»   »  விழுந்து மீண்ட ஷாம்

விழுந்து மீண்ட ஷாம்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்கில் நடந்த தூண்டில் படப்பிடிப்பின்போது, நடிகர் ஷாம் பயணித்த படகு கடலில் கவிழ்ந்தது. இதில் கடலில் மூழ்கிய ஷாமும், அவரது நண்பர் சதீஷும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஷாம், சந்தியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் தூண்டில். அதியமான் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்து வருகிறது. பட்டாயா என்ற இடத்திற்கு அருகே உள்ள தீவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதையடுத்து படக் குழுவினர் அங்கு சென்றனர். ஷாம் நடுக் கடலிலிருந்து கரையை நோக்கி படகில் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைப் படமாக்க அனைவரும் தயாராகினர்.

ஷாம் படகில் கரையை நோக்கி வர ஆரம்பித்தார். அவருடன் படகில் உதவியாளர் சதீஷ் உடன் இருந்தார். படகு வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென படகு கவிழ்ந்தது. ஷாமும், சதீஷும் கடலில் மூழ்கினர்.

இந்த சம்பவம் குறித்து மெய் சிலிர்க்க, இன்னும் பயம், பீதி விலகாத நிலையில் விவரித்துள்ளார் ஷாம்.

கோ ஐலண்ட் என்ற தீவில்தான் படப்பிடிப்பு நடந்தது. படகு மூலம் நான் கரையை நோக்கி வருவது போல படமாக்கினர். மொத்தம் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. 2 நாட்கள் நானும், சந்தியாவும் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைப் படமாக்கினர். கடைசி நாளில்தான் இந்த அசம்பாவிதம் நடந்தது.

மாலை 4 மணியளவில் இந்தக் காட்சியைப் படமாக்கினர். முதலில் நான் ஒத்திகை பார்க்க விரும்பினேன். அந்தப் படகு சற்று வித்தியாசமானது (அதாவது பிரியா படத்தில் ரஜினி ஓட்டி வருவது போன்ற, பைக் மாதிரியான படகு).

நானும், எனது உதவியாளரான சதீஷும் ஒத்திகை பார்த்தோம். கரையிலிருந்து சிறிது தூரம் கடலில் ஓட்டிச் சென்றேன். பின்னர் கரைக்குத் திரும்பினோம். அப்போது கடலில் ஏதோ கருப்பாக தெரிந்தது. சரி பாறையாக இருக்கலாம் என கருதி படகைத் திருப்பினேன். அப்போது திடீரென சதீஷ் கடலில் விழுந்து விட்டார். படகும் கவிழ்ந்தது, நானும் கடலில் விழுந்தேன்.

விழுந்த வேகத்தில் வேகமாக உள்ளே இழுக்கப்பட்டேன். கதை முடிந்தது என்று கருதிய நான் எனக்குத் தெரிந்த நீச்சலை வைத்து மெதுவாக கையைக், காலை ஆட்டி மேலே வந்து விட்டேன். எனக்கு சற்று தொலைவில் சதீஷ் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அவரை நோக்கி மெதுவாக நான் நீந்திச் சென்றேன். அதேசமயம், உதவி கோரி குரல் எழுப்பினேன். படப்பிடிப்புக்காக படகைக் கொண்டு வந்த சீனாக்காரர்கள் எங்களது நிலையைப் பார்த்து விட்டு படகில் விரைந்து வந்தனர்.

என்னை அப்படியே அலேக்காக தூக்கி படகில் போட்டனர். சதீஷையும் மீட்டனர். அவரது வாயில் நுரை தள்ளியிபடி இருந்தது. பின்னர் கரைக்குக் கொண்டு வந்து எங்கள் இருவரையும் கரையில் போட்டனர். பின்னர் சதீஷை தலைகுப்புற படுக்க வைத்து சுற்றினர். அப்போது அவரிடமிருந்து லேசான முனகல் வந்தது. இதையடுத்து அவர் உயிருடன் இருப்பதாக கூறினர்.

பின்னர் எங்கள் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். என்னைப் பரிசோதித்த டாக்டர்கள் நான் அதிர்ச்சியில் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் சதீஷ் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.

அதைக் கேட்டதும் நான் கதறி அழுதேன். எனது தந்தை இறந்தபோதுதான் அப்படி அழுதேன். அதன் பிறகு இப்போதுதான் அழுதேன். சதீஷ் பல வருடங்களாக என்னுடன் இருப்பவன். அவனது நிலை குறித்து டாக்டர்கள் கூறியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கிட்டத்தட்ட 6 மணி நேரம் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயிர் பிழைத்தான் சதீஷ். அதன் பிறகுதான் எனக்கு உயிரே வந்தது.

நாங்கள் விழுந்த இடத்தில் யாருமே இதுவரை உயிரோடு மீட்கப்பட்டதில்லையாம். முதல் முறையாக நாங்கள்தான் உயிரோடு மீண்டு வந்ததாக சீனாக்காரர்கள் கூறியபோது எனக்கு பெரும் பீதியாகிப் போய் விட்டது.

2005ம் ஆண்டு ஓசூர் அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தேன். அது மறு பிறப்பு. இப்போது கடலில் விழுந்து மீண்டுள்ளேன். இந்த சம்பவத்தை மறக்கவே முடியாது என்றார் ஷாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil