For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பெரிய திரையில் காட்டப்படும் நம் ஊர்கள்!

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  நம்மூரோடு தொடர்புடைய படங்கள் நமக்குச் சிறப்பான இனிமையான நினைவுகளைக் கிளறுபவை. நாம் அதிகம் பயின்று வாழும் இடங்களைக் காண்பிக்கும் படங்கள் என்பதால் அவை மனத்துக்கு நெருக்கமாகி விடுகின்றன. நமது மண்ணில் நின்று வளர்ந்து வாழ்ந்த இடங்களைப் பெரிய திரையில் காணும்போது இனம்புரியாத உள்ளக் கிளுகிளுப்பு தோன்றுவது இயற்கைதான். இதோ பார் என் ஊர், என் மக்கள், நான் நின்ற இடம் என்னும் பேருணர்ச்சி அது.

  மதுரையில் எடுக்கப்படும் படங்கள் அவ்வூரார்க்கு உறவுப் படங்களைப் போன்ற உணர்ச்சியைத்தான் தோற்றுவிக்கும். அதே உணர்ச்சிதான் பிறவூர்களில் எடுக்கப்பட்ட படங்களால் பிறவூரார்க்கும் ஏற்படும். ஆனால், சென்னையர்க்கு அதேயளவு பற்றுணர்ச்சி தோன்றுமா என்று தெரியவில்லை. எந்நேரமும் அவ்வூரார்க்கு நடுவில் எண்ணற்ற படங்கள் எடுக்கப்பட்டுவிட்டமையால் "சரிதான்பா" என்று எளிதில் கடந்துவிடுவார்கள். அங்கே மீண்டும் மீண்டும் படங்கள் எடுக்கப்படுவதால் அவ்வூரார்க்கு வேடிக்கைச் சலிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், எங்களைப் போன்ற தமிழகத்தின் பிற பகுதியினர்க்கு எம்மூரைத் திரையில் பார்ப்பது பேருவகை தருவது. பார்த்த நொடியில் வியப்புக் கூக்குரல் எழுப்பியதுமுண்டு. அருகில் அமர்ந்திருப்போர்க்கும் அது தெரியும் என்றாலும் பாய்ந்து திரும்பி அவரைப் பிறாண்டி "அங்க பாரு... நம்மூரப் பார்த்தியா..." என்போம்.

  Our own villages in big screens

  நான் முதன்முதலில் எம்மூரான திருப்பூரைப் பார்த்தது 'சின்ன தம்பி பெரிய தம்பி' என்ற திரைப்படத்தில்தான். அத்திரைப்படம் திருப்பூரிலும் எடுக்கப்பட்டது. இங்குள்ள பின்னலாடை நிறுவனமொன்றில் அதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அந்நிறுவனம் இருந்த சாலையின் வழியாகச் செல்லக்கூட முடியவில்லை. முன்னதாக ஊரின் முதன்மைச் சாலைகளில் பிரபு, சத்யராஜ், நதியா ஆகியோர் திறவையான சீருந்துகளில் நிற்கவைப்பட்டவாறு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இருமருங்கும் கூடியிருந்த மக்கள் அவர்களைப் பார்த்து உற்சாகமான கூக்குரல்களை எழுப்ப அந்நடிகர்கள் கைகாட்டி வணங்கியபடி சென்றார்கள்.

  சின்ன தம்பி பெரிய தம்பி திரைப்படம் வெளியானபோதுதான் ஓர் உண்மை வெளிப்பட்டது. திரைப்படத்தில் அந்நிறுவனத்தின் முதலாளி கீழ்மையானவராகக் காட்டப்பட்டார். பணத்துக்கு வேட்கைகொண்டு நிச்சயப்பெண்ணைக் கைவிடுபவராகவும் ஆனால், ஒருநாள் படுக்கைக்கு வேண்டுபவராகவும் காட்சிகள் இருந்தன. ஊரின் புகழ்பெற்ற பின்னலாடை நிறுவனத்திற்குள் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் இவ்வாறு காட்டப்பட்டதை எங்கள் ஊரார் மகிழ்ந்தேற்கவில்லை. அதன்பிறகு அந்நிறுவனத்திற்கும் திரைப்படத் தயாரிப்பாளர்க்கும் உறவு தொடர்ந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. நம் வீட்டில், நம் தோட்டத்தில் படமாக்க வருபவர்கள் நம்மை எவ்வாறு காட்டப்போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. படத்தில் எங்களூர்ப் பெயர் பன்முறை உரையாடலில் இடம்பெற்றதுதான் நாங்கள் அடைந்த செவியின்பம்.

