»   »  வேல் - பட விமர்சனம்

வேல் - பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil
Click here for more images
நடிப்பு - சூர்யா, ஆசின், வடிவேலு, லட்சுமி, ராஜ்கபூர், கலாபவன் மணி.
இயக்கம் - ஹரி.
இசை - யுவன் ஷங்கர் ராஜா.
தயாரிப்பு - மோகன் நடராஜன், ஸ்ரீராஜகாளியம்மன் மீடியா லிமிட்டெட்.

அதிரடி, காதல், சென்டிமென்ட் எல்லாவற்றையும் சம அளவில் கலந்து, அட்டகாசமான ஒரு என்டர்டெய்னரை வேல் என்ற பெயரில் கொடுத்துள்ளார் இயக்குநர் ஹரி.

தெற்கத்தி பின்னணியைக் கொண்ட இன்னும் ஒரு படம்தான் வேல். ஹரியின் ஸ்டைலில், படு சுவாரஸ்யமாக உருவாகி, திரைக்கு வந்துள்ளது. ஹரியின் முந்தைய ஹிட் படங்களான ஐயா மற்றும் தாமிரபரணி ஆகியவற்றின் சாயலையும் படத்தில் ஆங்காங்கு காண முடிகிறது.

இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் ஒரு குடும்பத்திலிருந்து கதை தொடங்குகிறது. இரு குழந்தைகளும் பிரிந்து விடுகின்றன. இரு சிறுவர்களும் வேறு வேறு சூழலில் வளர்கின்றனர். ஒரு குழந்தை (வாசு), சென்னையில் தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரியின் மகனாக வளர்கிறான். இன்னொருவன் (வேல்) திண்டுக்கல்லில் பக்கா கிராமத்து இளைஞனாக, முரட்டுத்தனமாக வளர்கிறான்.

வாசுவுக்கு, டிவி தொகுப்பாளினியான 7 அப் ஸ்வாதி (பெப்சி உமா மாதிரி - ஆசின்) மீது காதல் பிறக்கிறது. இந்த நிலையில், வேலின் வாழ்க்கையில் வில்லனான, முன்னாள் அமைச்சரும், உள்ளூர் தாதாவுமான சங்கரபாண்டி (கலாபவன் மணி) குறுக்கிடுகிறார்.

இந்த சந்தர்ப்பத்தில், வாசுவும், வேலும் சந்திக்கிறார்கள். சங்கரபாண்டியை பொது எதிரி என்று உணர்கிறார்கள். இருவரும் பேசி வைத்து இடம் மாறுகிறார்கள். வில்லனை எப்படி துவம்சம் செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதக் கதை.

கோபம் கொப்பளிக்கும் கிராமத்து இளைஞனாகவும், நகரத்து இளைஞனாகவும் இரு வேடங்களில் கலக்கியிருக்கிறார் சூர்யா. இரு கேரக்டர்களுக்கும் நல்ல வித்தியாசம் காட்டியுள்ளார். உருவத்திலும், நடிப்பிலும் வித்தியாசம் தெரிகிறது.

இரு கேரக்டர்களில் வேல் கேரக்டர்தான் சூப்பராக வந்திருக்கிறது. அடித்து அதகளம் செய்திருக்கிறார் சூர்யா. உருவத்தில் பெரிய அளவில் கெட் அப் சேஞ்ச் இல்லாவிட்டாலும் கூட பாடி லாங்குவேஜிலும், வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் சூர்யா.

கஜினிக்குப் பிறகு சூர்யா, ஆசின் ஜோடி வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. ஆசினின் அழகு நடிப்பும், அழகுத் தோற்றமும் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளது.

சோடா புட்டி கண்ணாடியுடன் வரும் ஆசின், படு அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் சிலிர்க்க வைக்கிறார்.

வடிவேலு வழக்கம் போல வெளுத்துக் கட்டியிருக்கிறார். படத்திற்கு இவரது காமெடி மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. வடிவேலு வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலை சீறிப் பாய்கிறது. குறிப்பாக டீக்கடை காமெடியில், வடிவேலு வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

வழக்கமான வில்லனாக கலாபவன் மணி. வழக்கம் போல காட்டுக் கத்தல் கத்துகிறார். வழக்கம் போல ஹீரோவிடம் அடியும் வாங்குகிறார்.

லட்சுமி, ராஜ்கபூர், சரண்ராஜ் ஆகியோருக்கு நிறைவான பாத்திரங்கள். திறம்பட நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், சுவிட்சர்லாந்து கனவுப் பாட்டு, கஜினியை நினைவுபடுத்துகிறது. இசையில் வேறு விசேஷம் இல்லை.

படம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை விறுவிறுப்பாக போகிறது. தனக்குத் தெரிந்த பாதையில் கதையைக் கொண்டு போயிருக்கிறார் ஹரி. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வழக்கம் போல திறமையாக திரைக்கதையை கையாண்டுள்ளார்.

வேல் - ஹரிக்கு இன்னொரு சாமி!

Read more about: asin, surya, vel

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil