twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நகைச்சுவைத் திலகம் நாகேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது

    By Staff
    |

    Kamal and Vaali pay tribute to Nagesh
    சென்னை: நகைச்சுவைத் திலகம் நடிகர் நாகேஷின் உடல் இன்று காலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    பழம்பெரும் நடிகர் நாகேஷ் சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

    முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

    நாகேஷின் உடல், செயின்ட் மேரீஸ் ரோட்டில் உள்ள அவருடைய வீட்டுக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

    நாகேஷ் மரணம் அடைந்த தகவல், சினிமா உலகம் முழுவதும் பெரும் துயர செய்தியாக பரவியது.

    நாகேசின் உடலுக்கு, நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் திரளாக வந்து மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய இருவரும் விரைந்து வந்து, நாகேஷ் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

    நடிகர்கள் சோ, பாண்டியராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், செந்தில், குமரிமுத்து, வி.எஸ்.ராகவன், நடிகை மனோரமா, டைரக்டர்-தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பட அதிபர் கோவை தம்பி, கவிஞர்கள் வாலி, சினேகன் ஆகியோரும் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

    தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரும் நாகேஷ் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    நடிகர்கள் சூர்யா, விஜய், விஷால், விவேக், முரளி, ஜெயம் ரவி, நகுலன், ராமராஜன், பார்த்திபன், மோகன், கவுண்டமணி, பரத், ஸ்ரீமன், பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஸ்ரீகாந்த், ராஜேஷ், ரவிச்சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன், கிரேசிமோகன், நடிகைகள் கே.ஆர்.விஜயா, சி.ஆர்.சரஸ்வதி, அம்பிகா, கோவை சரளா, டைரக்டர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, சந்தானபாரதி, படஅதிபர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விசுவநாதன், சங்கர்கணேஷ் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

    மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன், பாரதீய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், கவிஞர் காசி.முத்துமாணிக்கம், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மதுசூதனன், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஸ்டாலின், ஜெயலலிதா அஞ்சலி

    இன்று காலை நாகேஷ் வீட்டுக்கு ஜெயலலிதா நேரில் சென்று உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் இறுதிச் சடங்குகள் தொடங்கின. காலை 10.30 மணிக்கு நாகேஷ் உடல் மலர்களால் அலங்கரித்த வண்டியில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வழியெங்கும் பெரும் திரளான மக்கள் கூடி நின்று தங்களையெல்லாம் சிரிக்க வைத்த நாகேஷின் பூத உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் பெசன்ட் நகர் மின்மயானத்தை ஊர்வலம் அடைந்தது. அங்கு நாகேஷின் உடல் எரியூட்டப்பட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X