»   »  'விதி மதி உல்டா' - படம் எப்படி? #VidhiMadhiUltaaReview

'விதி மதி உல்டா' - படம் எப்படி? #VidhiMadhiUltaaReview

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டென்ட் விஜய் பாலாஜி இயக்கத்தில் 'டார்லிங் 2' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்றாயன், கு.ஞானசம்பந்தன் ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'விதி மதி உல்டா'. இந்த வருடத்தின் தமிழ் சினிமா கணக்கைத் துவக்கி வைத்திருக்கும் இந்தப் படம் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறதா?

செமையாக நடிக்கும் ஹீரோ, விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் காமெடி, திரும்பத் திரும்ப முணுமுணுக்கவைக்கும் பாடல்கள், செம ஸ்கிரீன்ப்ளே, ஆங்காங்கே ட்விஸ்ட் வைத்து ரசிக்கவைக்கும் காட்சிகள், யூகிக்கவே முடியாத திருப்பங்கள், மெர்சல் கிளைமாக்ஸ், ரசிகர்களின் கைதட்டல் என இந்த வருட சினிமாவை மிரட்டலாகத் துவங்கி இருக்கிறது இந்தப் படம் எனச் சொல்ல ஆசைதான். ஆனால், படத்தி டைட்டிலைப் போலவே அப்படியே உல்டா.

Vidhi madhi ultaa movie Review

வேலைக்குப் போகாமல் வீட்டில், திட்டு வாங்கிக்கொண்டிருக்கும் ஹீரோ ரமீஸ் ராஜா, அந்தப்பக்கம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாமல் காலேஜ் போகும் ஹீரோயின் ஜனனி ஐயர். ஹீரோ ரமீஸ் ராஜா எதிர்பாராமல் சந்திக்கும் ஜனனி ஐயர் மீது காதல் கொள்கிறார். அவருக்கு சில உதவிகளைச் செய்து இம்ப்ரெஸ் செய்து காதலைப் பதிய வைக்கிறார். அவரும் காதலை ஏற்றுக்கொள்ள, இவர்கள் இருவரையும் தனித்தனியாக இரண்டு கும்பல் வெவ்வேறு காரணங்களுக்காகக் கடத்திவிடுகிறார்கள். அந்தக் கடத்தல் கும்பல் பிரச்னையில் இவர்கள் இருவரையும் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். இவர்கள் தப்பிக்க முயற்சிக்கும்போது, தாதாவான டேனியல் பாலாஜியின் ஒரே தம்பி எதிர்பாராமல் இறந்து விடுகிறார். தம்பியின் சாவுக்குக் காரணமானவர்களின் குடும்பத்தை மொத்தமாகத் தீர்த்துக் கட்ட நினைக்கும் டேனியல் பாலாஜி, ஜனனி ஐயர் குடும்பத்தினரையும், ரமீஸ் ராஜாவின் குடும்பத்தினரையும் வீடு புகுந்து கொல்கிறார். ரமீஸ் ராஜாவை மட்டும் இந்த வேதனையை அனுபவிப்பதற்காக உயிரோடு விடுகிறார்.

இங்கே ஒரு பெரிய ட்விஸ்ட், இது எல்லாமே கனவு. லேப்டாப்பில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஹீரோ அப்படியே தூங்கிப்போக, அந்த கேப்பில் தான் இத்தனை களேபரமும். அதன் பிறகு, கனவில் நடந்தது நிஜமாகவே ஒவ்வொன்றாக நடைபெறத் துவங்குகிறது. டேனியல் பாலாஜி தம்பி உயிரையும், தன் குடும்பத்தினர் உயிரையும் காப்பாற்ற ஹீரோ முயற்சி செய்கிறார். அதற்காக, கனவில் வந்த சம்பவங்களை நினைவுபடுத்தி ஒவ்வொன்றாக மாற்றுகிறார். ஆனால், விதி அவரை விட்டதா, அதைத் தடுக்க ஹீரோ செய்தது என்ன என்பதுதான் படம். தன்னோடு தொடர்புடையவர்களுக்கு நாளை நடக்கப்போகும் அனைத்தும் முன்கூட்டியே ஒருவருக்குத் தெரிந்துவிட்டால் ஆபத்தில் இருந்து காப்பதற்காக அவர் என்னென்ன விஷயங்களைக் கையாளுவார் என்பதுதான் இன்டர்வெல்லுக்குப் பின்பான பாதிக்கதை.

