சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு… கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி, நயன்தாரா!
சென்னை : மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகை சமந்தா சிறந்த நடிகைக்கான விருது வென்றதை 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
நடிகை நயன்தாரா, நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் சமந்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து தமிழில் சூரரை போற்று, சேத்துமான், நஸீர், மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன், இந்தியில் ஷெர்னி உள்பட பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. கொரோனாவால் ஆஸ்திரேலிய எல்லைகள் மூடி உள்ளதால் ஆன்லைன் மூலம் விருது வழங்கும் விழா நடந்தது.

சிறந்த நடிகர் சூர்யா
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரை போற்று படத்துக்கு சிறந்த படத்திற்கான விருதும், அதில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளன. சூரரை போற்று படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இந்த படத்தில் சூர்யா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.

சிறந்த நடிகை சமந்தா
அதேபோல, நடிகை சமந்தா நடித்த 'தி ஃபேமிலி மேன் 2' என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சென்ற ஜூன் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் 'தி ஃபேமிலி மேன் 2' வெப்தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா, சமந்தா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பு தளத்தில், விருது வென்ற சமந்தாவை பாராட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் விஜய்சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் கலந்துகொண்டு சமந்தாவை வெகுவாக பாராட்டினர்.

இணையத்தில் வைரல்
காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோயமுத்தூரில் தொடங்கியது, பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. தற்போது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











