விநாயகர் சதுர்த்திக்கு ஏற்ற டைட்டில்.. அருண் விஜய் நடிக்கும் ’யானை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படத்திற்கு யானை என்கிற அட்டகாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பாலிவும் இயக்குநர் அனுராக் காஷ்யாப் முதல் கோலிவுட் இயக்குநர் சேரன் வரை பல சினிமா பிரபலங்கள் தற்போது இந்த படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் நடுவே 'யானை' என்கிற டைட்டிலை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் இயக்குநர் ஹரி ஈர்த்துள்ளார்.

அருவா இல்லை
சாமி, சிங்கம், வேல், ஐயா, ஆறு என பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா இணைந்து அருவா எனும் படத்தில் நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், திடீரென என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அருவா படம் அப்படியே டிராப் ஆனது. அந்த கதையில் தான் அருண் விஜய் நடிக்கிறாரா? என்கிற கேள்வியும் இந்த படத்தின் டைட்டிலும் அருவாவாக இருக்குமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

யானை
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பிள்ளையார் சுழி போட்டு மீண்டும் சினிமா படங்கள், சினிமா பட அறிவிப்புகள் என எல்லாம் வெளியாக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், யானை என விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் பொருத்தமான டைட்டில் வெளியாகி இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

அசத்தும் அருண் விஜய்
தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் விக்டராக நடித்து மிரட்டிய அருண் விஜய் தொடர்ந்து பல தரமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தடம் பதித்துள்ளார். ஏகப்பட்ட பெரிய படங்களில் நடித்து வரும் அருண் விஜய் நடிப்பில் யானை படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு அடிபட்டு இருந்த நிலையிலும் பயங்கர சண்டை காட்சிகளில் நடித்திருந்தார்.

பிரியா பவானி சங்கர்
சூர்யாவை போலவே அருவா படத்தில் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட ராஷி கன்னாவும் மாற்றப்பட்டு அருண் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கோலிவுட்டில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மாஃபியா படத்தை தொடர்ந்து மீண்டும் அருண் விஜய்க்கு இந்த படத்தில் ஜோடியாகி உள்ளார்.

பிரபலங்கள் ரிலீஸ்
பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் முதல் கோலிவுட் இயக்குநரான சேரன் வரை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அருண் விஜய்யின் யானை படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். கையில் அருவா உடன் ஒரு போஸ்டர், கையில் விநாயகர் சிலையை வைத்துக் கொண்டு ஒரு போஸ்டர், மாலையும் கையுமாக ஒரு போஸ்டர் என பல போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

படப்பிடிப்பில்
அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை என்பதை அறிவிக்கும் விதமாக படப்பிடிப்பில் என்கிற கேப்ஷன் போஸ்டர்களுடன் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











