»   »  வேலையில்லா பட்டதாரி 2 விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி 2 விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக், சரண்யா

ஒளிப்பதிவு: சமீர் தஹீர்

இசை: ஷான் ரோல்டன், அனிருத் (தீம் இசை மட்டும்)

தயாரிப்பு: கலைப்புலி தாணு, தனுஷ்

இயக்கம்: சௌந்தர்யா ரஜினிகாந்த்

ஒரு பெரிய வெற்றிப் படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது மகா கடினமான வேலை. என்னதான் நன்றாக எடுத்தாலும், 'முதல் பாகம் போல இல்லையே' என போகிற போக்கில் காலை இழுத்துவிடுவார்கள். அதிலும் இயக்குநர் ஒரு பெண் என்றால் கேட்கவே வேண்டாம். இதையெல்லாம் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார்களா சௌந்தர்யாவும் தனுஷும்..? வாங்க பாக்கலாம்!

Veleiyilla Pattathari 2 review

குடிசை மாற்று வாரியத்துக்காக சிறந்த குடியிருப்பைக் கட்டிக் கொடுத்ததற்காக (முதல் பாக தொடர்ச்சி) இந்தியாவின் சிறந்த பொறியாளர் விருது பெறுகிறார் தனுஷ். அவரை தனது நிறுவனத்தில் வேலைக்கு அழைக்கிறார் கோடீஸ்வர முதலாளியான கஜோல். தனுஷும் வருகிறார், வேலைக்கு அல்ல. வேண்டாம் என்று சொல்வதற்கு. சில கஷ்டங்களுக்குப் பிறகு தானே சொந்த நிறுவனம் ஆரம்பிக்கிறார். விஷயம் கேள்விப்படும் கஜோல், தனது ஈகோவை விட்டுக் கொடுக்க முடியாமல் அதைச் சிதைக்கிறார் கஜோல். ஒரு பெருமழை நாள் கஜோல் சொன்னதாகக் கூறி ஒரு ரவுடிக் கூட்டமே தனுஷைத் தாக்குகிறது. அவர்களை அடித்துத் துவைத்துவிட்டு, நேராக கஜோல் வீட்டுக்குப் போகிறார் தனுஷ். அங்கு என்ன நடந்தது? இருவரின் பகை எப்படி முடிவுக்கு வந்தது என்பதுதான் மீதி.

முதல் பாகத்தின் தொடர்ச்சி எதுவும் மிஸ்ஸாகிவிடக் கூடாது என மெனக் கெட்டிருக்கிறார் இயக்குநர் சௌந்தர்யா. குறிப்பாக சரண்யா பாத்திரத்தை அமைத்த விதம்.

அதேபோல 2015 பெருமழையை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன், அந்த மதத்துக்காரன், இந்த மதத்துக்காரன், மேல் சாதி, கீழ் சாதி எனப் பேசியவன் அத்தனை பேரையும் ஓடவிட்ட மழையை வைத்தே க்ளைமாக்ஸை இயல்பாக, பாஸிடிவாக அமைத்திருப்பது ரொம்பவே இதமாக இருந்தது.

Veleiyilla Pattathari 2 review

பொதுவாக இந்த மாதிரி கதைகளில் நண்பன் தொழிலில் கூட்டாளியாக வருவான். ஒரு கட்டத்தில் எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகி, துரோகியாகிவிடுவான். இந்தப் படத்திலும் தனுஷின் பார்ட்னராக வரும் பாலாஜி மோகன் அப்படி மாறுவதற்கான சூழல் வருகிறது. ஆனால் அதை நேர்மறையாக மாற்றி இருப்பது மகிழ்வைத் தருகிறது.

நடிப்பில் தனுஷுக்கு புதுதாக சான்றிதழ் தர ஒன்றுமில்லை. பிரித்து மேய்ந்துவிட்டார். அதுவும் சண்டைக் காட்சிகளில்... இத்தனை ஒல்லி உடம்பை வைத்துக் கொண்டு, அவர் நூறுபேரைப் புரட்டி எடுத்தாலும் நம்புகிற மாதிரி இருப்பதுதான் அவரது பலம். குடித்துவிட்டு வந்து மனைவி அமலா பாலிடம் சிக்கித் திணறும் காட்சிகளில் அத்தனை எதார்த்தம்.

ரொம்ப ஹோம்லியான அமலா பால். தனுஷுக்கு நிகராக அவரும் கலக்கியிருக்கிறார். அவரது வீடும் தனுஷ் வீடும் பக்கத்திலேயே இருப்பதை வைத்து சுவாரஸ்யமாக காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாத்திரம் கஜோல். அந்த அறிமுகக் காட்சியே அசத்தல். கம்பீரமாகச் செய்திருக்கிறார். ஆனால் முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி எட்டிப் பார்க்கிறது.

சமுத்திரக்கனி, சரண்யா வழக்கம்போல மனசில் இடம் பிடிக்கிறார்கள்.

Veleiyilla Pattathari 2 review

படத்துக்கு பெரும் பலம் விவேக்கின் நகைச்சுவை. இந்தப் படத்திலும் மைன்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே உளறும் ஒரு சுவாரஸ்யக் காட்சி உண்டு. நண்பனாக வரும் பாலாஜி மோகனும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

முதல் பாதி கலகலப்பு ப்ளஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுவென செல்கிறது. இரண்டாம் பாதியிலும் போரடிக்கிற காட்சிகள் என எதுவும் இல்லை. ஆனால் கஜோல் - தனுஷ் அந்த ஓரிரவு காட்சிதான் அழுத்தமில்லாமல் போகிறது. அது ஒன்று மட்டும்தான் இந்தப் படத்தின் குறை.

இன்னொன்னு ஷான் ரோல்டனின் இசை. இறைவி பாடல் ஓகே. ஆனால் பின்னணி இசையின் ஒருபகுதியை அனிருத்திடம் இரவல் வாங்கியிருக்கிறார்கள். அது ஒரு குறையாகவே தெரிகிறது. அனல் அரசுவின் ஸ்டன்ட், சமீர் தஹீரின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். குறிப்பாக அந்த மழைக் காட்சிகள். எது சிஜி, எது நிஜம் என்பதே தெரியவில்லை.

மூன்றாம் பாகத்துக்கான குறிப்போடு இரண்டாம் பாகத்தை முடித்திருக்கிறார்கள். ஒரு வித்தியாசமான களத்தோடு மீண்டும் வாங்க விஐபி!

English summary
Oneindia's Review of Dhanush - Amala Paul - Kajol starring, Soundarya Rajinikanth's directorial Velaiyilla Pattathari 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil