»   »  அதியமானின் ரம்யா அவஸ்தை!

அதியமானின் ரம்யா அவஸ்தை!

Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர்கள், இயக்குநர்களால் நடிகைகளுக்கு குடைச்சல்கள் என்று அவ்வப்போது செய்தி வரும். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒரு ஹீரோயினிடம் சிக்கி அவஸ்தைப்பட்டு மீண்டுள்ளார் இயக்குநர் கே.எஸ்.அதியமான்.

தொட்டாச்சிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி உள்ளிட்ட படங்களை இயக்கியவர்தான் அதியமான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதியமான் தூண்டில் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க குத்து ரம்யாவை புக் செய்தார் அதியமான். ஷாம்தான் ஹீரோ. படத்தின் முழு ஷூட்டிங்கும் லண்டன் நகரின் எழிலார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள், சில துணை நடிகர்களைத் தவிர மற்றவர்களை லண்டனிலிருந்து பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து லண்டன் சென்றார். மொத்தமே ஐந்து பேர்தான் லண்டனுக்குச் சென்றனராம். அவர்களில் குத்து ரம்யாவும் ஒருவர்.

அங்கு போன போது தனது விலை உயர்ந்த லேப் டாப் கம்ப்யூட்டர், கூலிங் கிளாஸ் ஆகியவற்ரை தொலைத்து விட்டாராம் ரம்யா. இதனால் அப்செட் ஆன ரம்யா, படப்பிடிப்பின்போது சரியாக ஒத்துழைக்கவில்லையாம்.

மேலும் இவற்றுக்கான நஷ்ட ஈடாக ரூ. 1.30 லட்சம் தந்தே ஆக வேண்டும் என்று அதியமானை அணத்தியுள்ளார். அதிர்ச்சியான அதியமானுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வேறு வழியில்லாமல் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார்.

ரம்யா தொலைத்த கண்ணாடியின் விலை ரூ. 18 ஆயிரமாம். லேப்டாப்பின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரமாம். இந்தக் கணக்கு அதியமானுக்குப் புரியாவிட்டாலும் கூட கேட்டதைக் கொடுத்தாக வேண்டிய நிலையில் இருந்ததால் பணத்தை கொடுத்து அழுதாராம்.

குத்து ரம்யாவால் தான் பட்ட குத்து குறித்து அதியமான் செய்தியாளர்களிடம் நேற்று புலம்பினார். நான் யார் மீதும் புகார் கூற விரும்பவில்லை. அந்த நடிகையால் நான் நிறையவே அவமானப்பட்டு விட்டேன். இப்போது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

படப்பிடிப்புகளின்போது, தயாரிப்பாளரும், இயக்குநரும் என்ன பாடுபடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த நடிகையால் நாங்கள் நிறைய அவஸ்தைப்பட்டு விட்டோம். அவற்றை சொல்லி மாள முடியாது. நிறைய பணத்தையும் தேவையில்லாமல் இழந்து விட்டோம்.

நாங்கள் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்காவிட்டால் அவர் படத்திலிருந்து பாதியிலேயே விலகியிருப்பார். அதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். அதனால்தான் அவர் கேட்டதைக் கொடுக்க வேண்டியதாகி விட்டது என்றார் அதியமான்.

தனது பெயருக்கு முன்பு உள்ள குத்து என்ற பெயருக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை ரம்யா காட்டி விட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil