»   »  விழித்திரு விமர்சனம்

விழித்திரு விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிகர்கள்: விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தன்ஷிகா, எரிகா, தம்பி ராமய்யா, அபிநயா
ஒளிப்பதிவு: விஜய் மில்டன்
இசை: சத்யன் மகாலிங்கம்
தயாரிப்பு: இயக்கம்: மீரா கதிரவன்

ஒரு நாளின் 12 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் நான்கு கதைகள்தான் விழித்திரு படம்.

ஓட்டு அரசியலுக்காக சாதிக் கலவரத்தைத் தூண்டி, அந்த தடயத்தை வைத்திருக்கும் பத்திரிகையாளரை மிரட்டி கொல்கிறது அதிகார வர்க்கம். அதற்கு சாட்சியாக இருக்கும் டிரைவர் கிருஷ்ணாவையும் கொல்ல போலீஸ் துணையுடன் விரட்டுகிறார்கள். கிருஷ்ணா தப்பித்து சென்னை நகர் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

Vizhithiru Review

திருட வந்த வீட்டுக்குள், இருட்டறையில் திருமண கோலத்தில் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கும் தன்ஷிகாவை ஒரு டீல் போட்டுக் காப்பாற்றுகிறார் விதார்த். வெளியில் வந்த பிறகுதான் தெரிகிறது, விதார்த்தை விட பெரிய கேடி தன்ஷிகா என்பது. திருடிய பணத்தில் விதார்த் பங்கு கேட்க, அதைத் தர மறுத்து பையுடன் தன்ஷிகா தப்பிக்கப் பார்க்க, என கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொலைந்து போன நாயை, கண் தெரியாத அப்பா வெங்கட் பிரபுவுடன் பிடிவாதமாக தேடுகிறாள் சிறுமி சாரா. ஒரு கொடிய கும்பலின் கைகளில் சிக்கி, மயிரிழையில் தப்பித்து ஓடுகிறாள் சாரா.

விக்ரம் விஸ்வநாத் என்ற பணக்கார இளைஞன் தன் பிறந்த நாளை கொண்டாட நட்சத்திர விடுதியில் நண்பர்களுடன் தங்குகிறான். அங்கே ஒரு அழகியைப் பார்க்கிறான். பார்த்த மாத்திரத்தில் அவளை அடைய விரும்பி, நேராகப் போய் விருப்பத்தைச் சொல்கிறான். "இந்த இரவில் புதுச்சேரி வரை ஒரு பயணம் போகலாம். அதற்குள் என்னை நீ கவர்ந்தால், உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்," என அவள் சொல்ல, சம்மதித்து கிளம்புகிறார்கள். ஆனால் சில நிமிடங்களிலேயே வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு சம்பவங்களை எதிர்கொள்கிறான்.

இந்த நான்கு கதைகளின் பாத்திரங்களும் ஒரு புள்ளியில் எப்படி இணைகிறார்கள்? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

Vizhithiru Review

வித்தியாசமான முயற்சிதான். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு அதை படமாக வெளிக் கொணர்ந்திருக்கும் இயக்குநர், தயாரிப்பாளர் மீரா கதிரவனைப் பாராட்ட வேண்டும். கமர்ஷியல், க்ளாஸ் இரண்டையுமே பக்காவாகக் கலந்திருக்கிறார்.

முத்துக்குமார், திலீபன் என கிடைத்த இடத்திலெல்லாம் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை இயக்குநர்.

நான்கு தனித் தனிக் கதைகளாக படம் தொடங்கும்போது, கதைகளுக்குள் ஒன்ற சற்று நேரம் பிடித்தாலும், இடைவேளையின்போது, அடுத்து என்ன? என நாற்காலியின் நுனிக்கு வரவைத்திருக்கிறார் மீரா கதிரவன்.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் நல்ல வேகம். வேகத் தடையாய் அந்த டி ராஜேந்தர் பாட்டு.

பிரதான பாத்திரங்களில் தோன்றும் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, அந்த விக்ரம் விஷ்வநாத்.. நால்வருமே வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக விதார்த் இறுதிக் காட்சியில் கலங்க வைக்கிறார். வெங்கட் பிரபுவின் அந்த ஆக்ஷன் காட்சி செம்ம. ஒரு நாய்க் குட்டிக்காக இந்த பொண்ணு இப்படி பிடிவாதம் பிடிக்கணுமா என ஒரு கட்டத்தில் எரிச்சல் வந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த நாய்க்குட்டியின் அவசியம் புரிகிறது.

தன்ஷிகா, எரிகா, அபிநயா என மூன்று நாயகிகள் இருந்தும் துளியூண்டு கூட காதல் காட்சி கிடையாது. ஆனால் அப்படி எதுவும் இல்லாமலேயே சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்க முடியும் என காட்டியிருக்கிறார்கள்.

தம்பி ராமய்யா, அந்த வில்லன் நாகேந்திர பாபு, சுதா சந்திரன் என அத்தனை பேரும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்துள்ளனர்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் இரவு நேரத்துச் சென்னையின் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்க முடிகிறது. சத்யன் மகாலிங்கத்தின் பின்னணி இசை படத்துக்கு இன்னொரு பலம்.

நான்கு கதைகளிலும் சமூக அக்கறையும், மனிதாபிமானமும் மிக இயல்பாக இழையோடுவதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

English summary
Meera Kathiravan's Vizhithiru is a must watch movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos