»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சின்னக்கோளாறுபட்டி, நல்லமனநாயக்கனூர் கிராமங்களுக்கிடையே நீண்ட நாள் பகை. சின்னகோளாறுபட்டியைச் சேர்ந்தவிருமாண்டியின் (கமல்) பம்ப் செட் நிலத்தை வாங்க அதே ஊரைச் சேர்ந்த கொத்தாளத் தேவரும் (பசுபதி),நல்லமனநாயக்கனூரைச் சேர்ந்த நல்லம நாயக்கரும் (நெப்போலியன்) முயற்சிக்கிறார்கள்.

இதனையடுத்து நேரும் கொலைகளும். பழிவாங்கலும்தான் கதை. திரைக்கதையமைப்பில் நெருப்பும் பற்றிக் கொள்ளும் வேகம்இருப்பதால், கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக படம் நகர்கிறது.

படத்தில் கமல், பசுபதி, அபிராமி மூவரும் சேர்ந்து நடிப்புத் திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள். திமிர்ந்த உடல், முறுக்கிய மீசை,மடக்கி விடப்பட்ட சட்டை, நக்கல் பேச்சு என நிஜ சண்டியராகவே வலம் வருகிறார் கமல்.

கமலுக்கு இணையாக, சில இடங்களில் கமலைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு, வில்லனாக வரும் பசுபதி பட்டையைக்கிளப்பியிருக்கிறார். அபிராமிக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனை. அன்னலட்சுமியாகவே வாழ்ந்திருக்கிறார். கட்டாய மணம்செய்து வைக்கப்படும் காட்சியில் கலங்கடிக்கிறார். இந்தப் படம் மூலம் கிடைத்த பெயரை அடுத்த படங்களில் காப்பாற்றவேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.

கமலும், அபிராமியும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் முத்தச் சத்தம். பின்னணி இசை, பாடல்களில் இளையராஜா ஜொலிக்கிறார்.படம் முழுவதும் தனது இசைத் தோரணங்களைக் கட்டி, அழகு கூட்டியிருக்கிறார். முக்கியமாக கமல் - அபிராமி சந்திப்பில்எல்லாம் ஒலிக்கும் பின்னணி இசையில் ஒரு ஜீலீர்.

தமிழ் சினிமாவில் முதன் முறையாக மூக்காணங்கயிறு இல்லாத மாடுகளுடன் கதாநாயகன் மோதும் நிஜ ஜல்லிக்கட்டு இந்தப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. படைப்பாளியாக கமல், திரைக் கதையமைப்பிலும், வசனத்திலும் கோலோச்சியிருக்கிறார். படம்முழுவதும் மதுரை பக்கத்துக்கு கிண்டல் தமிழ் விளையாடுகிறது.

திரைக் கதையமைப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் புதிது. மூன்று தளங்களில் திரைக்கதை நகர்கிறது. கொத்தாளத்தேவரின்பார்வை, விருமாண்டியின் பார்வை என்ற தளத்திலும், ரசிகர்களின் பார்வை என்ற மூன்று வித்தியாசமான தளங்களில் கதைபயணிக்கிறது. ஒவ்வொரு பார்வையிலும் கதைமாந்தர்களின் வேறுபட்ட முகங்கள் வெளிப்படுகின்றன.

இதே போன்ற முயற்சி சிவாஜி நடித்த அந்த நாள் என்ற படத்தில் கையாளப்பட்டிருக்கிறது.

படத்தில் சின்னச் சின்ன குறைகள். டப்பிங் இல்லாமல் வசனங்கள் அனைத்தும் நேரிடையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.இதனால் சில இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்பது புரிய வில்லை. குறிப்பாக ஜல்லிக்கட்டு காட்சியில் வெறும் கூச்சல்தான்கேட்கிறது.

ஜல்லிக்கட்டு முடிந்ததும் ஆரம்பிக்கும், கொம்புல பூவைச் சுத்தி என்ற பாடலில் வெற்றிக் களிப்பை அப்படியே, அற்புதமாககொண்டு வந்திருக்கிறார் இளையராஜா. படத்தில் பாடலை பாதியிலேயே முடிப்பது ஏனோ?

பொதுவாக கமலின் படங்களில் அழுத்தமான க்ளைமாக்ஸ் இருக்கும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். க்ளைமாக்ஸில் மரணதண்டனை கூடாது என்று ரோகிணியும், மாலனும் (பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தனும் இருக்கிறார்) பேசுவது, மனித உரிமைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பேட்டியைப் பார்ப்பதுபோல் அழுத்தமில்லாமல் இருக்கிறது.

வன்முறை அதிகமே. படம் முடிந்ததும், யாராவது கையை தூக்கினால் அறுவாளை உருவுவது போல பிரமை வருகிறது.

காரமான ஆக்ஷன் பொங்கல் விருந்து வைத்திருக்கிறார் கமல். போய் சாப்பிடலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil