»   »  டி.என். சேஷன் ராஜ்!

டி.என். சேஷன் ராஜ்!

Subscribe to Oneindia Tamil

அட்டகாச சத்யராஜ், அதிரடி டி.என்.சேஷன் டைப் கேரக்டரில் வம்புச் சண்டை படத்தில் நடித்துள்ளாராம்.

பெரியார் படத்தில் நடித்த பிறகு சத்யராஜ் தான் நடிக்கும் படங்களின் கேரக்டர்களை பார்த்துப் பார்த்து செலக்ட் செய்ய ஆரம்பித்துள்ளார். முன்பு போல லொள்ளு, ஜொள்ளு கேரக்டர்களில் நடிப்பதை கைவிடத் தீர்மானித்துள்ளார்.

இனிமேலாவது நல்ல கேரக்டர்களில் நடிக்கலாமே என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார். பெரியார் படத்திற்கு முன்பே ஒத்துக் கொண்ட வம்புச் சண்டை படத்தில் சூப்பரான கேரக்டரில் நடித்துள்ளார் சத்யராஜ். அதாவது ஒரு காலத்தில் இந்திய அரசியல்வாதிகளுக்கு இனிமா கொடுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் டைப் கேரக்டரில் இப்படத்தில் நடிக்கிறாராம் சத்யராஜ்.

இந்த சேதியை சத்யராஜே வெளியிட்டார். வம்புச்சண்டை படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், வம்புச்சண்டையில், மதிப்புக்குரிய தேர்தல் ஆணையர் கேரக்டரில் நடிக்கிறேன். தேர்தல் முறையில் நிலவும் குழப்பங்கள், குறைபாடுகள், ஊழல்கள் உள்ளிட்டவற்றை அகற்றப் பாடுபடும் தேர்தல் ஆணையராக நடிக்கிறேன்.

இது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை அல்ல. ஆனாலும் பல உண்மைகளைச் சொல்லும் கதை. எதிர்காலத்திலும் இதுபோன்ற அர்த்தப்பூர்வமான கேரக்டர்களிலேயே நடிப்பேன்.

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகும் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தில் சாதாரண விவசாயி கேரக்டரில் நடிக்கிறேன். ஒரு சாதாரண விவசாயி எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை இந்தப் படத்தில் தங்கர் பச்சான் மிக அழகாக காட்டியுள்ளார் என்றார் சத்யராஜ்.

டி.என்.சேஷனை மையமாக்கித்தான் இந்தக் கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறாராம். தெலுங்கு நடிகர் உதய்கிரண், தியா ஆகியோரும் படத்தில் உள்ளனர். இவர்களுக்கு கிளாமர் சைடை ஒதுக்கி விட்டனர். தியா நடிப்பிலும், கிளாமரிலும் பின்னிப் பெடலெடுத்துள்ளாராம்.

இசையமைத்திருப்பவர் டி.இமான். வழக்கம் போல இதிலும் ஒரு ரீமிக்ஸ் பாட்டு வருகிறது. குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற நான் யார் நான் யார் நீ யார் என்ற பிரபலமான தத்துவப் பாட்டை இதில் ரீமிக்ஸ் செய்துள்ளனர். அதில் எம்ஜிஆரின் பரம விசிறியான சத்யராஜே நடித்துள்ளார்.

இந்த நிலையில் புதுமுக இயக்குநர் கிச்சாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள தங்கம் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் சத்யராஜ். அய்யா கையில் இப்போது மொத்தம் 8 படங்கள் இருக்கிறதாம்.

வெங்காயம் என்று யாரும் சொல்லி விடாமல் வெல்டன் என்று சொல்லும் அளவுக்கு நடிச்சீங்கன்னா போதும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil