For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'அர்ஜூனன் காதலி'

  By Staff
  |
  Poorna with Jay
  பார்த்தி பாஸ்கர்... முதல் படமே பம்பரக் கண்ணாலே என ஹிட் கொடுத்து கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். இப்போது அர்ஜூன்ன் காதலியைத் துரத்திக் கொண்டிருக்கிரார். தப்பா நினைக்காதீங்க... அர்ஜூனன் காதலி என்பது அவரது அடுத்த படைப்புக்குத் தலைப்பு!

  அர்ஜூனன் காதலி அழகாய் வளரும் விதம் குறித்த இயக்குநர் பார்த்தி பாஸ்கர் இப்படிக் கூறுகையில்,

  "அர்ஜுனன் காதலின்னு டைட்டில் வெச்சாச்சு. அர்ஜுனனை வணங்காமல் ஆரம்பிக்க முடியுமா? தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் அர்ஜுனர் கோவில் இருக்கோ, அங்கெல்லாம் போய் அவருக்கு பூஜை பண்ணிட்டுதான் ஷூட்டிங்கிற்கே போனேன்" என்கிறார் பய பக்தியுடன். (அடிப்படையில் இவர் சித்தர்களை வணங்குகிறவராம்!!)

  குற்றாலத்தில் படப்பிடிப்பு. படர்கிற பனியும், சிலிர்க்கிற சாரலும் நிறைந்த ஏரியா அல்லவா? படப்பிடிப்புக்கு வருவதற்கு சில மணி நேரம் தாமதம் காட்டினார்களாம் ஹீரோ ஜெய்யும், ஹீரோயின் பூர்ணாவும்.

  'சீக்கிரம் வாங்க' என்று கடிந்து கொள்வதை விட, சாதுர்யமாக பேசி வரவழைப்பதே முறை என்று நினைத்தவர், "யார் முதலில் படப்பிடிப்புக்கு வர்றாங்களோ, அவங்களுக்கு ஸ்பாட்டிலேயே 500 ரூபாய் பரிசு" என்றாராம். அவ்வளவுதான், யூனிட்டிற்கு முன்னால் பரிசும், கைதட்டலும் வாங்குவதற்கு இருவருக்கும் இடையே பலத்த போட்டி! பிறகென்ன, சரியான நேரத்தில் விறுவிறுவென்று படப்பிடிப்பை நடத்தினார் பார்த்தி.

  கம்போசிங்கிற்காக பாண்டிச்சேரி போயிருந்தார்களாம். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுடன் கடற்கரைக்கு போய்விட்டார் பார்த்தி பாஸ்கர். இரவு பதினொரு மணிக்கு மேல் அங்கே உட்கார்ந்து கீபோர்டில் ட்யூன் போட, கூட்டம் கூடிவிட்டதாம். அந்த ராத்திரியிலும் ஆட்டோகிராப் கேட்டு அடம் பிடித்ததாம் ஜனம். நள்ளிரவில் பீச்சில் கூடிய கூட்டம் பற்றி போலீஸ் வரைக்கும் தகவல் போக, திமுதிமுவென்று வந்திறங்கினார்கள் காவலர்கள்.

  ஸ்ரீகாந்த் தேவாவை பார்த்தவர்கள், "நீங்கதானா? ரூமிற்கு போயி வாசிக்க கூடாதா?" என்று அட்வைஸ் பண்ணிவிட்டு போனார்களாம். இப்படி ரகளையும் ஜாலியுமாக போய் கொண்டிருக்கிறது அர்ஜுனன் காதலி.

  ஜெய், பூர்ணா தவிர படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளை மதுரை ஏரியாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து கண்டு பிடித்திருக்கிறார் பார்த்தி பாஸ்கர். அவர்களுக்கு நடிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது.

  காதல், சுப்ரமணியபுரம் வரிசையில் அர்ஜுனன் காதலியும் ஒரு யதார்த்தமான படமாகவும், வெற்றிப்படமாகவும் இருக்கும் என்கிறார் நம்பிக்கையோடு!

  காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை தயாரித்த சிவசக்தி பாண்டியனின் எஸ்.எஸ்.மூவிமேக்கர்ஸ் தயாரிக்கும் படம் இது.

  "நம்பினா நம்புங்க... என்னோட ஆர்வத்தை பார்த்து ஒரே ஒரு வரி கதையை மட்டும் கேட்டு இத்தனை கோடி ரூபாயை இறைச்சிருக்கார் எங்க தயாரிப்பாளர். மறுபடியும் ஒரு காதல் கோட்டையை கட்ட தனது நம்பிக்கையையே முதல் கல்லா எடுத்து வச்சிருக்காரு தயாரிப்பாளர்" என்கிறார் பார்த்தி.

  அழகிய கோட்டைக்கு அஸ்திவாரமே அந்த முதல் கல்தானே!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X