»   »  'காய்ச்சி' எடுத்த கே.ஆர்.ஜி. - 'ஒத்தடம்' கொடுத்த சத்யராஜ்!

'காய்ச்சி' எடுத்த கே.ஆர்.ஜி. - 'ஒத்தடம்' கொடுத்த சத்யராஜ்!

Subscribe to Oneindia Tamil
still from Kangalum Kavipaaduthe Audio Launch

திரைப் பிரபலங்கள் சிலர் சமய சந்தர்ப்பம் தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டு விழிப்பது அவ்வப்போது திரையுலகில் நடப்பது வாடிக்கை. அப்படி புதன்கிழமை நடந்த சம்பவம் இது-

பி.வாசுவின் உதவியாளர் சந்தர் நாத் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான கண்களும் கவிபாடுதே திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன், பிலிம் சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கஸ்தூரிராஜா மற்றும் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டுக்கு முன்பாக நடக்கும் சம்பிரதாய வாழ்த்துத் தெரிவிக்கும் படலம் வந்தது. முதலில் வாழ்த்திப் பேசியவர் கே.ஆர்.ஜி. வயதிலும் அனுபவத்திலும் மூத்த பட அதிபரான அவரை பெரும்பாலும் எல்லாருமே முதலாளி என்றே அழைப்பது வழக்கம்.

இந்த திரையுலகுக்கு வந்த பிறகு தான் 'முதல்' இழந்த முதலாளி ஆன கதையை சுருக்கமாகச் சொன்ன அவர், இனிமேல் படமெடுப்பதை விட்டுவிட்டு ஆ.கே.செல்வமணியிடம் உதவியாளராகச் சேர்ந்துவிடலாமா என யோசிக்கிறேன் என்றார், தமாஷாக.

அடுத்துப் பேச வந்த ரஜினியின் சம்பந்தியும், இயக்குநருமான கஸ்தூரிராஜா இப்படிப் பேசினார்-

இன்றைக்கு 100 படங்கள் நடித்த நடிகர்கள், பணியாற்றிய பல கலைஞர்கள் இருக்கிறார்கள், ஆனால் பத்துப் படங்கள் எடுத்த தயாரிப்பாளர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அந்தளவுக்கு படம் தயாரிப்பது பாதுகாப்பற்றதாகிவிட்டது.

நானே கூட இனி படங்கள் தயாரிப்பதை நிறுத்தி விடும் யோசனையில் உள்ளேன். இந்தப் பிரச்சினைகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஒரு தீர்வு காண வேண்டும் என்றார்.

அடுத்துப் பேச வந்த செல்வமணியும் தயாரிப்பாளர்கள் ரொம்ப கஷ்டப்படுபவதாகவும், அரசின் சலுகைகள் நலிவடைந்தோருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் அரசு புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றெல்லாம் இஷ்டத்துக்குப் பேச, டென்ஷனாகிவிட்டார் ராம நாராயணன்.

காரணம் ஒட்டுமொத்த திரையுலகும் பயனடையும் விதத்தில் தனது தலைவரிடம் (முதல்வர் கருணாநிதி) பல கோரிக்கைகளை வைத்து நிறைவேற்றிக் கொடுத்தவர் அவர். அதற்கு அவர் பட்டபாடு அவருக்கல்லவா தெரியும். சட்டசபை நடக்கும் நேரத்தில் இவர்கள் பாட்டுக்கு 'திரி' கொளுத்திப் போட, அது 'பற்றிக் கொண்டால்' நஷ்டம் எல்லோருக்கும்தானே. உடனே இதற்கு பதிலடி தரவேண்டும் என விரும்பிய அவர், அதை தன் அருகிலிருந்த கே.ஆர்.ஜியிடம் தெரிவித்தார்.

சட்டென்று மைக்கைப் பிடித்த கே.ஆர்.ஜி, எந்த மேடையில் என்ன பேசுவது என்று பலருக்குத் தெரிவதில்லை. மேடை கிடைத்து விட்டது என்பதற்காக கண்டதையும் பேசிவிடக் கூடாது. கஸ்தூரிராஜா என்ன நஷ்டப்பட்டு விட்டார் என்று இங்கே இப்படிப் பேசுகிறார்.

அவர் தான் இருக்கும் உயரத்தை மறந்துவிட்டாரா... ஒருவேளை அவர் உண்மையிலேயே படமெடுக்க கஷ்டப்படுபவராக இருந்தாலும் அதைப் பேச வேண்டிய மேடை இதுவல்ல. அதற்கென கவுன்சில் இருக்கிறது.

இதே செல்வமணியையும் கஸ்தூரிராஜாவையும் ஒரு பிரச்சினை என்று வந்தால் தேட வேண்டியிருக்கிறது. இப்போது மட்டும் பேச வந்து விட்டார்கள்... என வெளுத்து வாங்க, விதிர் விதிர்த்துப் போனார்கள் கஸ்தூரியும், செல்வமணியும்.

இதனால் அரங்கமே சூடாகிப் போனது. இந்த நிலையில், இறுக்கமான சூழலில் பேச வந்த சத்யராஜ், அந்த சூழலையே அடியோடு மாற்றும் வகையில் பேசி கலகலப்பாக்கினார்.

அவர் பேசுகையில், கே.ஆர்.ஜி. தன்னை முதல் இழந்த முதலாளி என்றார். இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்னை வைத்து இதுவரை அவர் ஒரு படம் கூட எடுக்கவில்லை, அதற்குள் எப்படி முதல் இழந்தார் என்பதுதான் புரியவில்லை என்றபோது சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்து குலுங்கியது.

இங்கே நடந்த விவாதத்தை, தமிழ் சினிமாவின் நலனுக்காக நடந்த ஒரு ஆரோக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்வோம். ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றார் வேதம் புதிது பாலுத் தேவர் பாணியில்.

வாயைக் கொடுப்பானேன், வாங்கிக் கொள்வானேன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil