For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ராமாயணம் படித்துக் கொண்டே பெருமாள் கோவிலை இடிக்கும் தமிழ் சினிமாக்காரர்கள்!

  By Staff
  |

  Vijay with Anushka in Veataikaran
  ராமாயணம் படித்துக் கொண்டே பெருமாள் கோவிலை இடிக்கும் தமிழ் சினிமாக்காரர்கள்!

  இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு நன்றாகப் பொருந்தும்.

  விஞ்ஞானம் தந்த பரிசான சினிமாவில் இருந்தாலும், அதன் அடுத்தடுத்த வளர்ச்சியை ஏற்றுக் கொள்வதில் மட்டும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அப்படியொரு மகா தயக்கம். எந்த புதிய விஷயத்தையும் அத்தனை சுலபத்தில் கோடம்பாக்கத்துக்குள் நுழைய விடுவதில்லை என்பதை சங்கம் வைத்துக் காப்பவர்கள் இவர்கள் (ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு... அனால் இவர்கள் ரொம்ப மைனாரிட்டி!).

  ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளை ஜென்ம விரோதியாக நினைத்து கொடிபிடித்து ஊர்வலம் போன தமிழ் சினிமாக்காரர்கள்தான், இன்று தொலைக்காட்சிகள் தங்கள் படங்களை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என சற்றே மிரட்டல் கலந்து தொனியில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இல்லாவிட்டால் அந்த தொலைக்காட்சிகளுக்கு ஒத்துழைப்பு தரமாட்டார்களாம்.

  முன்பு விசிஆர், கேசட்டுகள் என வந்த போதே, அவற்றை தங்கள் வர்த்தகத்துக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசனை சொன்னவர் நடிகர் கமல்ஹாஸன். அதுவே பின்னர் திருட்டு விசிடி, டிவிடி என விஸ்வரூபமெடுத்தபோது, இனி படங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்களே டிவிடி வடிவில் வெளியிட்டுவிடலாம், போட்ட காசும் ஆரம்பத்திலேயே கிடைக்கும், திருட்டு விசிடிக்கு அவசியமிருக்காது என்றும் அவர் கூறினார்.

  யாரும் காதுகொடுத்துக் கேட்கவும் தயாராக இல்லை. 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் புதுப்பட டிவிடி வெளியீட்டுக்கு அனுமதி தருவோம் என்றார்கள் பிடிவாதமாக.

  ஆனால் படம் வெளியாகும் முன்பே அட்டகாசமான போஸ்டருடன் டிவிடிகள் வந்துவிடுகின்றன.

  குதிரை ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டுவதுபோல, ஆறேழு ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு, இப்போதுதான் தயாரிப்பாளர் சங்கம் டிவிடி உரிமை விஷயத்தில் விழித்துக் கொண்டுள்ளது.

  அதன்படி இனி அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்களை 100 நாள் கழித்தும், குறைந்த திரையரங்குகளில் ரிலீசாகும் படங்களை 50 நாட்களுக்கும் டிவிடியாக விற்பனைக்குக் கொண்டுவருவது என்பதே அந்த முடிவு. குளிக்க குளத்தில் இறங்கிய பிறகு தலைமுழுக கொஞ்சம் அவகாசம் எடுக்கிற மாதிரிதான் இதுவும். டிவிடி உரிமை கொடுக்க முடிவெடுத்த பிறகு எதற்கு இந்த 100 நாள் கெடு?.

  தியேட்டர்காரர்களுக்காக இப்படியொரு கெடுவை தயாரிப்பாளர்கள் எடுத்திருக்கக்கூடும். ஆனால் படம் வெளியான முதல் மூன்று வாரங்களில் டிவிடியும் வெளியாகிவிடுவதே தயாரிப்பாளர்களுக்கு லாபமாக இருக்கும். இல்லாவிட்டால் அதற்கு முன்பே வலைப்பூக்களிலெல்லாம் அந்தப் படங்கள் வெளியாகிவிடும் நிலைமைதான் இன்று உள்ளது.

  படத்துடன் சேர்த்து டிவிடியும் வெளியாகட்டும்.... விருப்பமிருப்பவர்கள் நிச்சயம் தியேட்டருக்கு வந்துதான் படம் பார்ப்பார்கள். இவர்கள் சிடி உரிமை தராவிட்டால், திருட்டு விசிடி பார்க்காமலா போய்விடுவார்கள்!.

  அதேபோல, பெரிய படங்கள் பண்டிகை நாட்களில் மட்டும் வெளியாக வேண்டும் என கெடுபிடி விதித்திருக்கிறார்கள்... பெரிய படம், சின்ன படம் என்று பார்த்தா மக்கள் அதை ஹிட்டாக்குகிறார்கள்? நல்ல படமாக இருக்க வேண்டும்... உன்னைப்போல் ஒருவன் என்ன மெகா பட்ஜெட் படமா?.

  கமல்ஹாஸன் சம்பளம் என்ற ஒரு விஷயத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஒரு மினிமம் பட்ஜெட் படம் மாதிரிதான் அது. ஆனால் இன்று பிளாக் பஸ்டர் என்று சொல்லும் அளவு ஹிட் படமாகிவிட்டது. அடுத்தடுத்த இந்த மாதிரி பாதுகாப்பாக படம் பண்ணலாமே என கமல்ஹாஸனே யோசித்து வருகிறார். எனவே சரக்குள்ள படமாக எடுக்க தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்... அது எந்த சீஸனில் வெளியானாலும் மக்கள் ஆதரவு தருவார்கள்!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X