  திருப்பூரில் எப்போதும் ஏதேனுமொரு திரைப்படக் குழு உலவியபடியே இருக்கும். ஆனால், படப்பிடிப்பை இங்கே நடத்தாமல் ஊர்க்கருகிலுள்ள கோபி, பொள்ளாச்சி ஆகிய இயற்கை எழிலூர்களுக்கு இடம்பெயர்ந்துவிடுவார்கள். முன்னிரவில் இருப்பூர்திக்குக் காத்திருக்கும் கூட்டத்தில் பிரபு, குஷ்புவைப் பார்த்ததாக ஒருமுறை ஊரே பேசிக்கொண்டது.

  Our own villages in big screens

  அடுத்ததாக இங்கே நடந்த படப்பிடிப்பொன்று ஊரையே ஓரிடத்தில் குவித்துவிட்டது. பாலு ஆனந்த் என்பவரின் இயக்கத்தில் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்த படம் அது. நான் படித்த பள்ளியான நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் அப்படப்பிடிப்புக் குழுவின் வண்டிகள், பன்னாள்கள் நின்றுகொண்டிருந்தன. பள்ளி வளாகத்தில் படம்பிடித்திருக்கிறார்கள். எங்களூர்க்குக் குறுக்காகச் செல்லும் இருப்புப் பாதையைக் கடக்க ஒரேயொரு மேம்பாலம்தான் உருப்படியாக இருக்கிறது. அம்மேம்பாலத்தையொட்டியே நகர மண்டபம் இருக்கிறது. அப்படப்பிடிப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றபோது மேம்பாலம் முழுக்க ஊர்மக்கள் திரண்டு நிறைத்துவிட்டார்கள். போக்குவரத்து கெட்டது. மக்களை அகற்றுவது இயலாத செயல் என்றாகிவிட படப்பிடிப்புக் குழுவை அகற்றினார்கள் என்று நினைவு. அத்திரைப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ஒருவாறு வெளியானது. நம்மூரில் படமாக்கப்பட்டது என்ற உவப்போடு படத்தைக் காணச் சென்றேன். நான் கோவிலாகக் கருதும் எங்கள் பள்ளியைச் சிறை வளாகமாகக் காட்டியிருந்தார்கள். பள்ளிப்பெயர் தோன்றிய இடத்தில் 'மத்திய சிறைச்சாலை' என்று காட்டப்பட்டது. அது எனக்கு மிகுந்த ஏமாற்றம்.

  மம்மூட்டி நடித்த 'மக்கள் ஆட்சி' என்ற படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பும் இங்கேதான் நடந்தது. புதிதாய் அரசியல் கட்சியைத் தொடங்கும் நாயகன் முதல் தேர்தலில் வாக்கு சேகரிப்பதாக ஒரு காட்சி. அது திருப்பூர்ச் சாலைகளில் படமாக்கப்பட்டது. ஆர்.கே. செல்வமணிதான் இயக்குநர். செல்வமணியைப் படமியக்கும் கோலத்தில் பார்த்துவிட்டு வந்த நண்பர்கள் "என்னங்க இது... டைரக்டர் மாதிரியே இல்ல... புழுதில புரண்டுட்டு வந்த மாதிரி இருக்காப்ல..." என்றார்கள். படத்தை இயக்கும் இயக்குநர் படப்பிடிப்புத் தளத்தில் அப்படித்தான் இருப்பார்.

