»   »  பாலாவும், 100 பிச்சைக்காரர்களும்!

பாலாவும், 100 பிச்சைக்காரர்களும்!

Subscribe to Oneindia Tamil

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்துக்காக ஏகப்பட்ட ஆடை, அணிகலன்கள், கேடயம், வாள் என புராண காலத்து வேடம் பூண்டு சிரமப்பட்டு நடித்து வரும் வடிவேலு, இத்தனையையும் சுமக்க வைத்து அதிக காட்சிகளை ஷூட் செய்ததால் படத்தின் இயக்குநர் தம்பி ராமையாவிடம் ஊடல் கொண்டுள்ளாராம்.

நான் கடவுள் படத்தில் ஆர்யா-கார்த்திகா நடித்து வருகிறார்கள். இதில் நடிப்பதற்காகவே மெனக்கெட்டு ஆர்யா நீண்ட காலமாக சடை போன்று முடியை வளர்த்துள்ளார்.

படு வித்தியாசமாகவே யோசிக்கும் பாலா, நான் கடவுள் படத்தில் நிஜமான பிச்சைக்காரர்களை நடிக்க வைத்து அசத்தியுள்ளார்.

சில கேரக்டர்களுக்கு சரியான கலைஞர்கள் கிடைப்பது ரொம்பவே சிரமமான விஷயமாக இருக்கும். இதனாலேயே பல படங்கள் படு தாமதமாக வளர்ந்து வெளியாகியுள்ளன.

பாலாவுக்கும் இப்படி ஒரு இம்சை எழுந்தது - நான் கடவுள் படத்தில். படத்தில் 100 பிச்சைக்காரர்கள் இடம்பெறுவது காட்சி உள்ளதாம். இந்தக் காட்சியில் நடிக்க பிச்சைக்காரர்களாக யாரைப் போடலாம் என யோசித்துள்ளார் பாலா.

துணை நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் தத்ரூபமாக இருக்குமா என்ற கேள்வி பாலா மனதில் எழுந்தது. அடுத்த நிமிடமே அவருக்கு ஒரு யோசனை வந்தது.

நிஜமான பிச்சைக்காரர்களையே நடிக்க வைத்தால் என்ன என்று யோசித்த அவர் தனது உதவியாளர்களைக் கூப்பிட்டார்.

அந்தக் கால சினிமாக்களில் வில்லன் கூறுவது போல நீ இந்தப் பக்கம் போ, நீ அந்தப் பக்கம் போ, நீ எந்தப் பக்கமாவது போ. எல்லோரும் போய் நல்ல பிச்சைக்காரர்களாக 100 பேரை அள்ளிட்டு வாங்க என்று உத்தரவிட்டார்.

அவ்வளவுதான், அம்பெனப் பறந்த உதவியாளர்கள் கோவில், தெரு முனை உள்பட பிச்சைக்காரர்கள் எங்கெல்லாம் இருப்பார்களோ அங்கெல்லாம் போய், நல்ல, தரமான பிச்சைக்காரர்களாகப் பார்த்து அள்ளிக் கொண்டு வந்து பாலாவிடம் ஒப்படைத்தனர்.

தன் முன் நிறுத்தப்பட்ட பிச்சைக்காரர்களைப் பார்த்த பாலா, அவர்களிலிருந்து 100 பேரைத் தேர்வு செய்து இன்று முதல் நீங்கள் நடிகர்கள் என்று கூறி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதையடுத்து அந்தப் பிச்சைக்காரர்களுக்கு சம்பளம் பேசப்பட்டது. மாசம் ரூ. 2500 சம்பளம், தினசரி சாப்பாடு இலவசம், அவ்வப்போது டீ, காபி, பிஸ்கட் எல்லாம் தரப்படும். என்ன ஓ.கே.வா என்று பாலா பிச்சைக்காரரர்களிடம் கேட்க, மவராசா, நல்லா இருய்யா, நல்லா இருய்யா என்று பிச்சைக்காரர்கள் வாயார வாழ்த்தி டீலுக்கு ஓ.கே. சொல்லியுள்ளனர்.

அப்புறம் என்ன, பிச்சைக்காரர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படு ஜூட்டாக சுட்டுக் கொண்டிருக்கிறார் பாலா. நிஜ பிச்சைக்காரர்களுடன் பரதேசிக் கோலத்தில் ஹீரோ ஆர்யா நடித்துக் கொண்டுள்ளார்.

நிஜ கேரக்டர்களை படங்களில் நடிக்க வைப்பது பாலாவுக்கு புதிதல்ல. பிதாமகன் படத்தில் சூர்யா, சிம்ரன் ஆடிப் பாடும் பாடல் காட்சியில் நிஜமான கோவில் பூசாரியையே ஆடிப் பாட வைத்து அசத்தினார்.

அந்தப் பூசாரிக்கு பெரியகுளம் பக்கம், சிம்ரன் பூசாரி என்றுதான் செல்லப் பெயர். சிலர் சிம்ஸ் என்று கூட அவரை ரொம்பச் செல்லமாக அழைத்து மகிழ்கிறார்களாம்.

இப்போது பெரியகுளம் அருகே உள்ள எழிலார்ந்த கும்பக்கரை அருவிப் பக்கம் படிப்பிடிப்பு நடந்து கொண்டுள்ளது. அதுதவிர தென்கரை பாலசுப்ரமணியசுவாமி கோவில் பக்கமும் சில காட்சிகளை எடுக்கிறார் பாலா.

கும்பக்கரை பக்கம் நக்சலைட் வேட்டைக்காக கமாண்டோ படையினர் முகாமிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் பாலா இப்போது ஷூட்டிங்குக்காக முகாமிட்டுள்ளதால் மக்கள் வர ஆரம்பித்துள்ளனராம்.

நடிகைகளின் நேவலை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என சினிமாக்காரர்களில் சிலர் யோசித்துக் கொண்டிருக்க, இப்படி பாலா மட்டும் நாவலாகவே யோசிப்பதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறதோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil