twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடிக்கிற பேரு ஞாபகம் இருக்கு... மருந்து பேரு ஞாபகம் இல்‌லையே...! -பஞ்ச் வைக்கும் இயக்குனர்!

    By Chakra
    |

    Director Ramki
    ப்ரியமுடன், நிலாவே வா, என்றென்றும் காதல், பெரியண்ணா, சாக்லேட் ,தோஸ்து, பூப்பறிக்க வருகிறோம், தம், திருடா திருடி, கிங், பகவதி, ஏய் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் ராம்கி. தற்போது 'நானும் என் காதலும்' என்ற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் பிரமோஷன் ஆகியிருக்கிறார். ஜாதகம், கடவுள் நம்பிக்கை, உழைப்பு இவற்றை மக்கள் எப்படி குழப்பிக் கொள்கிறார்கள் என்பதை மையமாக கொண்டது இப்படத்தின் கதை.

    முழுக்க முழுக்க சென்னையில் நடக்கிற கதைதான் என்றாலும், க்ளைமாக்ஸ் மட்டும் திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறுகிறதாம். இதுவரை இந்த கோவிலை இவ்வளவு விரிவாக பக்தி படத்தில் கூட காட்டியிருக்க மாட்டார்கள். என் படத்தில் காட்டியிருக்கிறேன் என்கிற ராம்கி, அறநிலையத்துறையின் பர்மிஷனுக்காகவே மாதக்கணக்கில் காத்திருந்தாராம். பதினெட்டு வருஷம் கழித்து இப்போதுதான் இந்த கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதித்திருக்கிறது அறநிலையத்துறை.

    ஆனந்த் என்ற புதுமுகத்தையும் ஸ்வேதா என்ற எம்பிஏ மாணவியையும் இப்படத்தில் ஜோடியாக்கியிருக்கிறார் ராம்கி. காதல் வழியும் திரைக்கதையில் சமுதாயத்தை சிந்திக்க வைக்கிற கேள்விகளுக்கும் பஞ்சமில்லையாம். வரிசையாக 55 வகையான மது பாட்டில்களின் பெயர்களை ஒப்புவிக்கும் ஹீரோ, "குடிக்கிற ஐட்டங்களின் பேர் நமக்கு ஞாபகம் இருக்கு. ஆனால் உயிர் காக்கும் மருந்தின் பேர் ஒண்ணாவது தெரிஞ்சு வச்சுருக்கோமா" என்று கேட்கிற காட்சியில் தியேட்டரில் கைதட்டல் நிச்சயம் என்கிறார் ராம்கி.

    இப்படத்தில் இன்னொரு காட்சியும் புதுசு என்கிறார் அவரே. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் இரண்டு இளம் பெண்கள் கட்டிப்புரண்டு சண்டை போடுகிற காட்சிதான் அது. பொதுவாக ஸ்டண்ட் காட்சியில் கனத்த உடம்புடன் ஃபைட்டர்கள் சண்டை போடுவார்கள். ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டும் என்று இரண்டு பெண்களை அவருடன் சண்டை போட வைத்தேன். அதுவும் கட்டிப்புரண்டு உருண்டு தாக்குகிற காட்சி அது. இதற்கு ரசிகர்கள் விசிலடிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம் என்றார்.

    பாடல் காட்சிகளில் கிராபிக்ஸ்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், உண்மையான பூ வயல்களை தேடி கண்டுபிடித்து இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறாராம். வாடாமல்லி, சாமந்தி, சூரிய காந்தி, கொண்டைப்பூ, என ஒரு பாடல் முழுவதும் கிராபிக்ஸ் இல்லாமலே இயற்கையான கலர்களின் சங்கமத்தில் உருவாகியிருக்கிறது அந்த பாடல். இதற்காக வெளிநாடு போகவில்லை அவர். இதோ கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிற போடிநாயக்கனூரிலேயே படம் பிடித்திருக்கிறார். "பூ ஒன்று மோதியதே.. என் இதயத்தில் வேராய் ஊறியதே" என்பதுதான் இந்த பாடலுக்கான பல்லவி. இதை ராம்கியே எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

    "ஓரத்துல ஓரத்துல உட்காந்து பேசணும். ஒரு தரம் ஒரு தரம் அனுமதி தருவியா..." என்ற பாடலை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடியிருக்கிறார். இவருடன் நாட்டுப்புற பாடகர் ஜெயமூர்த்தி இணைந்து பாடியிருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மரியா மனோகர். முப்பது நாட்கள் ரீரெக்கார்டிங்குக்கு மட்டும் செலவிட்டாராம் இசையமைப்பாளர்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X