  மம்மூட்டியும் ரோஜாவும் திறந்த வண்டியில் வாக்கு சேகரிப்பதைப்போல் ஊர்வலம் வருகையில் வழக்கம்போல் ஊரே திரண்டுவிட்டது. என் அலுவலகக் கட்டடத்திற்கு எதிரேயும் ஊர்வலக் கூட்டம் நின்றது. எங்கள் கட்டட மேல்தளத்தில் ஓர் ஒளிப்பதிவாளர் ஓடிப்போய் ஏறி மேற்கோணக் காட்சியைப் படம்பிடித்தார். இதுவரைக்கும் எவ்வோர் அரசியல் கட்சியின் ஊர்வலத்துக்கும் அந்தக் கூட்டம் திரண்டதில்லை. ஊரின் பெருவிடுதியான வேலன் விடுதியில் உட்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டன. மக்கள் ஆட்சி திரைப்படம் வெளிவந்தபோது ஆர்வத்தோடு சென்று பார்த்தேன். படத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவாய் இடம்பெறும் அந்தக் காட்சிக்குத்தானா ஊரையே புரட்டிப் போட்டார்கள் ? "அடப்பாவிகளா..." என்று தோன்றியது. அவ்வொருநாள் போக்குவரத்து நெரிசலில் இவ்வூர் பட்ட பாடு சொல்லுந்தரமன்று. பொது இடங்களில் படப்பிடிப்புக்கு இசைவு மறுக்கப்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று அடித்துக் கூறுவேன்.

  மக்கள் ஆட்சி படப்பிடிப்பு நிகழ்ந்த காலம்தான் இவ்வூருக்குத் திரைப்பட மயக்கம் கொடுமுடியில் இருந்த காலம். அதன்பிறகு தொலைக்காட்சி வாய்க்கால்கள் பல்கிப் பெருகின. குறுந்தட்டுக் கடைகள் மிகுந்தன. எங்களூரின் ஒரே பொழுதுபோக்கான திரைப்படக் கவர்ச்சியிலிருந்து மெல்ல விடுபடத் தொடங்கினோம். பின்னொருநாள் வாசு இயக்கத்தில் சத்தியராஜ் நடித்த 'பொண்ணு வீட்டுக்காரன்' படத்தின் படப்பிடிப்பும் இங்கே அதே பெருவிடுதியில் நடந்தது. மதிற்சுவரை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சிறு கூட்டத்தை "அட ஒதுங்குங்கப்பா..." என்று விலக்கியபடி நாங்கள் கடந்து போனோம்.

  அண்மையில் இளைய நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த பாகன் என்ற படத்தின் படப்பிடிப்பும் இவ்வூர்த் தெருக்களில் நடந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், இவ்வூரார் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. நான் அலுவலகம் செல்லும் வழியில் குறுக்கே இருட்கூடாரம் அமைத்து எடுப்புச் சுடுவுகளைச் சிறுதிரையில் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நடிகர்கள் சூரியும் ராஜேந்திரநாத்தும் ஒரு மிதியுந்து (மொபெட்) வண்டியில் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். "அட நீயா ?" என்பதுபோல் அவர்களை ஒரே பார்வையில் நாங்கள் தவிர்த்துச் சென்றுவிட்டோம். இதன்பொருள் தமிழகத்து நகரங்கள் திரைப்பட மயக்கங்களிலிருந்து, திரைப்பட நாயகக் கனவுகளிலிருந்து நன்கு விடுபட்டுவிட்டன என்பதே.

  திருப்பூரை ஒரு திரைப்படம் காட்டுகிறது, ஆனால் அந்தத் திரைப்படம் திருப்பூரின் ஆயிரம் இன்ப துன்பங்களில் ஒன்றைக்கூடக் காட்ட முற்படவில்லை. இந்தப் போலிப் பொய்ம்முகத்தால்தான் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. யார்க்கும் தொடர்பில்லாத ஏதோவொன்றைக் காட்டிக்கொண்டிருந்தால், நமக்குத்தான் தொடர்பில்லையே என்று பார்வையாளர்கள் வெளியேறிக்கொண்டேதான் இருப்பார்கள். பிற்காலத்தில் திருப்பூர் என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியானது. திருப்பூர்க்காரர்கள் வழக்கம்போல் கண்டுகொள்ளவில்லை.

  English summary
  Till late nineties people crazy in watching outdoor shootings. But now they just like passed the shooting spots without any interest.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X