»   »  சிக்கெடுக்கப்பட்ட பரட்டை!

சிக்கெடுக்கப்பட்ட பரட்டை!

Subscribe to Oneindia Tamil

பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்கள் தீர்ந்து விட்டதாம். தனுஷுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்து விடுவதாக தயாரிப்பாளர் கேயாரும், டப்பிங் பேசுகிறேன் என தனுஷும் சம்மதித்து விட்டார்களாம்.

கேயார் தயாரிப்பில், சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில், தனுஷ், மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான படம் பரட்டை என்கிற அழகுசுந்தரம். கன்னடத்தில் வெளியான ஜோகிதான் பரட்டையாக தமிழுக்கு வந்துள்ளது.

படம் முடிவடைந்த நிலையில், கேயார் தனக்கு சம்பளப் பாக்கி வைத்திருப்பதாக தனுஷ் புகார் கூறினார். ஆனால் இதை மறுத்தார் கேயார். பின்னர் சமரசம் பேசினர்.

பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் தனுஷ், கேயார் மீது புகார் கூறினார். சமரசப் பேச்சின்போது ஒப்புக் கொண்டபடி பாக்கித் தொகையை கேயார் தரவில்லை. ஆனால் வேறு ஒருவரை டப்பிங் பேச வைத்து படத்தை வெளியிடத் திட்டமிடுகிறார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று திடீரென நீதிமன்றத்தையும் அணுகினார் தனுஷ். அந்த மனுவில், எனக்கு சம்பளப் பாக்கி இருப்பதால் அதை கேயார் கொடுக்கும் வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

தனுஷ் கோர்ட்டுக்குப் போனதும் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தனித் தனியாக கூடிப் பேசின. இறுதியில் நேற்று நள்ளிரவுவாக்கில் சமரசத் தீர்வு எட்டப்பட்டது.

தனுஷுக்குத் தர வேண்டிய தொகையை தந்து விடுவதாக கேயார் ஒப்புக் கொண்டார். இதையடுத்து டப்பிங் பேச வருவதாக தனுஷும் ஒத்துக் கொண்டார். இதன் மூலம் பரட்டைக்கு வந்த பிரச்சினை முடிந்து விட்டது.

ஏப்ரல் 27ம் தேதி படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. 120 பிரிண்டுகள் போட்டுள்ளதாக படத் தயாரிப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil