»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

வந்து விட்டது தீபாவளி. பட்டாசு வெடிக்க பல பல கட்டுப்பாடுகள் இருக்கையில், வெள்ளித் திரையைக் கலக்க வருகின்றன ஊசிப் பட்டாசு முதல் அணுகுண்டுவரை.

கமலஹாசனின் ஆளவந்தான், விஜயகாந்த்தின் தவசி, விஜய்யின் ஷாஜகான், சூர்யாவின் நந்தா, பிரசாந்த்தின் மஜ்னு, பிரபுதேவாவின் மனதைத் திருடி விட்டாய், ரஞ்சித்தின்நெருப்பூ என திரைப் பட்டாசுகள் பலரகங்களில் ரசிக உள்ளங்களில் மத்தாப்பு கொளுத்த வருகின்றன.

இந்தப் படங்களைப் பற்றிய முன்னோட்டத்தைப் பார்க்கலாமா?

ஆளவந்தான் .. அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் சூப்பர் ஆக்டர் கமல்ஹாசனின் படம். பட தயாரிப்பு துவங்கியது முதலே, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்ஆளவந்தான், கமல் ஹாசனின் சொந்தக் கதையான தாயத்தின் மறு பதிப்பு. 20+ வருடங்களுக்கு முன்பு கமல் இதயம் பேசுகிறது இதழில் எழுதிய தாயம்என்ற தொடர் கதைக்கு இப்போது உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு கமல்கள். இரண்டு ஜோடிகள். சங்கர் மகாதேவனின் வித்தியாசமான இசை. கலைப்புலி தாணுவின் தாராள செலவில் தங்க காகிதத்தில் சுற்றிரசிகர்கள் முன்பு படைக்கப் போகிறார்கள் இந்த விருந்தை.

தித்திப்பும், திடுக் திடுக்கும் நிறைந்த இந்தப் படத்தின் கதை அரசல், புரசலாக வெளியாகி விட்ட போதிலும், கமல் என்ற மூன்றெழுத்து மந்திரம் இந்தப்படத்தில் செய்திருக்கும் ஜாலங்கள், அதற்கு துணையாக கிராபிக்ஸ் கலக்கல்கள் என மொத்தப் படமே மனதுக்குள் விர்ரென்று ஒரு மின்சார ரீங்காரத்தைஏற்படுத்தி விட்டுள்ளது.

ஆளவந்தான் என்ற பெயரிலேயே ஆளுமை அடங்கி விட்டதால் அத்தனை படங்களையும் இவன் ஓரம்கட்டி ஆளுவானா என்பது அடுத்த சில நாட்களில்தெரிந்துவிடும்.

நந்தா .

. ஆளவந்தானுக்குப் பிறகு அடுத்த எதிர்பார்ப்புப் படம் நந்தா. சேதுவுக்குப் பிறகு பாலாவின் இரண்டாவது படம். சூர்யாவுக்கு மிக முக்கியமானபடம்.

வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா வருகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையை இந்தப் படத்தில் பாலா அலசியிருக்கிறார் என்று காற்றுவாக்கில்செய்திகள் டெங்கு போல பரவிக் கொண்டிருக்கின்றன.

வேட்டியை தொடை தெரியத் தூக்கிக் க(ா)ட்டியவாறே பல படங்களில் வந்து கொண்டிருந்த ராஜ்கிரண் மிக வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். சிவாஜிகணேசன் நடித்திருக்க வேண்டிய கேரக்டர். ஆனால் இதுகுறித்து பாலா லூஸ் டாக் விட்டு விட்டதால் நடிகர் திலகம் நடிக்க மறுத்திடவே, ராஜ்கிரன் குரோர்பதிஆனார். வில்லனாக வருகிறாராம்.

படத்தின் கதையைக் கேட்ட இளையராஜா, இந்தப் படம் மிகவும் வித்தியாசமான படம். வளரும் இளைஞரான யுவன் சங்கர் ராஜாவுக்கு மிகவும் தீனி போடக்கூடிய படம். உங்களுக்கு மீண்டும் ஒரு திருப்பத்தையும், யுவனுக்கு திரையுலகில் ஒரு தனி இடத்தையும் தரக் கூடிய இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையுவனுக்கே கொடுங்கள் என பரிந்துரை செய்தாராம்.

ஹீரோ, ஹீரோயின்களை நம்பாமல் கதையை மட்டும் நம்பி களத்தில் இறங்கும் பாலா, நந்தா மூலம் திரையுலக பெருங்கடலில் மீண்டும் நங்கூரம் பாய்ச்சி நிற்பார்என்ற நம்பிக்கையுடன் படத்தை எதிர்பார்க்கலாம்.

தவசி ..

மீண்டும் ஒரு கிராமத்து கெட்டப்பில் கேப்டன் விஜயகாந்த். இரண்டு கேப்டன்கள், ஜெயசுதா, செளந்தர்யா என இரண்டு துணை கேப்டன்கள்.

அரசியலுக்கு வர அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருக்கும் விஜயகாந்த் இந்தப்படத்தில் தனது அரசியல் பன்ச் வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் என்றுகூறிக் கொள்கிறார்கள்.