கோவிலில் சாமியார் ஒருவர் தன்னம்பிக்கைக்காகச் சொல்லும் வார்த்தையான காணும் கனவு பலிக்கும் என்பதையே லாஜிக்காக காட்டி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தி பெரிய குறை த்ரில்லராகச் செல்ல வேண்டிய இடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் மேலோட்டமாகப் பயணிப்பது தான். படத்தில் அது மட்டும்தான் குறையா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். காமெடியாக எடுத்திருக்கிறார்களா என்றால், அதிலும் புதிதாக ஒன்றும் இல்லை. கருணாகரன், சென்றாயன் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் சிலர் இருந்தாலும் அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே படுகிறது.

இன்டர்வெல் வரை செல்லும் படத்தில் ட்விஸ்ட் வெளிப்பட்டதும், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆவலை படம் உண்டாக்கவில்லை. காமெடி, த்ரில் என எந்த உணர்வையும் வலிமையாக உருவாக்காமல் மேலோட்டமாகவே செல்வது செம போர். கருணாகரன் ஏற்கெனவே பார்த்த படங்களின் தோற்றம் மற்றும் நடிப்பை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார். ஆள் பேச்சில் மட்டும் மிரட்டிக் கொண்டிருப்பார்; உள்ளே ஒன்றும் இருக்காது என்கிற மாதிரியான அதே டுபாக்கூர் தாதா கேரக்டர் சென்றாயனுக்கு. டேனியல் பாலாஜியின் கேரக்டர் கனமில்லாததால் நடிப்பை வேஸ்ட் செய்யாமல் லைட்டாக காட்டியிருக்கிறார். படத்தின் கடைசியில் ஓடும் ப்ளூப்பர்ஸ் வீடியோவில் நடித்த அளவிற்குக் கூட படத்தில் யாரும் நடித்திராததுதான் மைனஸ்.

அஷ்வின் விநாயகமூர்த்தி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். போர் அடிக்கும் திரைக்கதையில் பின்னணி இசை மட்டுமே பார்வையாளர்களுக்குத் தூக்கம் வராமல் தடுப்பதற்காகப் பயன்பட்டிருக்கிறது. கேட்பதற்கு இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தாலும், படத்தில் தேவையில்லாததாகவே வந்திருக்கிறது. இந்தக் கதையில் டூயட் தேவையில்லாதபோதே கிட்டத்தட்ட பாடல்களையும் டூயட்டாகவே வைத்திருக்கிறார் இயக்குநர். தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒருவரே என்பதால் இப்படி ஸ்பெஷல் பாடல்களோ என்னவோ?

இன்டர்வெல் ட்வீஸ்ட்டுக்கு பிறகு ரசிகர்களை ஃப்ரெஷ்ஷாக உட்கார வைத்துவிட்டு, பின்னால் அதைப் பயன்படுத்தத் தவறி இருக்கிறார் இயக்குநர். ஹீரோ ரமீஸ் ராஜா எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த ஒரே ரியாக்‌ஷனை தான் காட்டுகிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங்கில் குறை சொல்ல முடியாவிட்டாலும், ரசிகர்களைக் கட்டிப்போடத் தவறி இருக்கிறது 'விதி மதி உல்டா'. ஆக, படத்தின் ரிசல்ட்டும் உல்டாவாக வந்திருக்கிறது.

English summary
Read 'Vidhi madhi ultaa' movie review here. Rameez Raja, Janani Iyer, Daniel Balaji, Karunakaran starred 'Vidhi madhi ultaa' film directed by Vijay Balaji. 'Vidhi madhi ultaa' is a comedy thriller movie. Read full review here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X