»   »  வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - விமர்சனம்

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஆர்யா, விஷால் (சிறப்புத் தோற்றம்), சந்தானம், தமன்னா, பானு


ஒளிப்பதிவு: நீரவ் ஷா


இசை: டி இமான்


தயாரிப்பு: ஆர்யா


இயக்கம்: ராஜேஷ் எம்


ஒரு டாஸ்மாக் கடை, அதில் இரண்டு நண்பர்கள், கடந்து போகும் இரு அழகான பெண்கள் இருந்தால், கொஞ்சம் லூசுத்தனமான அம்மாக்கள் அல்லது அப்பாக்கள், க்ளைமாக்ஸில் எட்டிப் பார்க்க ஒரு கெஸ்ட் ஹீரோ கிடைத்தால் போதும்... இயக்குநர் ராஜேஷ் ஒரு படத்தை சுருட்டிக் கொடுத்துவிடுவார் என்று பேசுமளவுக்கு வந்திருக்கிறது விஎஸ்ஓபி.


வாசு சந்தானமும் சரவணன் ஆர்யாவும் ஒண்ணா படிச்சவங்க.. ஊரில் உள்ள பாரிலெல்லாம் ஒண்ணா குடிச்சவங்க. ஒருவரையொருவர் கலாய்த்தபடி ஒரு மொபைல் நடத்தி வரும் இருவரில், சந்தானத்துக்கு பானுவை பெண் பார்க்கிறார்கள். அந்த பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து கல்யாணமாகி முதலிரவு வரை நண்பன் சந்தானத்தை ஆர்யா கலாடடா கொண்டே இருக்க, அது பானுவுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.


Vasuvum Saravananum Onna Padichavanga - Review

ஆர்யாவுடனான நட்பை ஒரேயடியாக முறித்துக் கொண்டால்தான் முதலிரவு, இல்லாவிட்டால் டைவோர்ஸ் என மிரட்டுகிறாள் பானு. இதைச் சமாளிக்க, ஆர்யாவுக்கு ஒரு பெண்ணைப் பார்க்கிறார் சந்தானம். அப்போதுதான் தமன்னா அறிமுகமாகிறார். முதல் சந்திப்பிலேயே வழக்கம் போல ஆர்யாவுக்கு காதல் பிறந்துவிடுகிறது. ஆனால் தமன்னா வெறுக்கிறார்.


சில பல ட்ராமாக்களுக்குப் பிறகு தமன்னாவும் லவ்வுகிறார். ஆனால் அவரை இன்டர்வியூ செய்கிறேன் பேர்வழி என சந்தானம் சில்லறைத்தனமாக கேள்விகள் கேட்க, கோபத்தின் உச்சிக்கே போய் சந்தானத்தின் நட்பைத் துண்டிக்குமாறு ஆர்யாவுக்கு ஆர்டர் போடுகிறார்.


Vasuvum Saravananum Onna Padichavanga - Review

நண்பர்கள் இருவரும் பிரிந்தார்களா... சந்தானம் முதலிரவு நடந்ததா? தமன்னா இறங்கி வந்து ஆர்யாவை ஏற்றாரா? இதையெல்லாம் தியேட்டரில் போய் குடிக்கும் கடிக்கும் நடுவில் தெரிந்து கொள்ள வேண்டியவை.


படத்தில் ஹீரோ யார்? காமெடியன் யார்? என ஒரே குழப்பம். காரணம் ஆர்யாவுக்கு லூசுத்தனமான வேடம். சந்தானத்துக்கு அத்தனை சிக்கல்களையும் சமாளித்து நண்பனைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான வேடம். பல காட்சிகளில் இவரது தோற்றம், காஸ்ட்யூம், நடனம், பாத்திரம் எல்லாமே ஹீரோ மாதிரியே முன் நிறுத்துகின்றன.


Vasuvum Saravananum Onna Padichavanga - Review

சந்தானத்தின் கலாய்ப்புகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. படத்தில் ஒரு காட்சியில் தமன்னாவும் விஷாலும் சந்தானம் கலாய்ப்பதை 'பத்தல பத்தல' என்பார்கள். ரசிகர்கள் மன நிலையும் அப்படித்தான்.


ஆர்யா - தமன்னா காதல் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. காரணம், ஆர்யாவின் எரிச்சலூட்டும் கேரக்டர். 'இப்படி ஒரு கிறுக்குப் பையனை எவதான் லவ் பண்ணுவா?' என ரசிகர்களைக் கேட்க வைக்கிறது.


தமன்னா இந்தப் படத்திலும் அழகாக வந்து அள்ளுகிறார். ஒரு காட்சியில் பீர் குடித்து 'என்னிஷ்டம்... எந்த சரக்கு வேணாலும் அடிப்பேன்,' என பீதி கிளப்புகிறார்.


Vasuvum Saravananum Onna Padichavanga - Review

சந்தானம் ஜோடியாக வரும் பானு, சுவாமிநாதன் போன்றவர்கள் செட் பிராபர்ட்டிகள் மாதிரிதான். அந்த வித்யுலேகாவுக்கு தற்காலிகமாக தடை போட்டால் கூட நல்லதுதான். ஓவர் இம்சை!


இந்தப் படத்துக்கு இந்த அளவு ஒளிப்பதிவு போதும் என அளந்து செய்திருக்கிறார் நீரவ் ஷா. இமானின் இசையில் வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க.. மனசில் நிற்கிறது.


Vasuvum Saravananum Onna Padichavanga - Review

இயக்குநர் ராஜேஷுக்கு விஎஸ்ஓபி 5 வது படம். இவை எல்லாவற்றிலுமே தொடக்கம், க்ளாமாக்ஸ், முடிவு என அனைத்துமே ஒரே மாதிரிதான். டாஸ்மாக்கின் அறிவிக்கப்படாத தூதர் மாதிரி, படம் முழுக்க மது வழிய படமாக்கியிருப்பதை என்னவென்று சொல்வது?


படத்துக்கு பெரிய ப்ளஸ் கடைசி ஐந்து நிமிடம் வரும் விஷால் மற்றும் முகம் காட்டாமல் நான்கைந்து நொடிகள் குரல் தரும் லட்சுமி மேனன். நண்பர்களின் பிரச்சினையை பீரையும் பிராண்டியையும் ஒப்பிட்டுத் தீர்த்து வைத்து சுவாரஸ்யமாக இருந்தாலும், இங்கும் சரக்கா என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.


இலைமறை காயாக உள்ள கெட்ட விஷயத்தை பொதுவெளியில் இழுத்து வைத்து சீவி சிங்காரித்துக் காட்டி, புதுப்புது இளம் குடிகாரர்கள் உருவாக துணை போவது எத்தனை பெரிய தவறு ராஜேஷ்!

English summary
Vasuvum Saravananum Onna Padichavanga is a comic - romantic movie but failed to impress at large level due to the repetitive content and overdose liquor scenes.
Please Wait while comments are loading...