»   »  வீராப்பு - சூப்பரப்பு!

வீராப்பு - சூப்பரப்பு!

Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஸ்படிகம், வீராப்பு என்ற பெயரில் சுந்தர்.சி.யின் அட்டகாச நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

தலைமகன் மூலம் ஹீரோவாக அறிமுகமான சுந்தர்.சி. நடித்துள்ள 2வது படம் வீராப்பு. அவரிடம் உதவியாளராக இருந்த பத்ரி இப்படம் மூலம் இயக்குநராகியுள்ளார்.

முதல் படத்தில் முத்திரை பதித்த சுந்தர்.சி, இப்படத்தில் நிரந்தர நாயகன் வரிசையில் தன்னை இணைத்துக் கொகாண்டுள்ளார். படத்தின் கதை, ஒரு தந்தை எப்படி இருக்கக் கூடாது, ஒரு மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே ..
அவன் நல்லவனாவதும், தீயவனாவதும்
அன்னை வளர்ப்பதிலே ..

70களில் வெளியான எம்.ஜி.ஆர். படத்தில் வந்த இந்தப் பாடல் வரிதான் இப்படத்தின் கதை.

வேதக்கண்ணு (பிரகாஷ் ராஜ்), ஒரு பள்ளிக்கூட வாத்தியார். மாணவர்களிடம் கண்டிப்பு காட்டுவதில் இவருக்கு நிகர் இவர்தான். குடியரசுத் தலைவரின் தேசிய நல்லாசிரியர் விருதும் பெற்றவர் வேதக்கண்ணு.

கணிதத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர் வேதக்கண்ணு. அவரது ஒரே மகன் புலிப் பாண்டி (சுந்தர்.சி). இவரும் வேதக்கண்ணுவின் கண்டிப்பிலிருந்து தப்பவில்லை.

ஆரம்பத்திலிருந்தே தனது மகன் மீது வேதக்கண்ணுவுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. தனது வகுப்பில் நடக்கும் சிக்கல்கள், மாணவர்களின் குசும்புகள் உள்ளிட்ட அத்தனை சேஷ்டைகளுக்கும் தனது மகனே காரணம் என நினைக்கிறார். தனது மகனைத் தண்டிக்கிறார்.

வேதக்கண்ணுன் மூர்க்கத்தனமான கோபத்தால், புலிப்பாண்டிக்கு தந்தை மீது வெறுப்பு ஏற்படுகிறது, துவேஷம் கொள்கிறார். தந்தைக்குப் பிடிக்காது என்று கருதும் விஷயங்களை அவரை ஆத்திரமூட்டுவதற்காக வேண்டுமென்றே செய்கிறார்.

தந்தையின் மீது கொண்ட வெறுப்பு கணிதப் பாடத்தின் மீதும் திரும்புகிறது. கணிதம் என்றாலே கடுப்பாகி விடுவார். அதேசமயம், அறிவியல் மீது அவருக்கு அலாதிப் பிரியம். பல புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் அதை ஏற்க மறுக்கிறார் வேதக்கண்ணு. மகனின் முயற்சிகளை அங்கீகரிக்க மறுக்கிறார்.

இப்படி தந்தையின் போக்கால் அதிருப்தி அடையும் மகன், ஒரு கட்டத்தில் ரவுடியாகி விடுகிறார். குடும்பத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு விடுகிறார்.

இந்த நிலையில், புலிப்பாண்டியுடன் சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் படித்த பாரதி, பாண்டி மீது காதல் கொள்கிறாள். புலிப்பாண்டியன் குணத்தை மாற்ற முயற்சிக்கிறாள். அதில் அவள் வெற்றி அடைகிறாளா, வேதக்கண்ணு மகனை ஏற்றுக் கொள்கிறாரா, புலிப்பாண்டி குடும்பத்துடன் இணைகிறானா என்பதுதான் படத்தின் மீதக் கதை.

அசத்தலாக நடித்துள்ளார் சுந்தர்.சி. புலிப்பாண்டி கேரக்டராகவே மாறியிருக்கிறார். அவரது மேனரிசம், காஸ்ட்யூம், கூலிங் கிளாஸ் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படு ஜாலியாக தனது கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார். கரடு முரடான லாரி டிரைவராக, ரவுடியாக, அலப்பறை நிறைந்த மனிதராக வாழ்ந்து காட்டியுள்ளார்.

கண்டிப்பான ஆசிரியராக பிரகாஷ் ராஜ் நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். ஒரிஜினல் மலையாளத்தில் நடித்த திலகனின் நடிப்போடு ஒப்பிட முடியாவிட்டாலும் கூட, தனது பாணியில் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

இளம் ஆசிரியையாக வருகிறார் கோபிகா. புலிப்பாண்டியின் பின்னாலேயே சுற்றி அவரது அன்பைப் பெற முயற்சிப்பதும், புலிப்பாண்டியை மாற்றும் முயற்சியிலும், அவரது குடும்பத்தோடு நெருக்கம் காட்டுவதிலும் நடிப்பைப் பிழிந்துள்ளார். பண்பட்ட நடிப்பு கோபிகாவுடையது.

காமெடியில் கலக்கியுள்ளார் விவேக். அவருக்கு ஜோடியாக அந்தக்கால நாயகி அஞ்சு (உடம்பு ஏங்க இப்படி ஆயிருச்சு). வழக்கம் போல மூட நம்பிக்கைகளை கடித்துக் குதறியிருக்கிறார். கூடவே வாய் வலிக்க சிரிக்கவும் வைத்துள்ளார்.

இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.

மொத்தத்தில் வீராப்பு நல்ல பொழுதுபோக்கு சித்திரம்.

பத்ரியின் முதல் படம் அவரை பத்திரமான இடத்திற்குக் கொண்டு போயிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil