த ஐபோனை உரியவரிடம் திருப்பித் தர முயற்சிக்கிறார். அந்த முயற்சியே அவரை பெரும் சிக்கலில் இழுத்துவிடுகிறது.

    அதிலிருந்து ஜெய் தப்பிப்பது மீதிக் கதை!

    அப்பாவி சென்னை இளைஞன் பாத்திரம் ஜெய்க்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆனால், இந்த வேடத்தை இன்னும் சிறப்பாக ஜெய்யால் செய்திருக்க முடியும். அவரோ, எல்லா காட்சியிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு காட்சி விதிவிலக்கு... வில்லன்களிடம் மிதிபட்டு முகத்தில் ரத்தக் கறையோடு வரும் அவரை, 'அதென்ன லிப்ஸ்டிக்' என சுவாதி கேட்க, அதற்கு ஜெய் காட்டும் ரியாக்ஷன் செம!

    சுவாதிக்கு பெரிய வேலையில்லை. 'தெத்துப் பல் தெரிய சிரிக்க வேண்டும்... அப்புறம் கழுத்திலிருந்து கால் வரை முழுவதும் மூடப்பட்ட காஸ்ட்யூமுடன் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும்.. அவ்ளோதான் உங்க போர்ஷன்,' என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது இயக்குநர்.

    ஆர்ஜே பாலாஜிக்கு இதில் 'சந்தான' வேடம். அதாவது ஹீரோவுக்கு ப்ரெண்ட்! படபடவென ரேடியோவில் பேசுவது மாதிரியே பேசுகிறார். ஜெய் சொல்வது போல, சில நகைச்சுவைக் காட்சிகள் நாளைக்கு சிரித்துக் கொள்ளலாம் ரகம்தான்!

    பணயக் கைதியாக பிடித்து வைக்கப்படும் பாலாஜி, மெதுவாக அந்த கும்பலுடன் நட்பாகும் அந்த மூன்று காட்சிகள், புதுசு.

    தோழியாக வரும் பெண், வெங்கட் பிரபு, அந்த வில்லன் குரூப் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் மெயின் வில்லன் என்று ஒருவரைக் காட்டும்போது இம்மியளவுக்குக் கூட த்ரில் இல்லை. அதான் தெரியுமே என்கிற மாதிரி ஆகிவிடுகிறது அந்தக் காட்சியில்!

    சன்னி லியோன் ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டுப் போகிறார். அதற்கு மேல் அந்தப் பாடல் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

    சுற்றிச் சுற்றி சென்னையையே காட்டினாலும் வெங்கடேஷ் ஒளிப்பதிவு அருமை.

    புதிய இசையமைப்பாளர்கள் விவேக் ஷிவா, மெர்வின் சாலமன் இசையில் ஒரு பாடல் பரவாயில்லை. அந்த செல்போன் கேம் பாடல் புதிதாக இருந்தாலும், இன்னொரு முறை கேட்கும்படி, அல்லது பார்க்கும்படி இல்லை!

    Vadacurry review

    காதல் காட்சிகளை ரகளையாக அமைத்திருக்கும் சரவண ராஜன், அதே சுவாரஸ்யத்தோடு பின்பாதியில் சம்பவங்களை அமைக்கத் தவறியிருக்கிறார். ஆனால் பொழுதுபோக்குக்கு மினிமம் கியாரண்டி இருப்பதால்... பார்க்கலாம்!

    English summary
    Vadacurry is light and easy story line with a terrific first half and usual second half. But the film is watchable once.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X