»   »  படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தல்!

படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

என் தங்கையருள் ஒருவர் அவர். சின்னம்மாவின் மகள். பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டு இல்லத்தரசியாய்த் திகழ்பவர். அவருடைய வெளியுலகத் தொடர்பு கோவில் குளங்களுக்கோ கோடைத் தலங்களுக்கோ செல்வதுதான். நீலகிரி மலை இருப்பூர்தியில் அவரைக் குடும்பத்தினரோடு அழைத்துப் போயிருந்தேன். அப்போது அவர் கேட்டுக்கொண்ட ஒரு விருப்பத்தை இன்றுவரை நிறைவேற்றித் தர முடியவில்லை. "அண்ணா... எங்காவது சினிமா ஷூட்டிங் நடந்தா கூட்டிப் போய்க் காட்டுங்கண்ணா... அதைப் பார்த்ததே இல்ல..." என்பதுதான் அவருடைய வேண்டல்.

அவர் மட்டுமில்லை... நம் அனைவர்க்கும் 'ஷூட்டிங் பார்க்கும் ஆசை' தணியாமல் கனன்றுகொண்டிருப்பதை ஒப்புக்கொள்வோம். 'ஷூட்டிங் பார்க்கும் ஆசையில்' முளைத்தவர்கள்தாம் 'நானே நாயகனாக நடிப்பேன்' என்று இறங்கிக் காணாமல் போவார்கள். நான் பங்கேற்குமாறு அமையும் ஏதேனும் ஒரு படப்பிடிப்பு நம் வட்டாரப் பகுதியில் நடந்தால் அழைத்துச் செல்வதாக என் தங்கையிடம் சொன்னேன். அதைச் சொன்ன நேரமோ என்னவோ தெரியவில்லை, ஒரு படப்பிடிப்புக்கும் இங்கே வழியைக் காணவில்லை.

Shooting spot experience

அவருடைய விருப்பத்தைக் குறை கூறவில்லை. ஆனால், ஒரு படப்பிடிப்புத் தளத்தில் அதற்குத் தொடர்பில்லாத ஒருவர் வேடிக்கைப் பார்த்தால், இரு தரப்பினரும் உடனே களைப்படைவார்கள் என்பதே உண்மை. நம் திரைத்துறை நண்பர்கள் படப்பிடிப்பு இல்லாதபோது தேவ தேவர்களின் மறுபதிப்போ என்பதைப்போல்தான் நடந்துகொள்வார்கள். ஆனால், அவர்களுடைய படப்பிடிப்புத் தளத்தில் முழுமையாய் வேற்றுருவம் பெற்று நிற்பார்கள். நம்மைக் கடித்துக் குதறினாலும் வியப்பதற்கில்லை. ஏனென்றால் அவர்களுடைய தொழிற்சூழல் அப்படி. பணியழுத்தம் நிறைந்த வேலை. வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் சூரியனின் அருள் வேண்டும். வானத்தில் மேகமின்றி இருத்தல் வேண்டும். ஒரு சுடுவை (Shot) எடுத்துக்கொண்டிருக்கும்போது சூரியனை மேகம் சூழ்ந்தால் கெட்டது கதை. எடுத்துக்கொண்டிருக்கும் சுடுவின்போது ஒரு நாய் குறுக்கே ஓடினால் எடுத்தது வீண். இப்படிப் பற்பல தடங்கல்களுக்கும் குறைவில்லாத இடம் வெளிப்புறப் படப்பிடிப்புக் களம். இவற்றுக்கு நடுவே நாம் வேடிக்கை மனிதர்களாய் நின்றுகொண்டிருந்தால் அவர்கள் விழுந்து பிடுங்காமல் இருப்பார்களா... என்ன? அதனால் நமக்கு வேண்டியவர்களைப் படப்பிடிப்புத் தளத்தில் சென்று சந்திக்கவும் கூடாது. படப்பிடிப்பைப் பார்க்கும் ஆசையை வளர்த்துக்கொள்ளவும் கூடாது. இவற்றையெல்லாம் தேன் தொட்ட சொற்களால் என் தங்கையிடம் கூறியிருக்கிறேன்.

திரைப்படம் பார்ப்பதன்மீது எவ்வளவு விருப்பம் ஒருவர்க்கு உண்டோ அதேயளவு விருப்பம் படப்பிடிப்பைப் பார்ப்பதன்மீதும் இருக்கும். பெருந்தொகையான மக்கள் ஈர்ப்பினை ஈட்டிய திரைப்படத்தின் படப்பிடிப்பை வெகுமக்களில் ஒருவர் காண விரும்புகிறார் என்றால் அதற்கு இங்கே எந்த ஏற்பாடும் இல்லை. அதைக்காட்ட வேண்டிய பொறுப்பு திரையுலகினர்க்கு உண்டு. ஆனால், இறுதிவரை அதை மறைபொருளாகவே வைத்துக்கொள்ளப் பார்த்தார்கள். இந்த ஒளிவு மறைவுத் தன்மை ஒன்றுக்கும் உதவாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். முற்காலத்தில் அரங்கிற்குள்ளேயே எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் படங்களின் படப்பிடிப்புகள் மிகுந்த கெடுபிடிகளுக்குட்பட்டே நடந்திருக்கும் என்பதைக் கணிக்க முடிகிறது. தம் படங்களின் படப்பிடிப்பை மக்கள் வேடிக்கை பார்ப்பதை விரும்பாத எண்ணற்ற நடிகர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு ஏற்காட்டு மலையோரம் உதவியிருக்கிறது. அப்போதைய நிலவரப்படி மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகம் ஆளரவமில்லாத மலையடிவாரத்தில்தான் கட்டப்பட்டது. ஆனால், அன்று படப்பிடிப்புகளை வேடிக்கைப் பார்க்க வேண்டும் என்னுமளவுக்கு ஆர்வம் பெருகியிருக்கவில்லை. எப்போது பாரதிராஜா படப்பிடிப்புக் குழுவை அழைத்துக்கொண்டு ஊர்ப்புறத் தெருக்களில் நுழைந்தாரோ அப்போதுதான் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது இயன்றது. மக்களைச் சற்று நேரம் அங்குமிங்கும் பார்க்க வைத்தால் மூன்றாம் நாளிலிருந்து ஒருவரும் பக்கத்தில் வந்து நிற்க மாட்டார்கள். படப்பிடிப்பு வேலை இடையூறு இல்லாமல் நடக்கும்.

Shooting spot experience

சென்னையில் பல்வேறு இடங்களில் சில படப்பிடிப்புகளைப் பார்த்திருக்கிறேன். நான் பள்ளி மேல்நிலை வகுப்பில் பயின்றபோது மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க கோவை மாவட்டத்தின் சார்பாக அனுப்பப்பட்டேன். சென்னை இராசாசி மண்டபத்தில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. அது தமிழகச் சட்டமன்றம் கூடிய கட்டடம். அக்கட்டடத்திற்குள்தான் எனக்கு மாநிலத் தலைநகரில் முதன்முதலாகப் பேசும் வாய்ப்பு கிட்டியது. சென்னைக்கு நான் வந்ததே அதுதான் முதன்முறையும் கூட. என்னைத் தமிழாசிரியர்தான் அழைத்துக்கொண்டு வருவதாக இருந்தார். கடைசி நேரத்தில் அவரால் வர இயலவில்லை. இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து என்னை அவர் நீலகிரி இருப்பூர்தியில் ஏற்றிவிட்டார். என்னிடம் ஒரு நூறு உரூபாய், சென்று சேருமிடமான இராசாசி மண்டப முகவரி, பள்ளித் தொலைபேசி எண் ஆகியன மட்டுமே இருந்தன.

சென்னை நடுவண் நிலையத்தில் வந்திறங்கி இராசாசி மண்டபத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட்டேன். அங்கேதான் விதி விளையாடியது. நான் பேசவேண்டியவற்றை ஓரளவுதான் தயாரித்திருந்தேன். வண்டியில் வந்த களைப்பு வேறு. அப்போது பார்த்து இராசாசி மண்டப வளாகத்தில் விஜயகாந்தின் 'மாநகரக் காவல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. உள்ளே போட்டியாளர்களின் பேச்சு. வெளியே மண்டபத்தைச் சுற்றிலும் படப்பிடிப்புக் களேபரம். என் பேச்சு சரியாக அமையவில்லை. பரிசும் கிடைக்கவில்லை. ஆனால், அந்தத் படப்பிடிப்பை நன்கு வேடிக்கை பார்த்தேன். விஜயகாந்துக்கு மணிக்கணக்கில் முகப்பூச்சு நடைபெற்றதை உடனிருந்து பார்த்தேன். கூட்டத்தை விரட்டு, என்னை மறை என்பதைப்போன்ற எந்த எதிருணர்ச்சியையும் காட்டாதவர் அவர். நம்பியாரோடு கூட்டமாகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்.

என்னுடைய நினைவில் நான் பார்த்த முதல் படப்பிடிப்பு எத்தகைய விரட்டுதலும் இல்லாமல் இனிமையாய் முடிந்தது. எல்லார்க்கும் இப்படி அமையும் என்று கூறுவதற்கில்லை. தள்ளுமுள்ளுகளால் நிறைந்ததுதான் ஒரு நட்சத்திரத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு. அதனால் அணுகாது அகலாது தீக்காய்வதுதான் ஒரு படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கும் முறை என்று சொல்வேன். இப்போது எந்தப் படப்பிடிப்பையும் நேரில் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சி அரங்குகளில் பங்கேற்று வெளியேறிய பிறகு அதன் மயக்கம் தணிந்திருக்கலாம்.

English summary
Poet Magudeswaran's article on watching a shooting spot of Tamil movies

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X