»   »  மீண்டும் இயக்கும் எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் இயக்கும் எஸ்.ஜே.சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிப்பில் சின்னதாக ரவுண்டு கட்டி விட்ட எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

வாலி மூலம் அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத்துக்கும் அந்தப் படம்தான் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து குஷி மூலம் விஜய்க்கு பிரேக் கொடுத்தார். அதற்கு முன்பு வரை தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த விஜய், குஷிக்குப் பிறகுதான் மார்க்கெட் குஷியேறி பெரிய நடிகராக அவதாரம் எடுத்தார்.

இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான படம் நியூ. இப்படத்தில் அஜீத்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென சூர்யாவுக்கே நடிக்கும் ஆசை வந்ததால், அஜீத்திடம் சொல்லி விட்டு அவரே ஹீரோவாக நடித்தார்.

படம் வெளியாகி பல பரபரப்புகளை ஏற்படுத்தினாலும், சக்கை போடு போட்டது வசூலில். நியூ பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி என சூர்யாவின் நடிப்புக் கலக்கல் தொடர்ந்தது.

வெற்றிகரமான இயக்குநராக விளங்கிய அளவுக்கு சிறந்த நடிகராக பெயர் எடுக்க முடியவில்லை சூர்யாவால். அவரது தலைக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் பிளேபாய் இமேஜ்தான் இதற்கு முக்கியக் காரணம்.

இப்போது நடிப்பை விட்டு விட்டு மீண்டும் இயக்கத்திற்குத் திரும்புகிறார் சூர்யா. புலி என்ற பெயரில் தெலுங்கில் புதிய படத்தை இயக்கவுள்ளார் சூர்யா. இப்படத்தில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தக் கதை முதலில் விஜய்க்காக புனையப்பட்டதாகும். இப்படத்தின் கதையை விஜய்யிடம் சூர்யா சொல்ல அவரும் நடிக்க சம்மதித்தார். ஆனால் திடீரென நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார் விஜய். இதற்கு என்ன காரணம் என்று விஜய் தரப்பிலிருந்து சூர்யாவுக்கு தெளிவாக எதுவும் சொல்லப்படவில்லை.

விஜய்யின் போக்கால் கடுப்பாகிப் போன சூர்யா, புலி கதையை ஓரம் கட்டி வைத்தார். இப்போது அந்தக் கதையை தூசு தட்டி எடுத்து தெலுங்குக்குக் கொண்டு போகிறார். தெலுங்கு ரசிகர்களின் டேஸ்டுக்கேற்ப சில மாற்றங்களையும் கதையில் செய்துள்ளாராம்.

அதேபோல தமிழிலும் ஒரு புதுப் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க அஜீத்தைக் கேட்டுள்ளாராம். தற்போது சூர்யா நடித்து வரும் ஒரே படம் பேசும் தெய்வங்கள். குழந்தைகளுக்கான படமாம் இது.

குழந்தைகள் படத்திலும் உங்க வேலைய காட்டிறாதீங்க சூர்யா சார்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil