twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் படப்பிடிப்பால் பெரும் தொல்லை- கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங்குக்குத் தடை

    By Staff
    |

    Rajanikanth with Aishwarya Rai
    சென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை.

    ஆனால் நேற்று கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் நடந்த எந்திரன் ஷூட்டிங்கால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

    கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தை முடக்கி விட்டனர் எந்திரன் படக்குழுவினர். விமான நிலையம் உள்ள மிக முக்கியமான சாலையில், அதிலும் சென்னை மாநகரின் நுழைவுப் பகுதியி்ல் மேம்பாலத்தை அடைத்துக் கொண்டு பல மணி நேரம் நடந்த படப்பிடிப்பால் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.

    விமானத்தைப் பிடிக்க விரைந்தோரின் நிலைதான் மிகவும் மோசம். கிடைத்த வழியில் புகுந்து போகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    இதில் டூவீலர்கள், கிடைத்த கேப்பில் செல்ல முயன்றபோது, போலீஸ் உடையில் நின்றிருந்த எந்திரன் பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களைத் திட்டி நிறுத்தியதையும் காண முடிந்தது. இதனால் மக்கள் பெரும் கொதிப்பும், கோபமும் அடைந்தனர். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை அவர்களுக்கு.

    எந்திரன் படப்பிடிப்பால் மக்கள் பட்ட அவதிகள் இன்று அரசின் காதுகளை எட்டியுள்ளது. இதையடுத்து கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நகர பகுதிகளில் பொதுவாக இரவு நேரங்களில்தான் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் எந்திரன் படப்பிடிப்புக்கு பகல் நேரம் அனுமதி வழங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து கத்திப்பாரா மேம்பாலத்தில் பகலில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில்,

    சென்னை நகருக்குள் படப்பிடிப்பு நடத்த விதிமுறைகள் உள்ளன. இனிமேல் புறநகரிலும் அது அமல்படுத்தப்படும். கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பகலில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    பல மணி நேரம் போக்குவரத்து பாதித்து மக்கள் அவதிப்பட்ட போதிலும் இதுவரை இயக்குநர் ஷங்கரோ, நடிகர் ரஜினியோ இதற்காக மக்களிடம் ஒரு வருத்தம் கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X