நின்னா நின்ன இடம் நிச்சயமாா ஜெயிப்பாரு என்று ஒரு பாடல் வரி வருகிறதாம். எதற்காக அது என்று தெரியவில்லை. எதை மனதில் வைத்து இந்த வரிபுனையப்பட்டுள்ளது என்றும் புரியவில்லை. படத்தைப் பார்த்து விட்டு புரிந்து கொள்வோம்.

நல்ல கிராமத்துக் கதையை மீண்டும் பார்க்க விஜயகாந்த் வாய்ப்பு அளிப்பார் என்று நம்பி தியேட்டருக்குப் போவோம்.

ஷாஜகான் ...

பத்ரி சறுக்கி விட்டு விட்டதால், கொஞ்சம் கவனத்துடன் ஷாஜகானாக வருகிறார் விஜய். வழக்கம் போல இதுவும் ஒரு ரீமேக்தான்.தெலுங்கில் வெற்றி வாகை சூடிய படத்தை தமிழில் கொண்டு வருகிறார் ஆர்.பி.செளத்ரி.

சூப்பர் குட் பிலிம்ஸின் படம் எதுவும் சோடை போனதில்லை (ஒரு அது அஜீத் படம், சமீபத்தில் வந்த சமுத்திரம் தவிர). அந்த வரிசையில்ஷாஜகானும் சேரும் என்று நம்பலாம்.

ஹீரோயின் ரிச்சா. ரொம்ப ரிச்சான அழகு, அசர வைக்கும் உயரம், அட்டகாசமான கண்கள் என விஜய்யை விட ரொம்பவே பேசப்படப்போகும் ஹீரோயின். நல்லா டான்ஸ் ஆடியிருக்கிறாராம்

மணி ஷர்மாவின் பாட்டுக்கள் இப்போதே பட்டிதொட்டியெங்கும் பரசவப்படுத்தி வருகின்றன.

கதை என்ன என்று மட்டும் கேட்க வேண்டாம், கொஞ்ச காலத்திற்கு முன் காதலே இல்லாமல் காதலிப்பது, பார்க்காமல் காதலிப்பது,பார்த்தபின் பிரிவது, காதலித்த பின் நண்பர்களாகவது, காதலித்தும், காதலிக்காதது போல நடித்து கடைசியில் உயிரை விடுவது என எல்லாவகைக் காதல்களும் தமிழ சினிமாவை ஆக்கிரமித்தன. அது போல இதுவும் ஒரு வித்தியாசமான காதல் கதை என்று மட்டும் இப்போதைக்குமனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜாலியாக என்ஜாய் பண்ணிவிட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டு தியேட்டருக்குப் போகலாம்.

மஜ்னு


.. பிரசாந்த்தின் இன்னொரு படம். பாடல்கள் ரொம்ப காலத்திற்கு முன்பே ரிலீசாகி விட்டன. படம் தீபாவளிக்கு வருகிறது.

மின்னலே படத்தில் மின்சாரப் பாய்ச்சல் பாய்ந்த ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் ஒருமுறை இசையால் ரசிகர்களை வாட்ட வருகிறார். சிலபாடல்கள் சிறகடிக்க வைக்கின்றன. ஆனால் வைரத்துவின் வரிகளைக் கையாள்வதில் சில இடங்களில் தடுமாறியிருக்கிறார் ஹாரிஸ்(ரஹ்மானிடம் டியூஷன் போகலாமே சார்!).

ஆக்ரோஷமான ஆக்ஷன் ஹீரோவாக வருகிறாராம் பிரசாந்த். காதல் கவிதை என்ற படத்தைத் தயாரித்த டாக்டர் முரளி மனோகரின்தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் காதலைக் கவிதை போல சொல்லியிருக்கிறார்களாம்.

பிரசாந்த்தின் சமீபத்திய ஹிட் என்று பார்த்தேன் ரசித்தேன் படத்தை மட்டுமே சொல்ல முடிகிறது. அதற்குப் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படம் எதுவும் வரவில்லை. ஸ்டார் கூட ரஹ்மானுக்காகதான் (தக்ஷக் இந்திப் படத்தின் டியூன்களை எடுத்து தமிழுக்காகவருடிக் கொடுத்தார் ரஹ்மான்) ஓடியது எனலாம்.

மஜ்னு மூலம் பிரசாந்த்துக்கு பல லைலாக்கள் கிடைத்தால் சரி.

மனதைத் திருடி விட்டாய்

அட்டகாசமான டான்ஸ்கள் மூலம் இப்போதே ரசிக மகா ஜனங்களின் மனதில் மேடை போட்டு விட்டார் காயத்ரி ஜெயராம். படம் எப்பப்பாவரும் என்று ஒரு குரூப் கடலையைத் தின்று கொண்டு தியேட்டர்கள் பக்கம் பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கதையை விடுங்கள், பிரபுதேவாவின் ஸ்பிரிங் டான்ஸ் மூவ்மென்ட்கள், காயத்ரி ஜெயராமின் கலங்க வைக்கும் கவர்ச்சி, யுவன் சங்கர்ராஜாவின் இளமை துள்ளும் மியூசிக் என பல அற்புதமான அம்சங்கள் (கதையைக் கேட்காதீர்கள் சார்) படத்தில் இருக்கிறதாம்.

தீபாவளி ரசிகர்களின் மனதைத் திருடுமா என்பது போகப் போகத் தெரியும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil