twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைமறைவாக இருக்கிறாராம் வனிதா! - நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!!

    By Chakra
    |

    Vanitha Vijayakumar
    சென்னை: நடிகை வனிதாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது தந்தை விஜயகுமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வனிதாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு, வனிதா தலைமறைவாகி விட்டதாகவும், கைது செய்வதற்காக அவரை தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    நடிகை வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நேரிட்ட அடிதடி சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். வனிதாவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் வனிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

    நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வனிதா தரப்பில் வக்கீல் நாகேஷ்பாபு ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ்க்கு ஜாமீன் தரப்பட்டுள்ளது. எனவே வனிதாவுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றார்.

    விஜயகுமார் தரப்பில் வக்கீல் ஆஜராகி, வனிதாவுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது. வனிதாவின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது, விஜயகுமாரின் கருத்தையும் கேட்க வேண்டும். எனவே அவரையும் இந்த மனு மீதான விசாரணையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    விஜயகுமார் எதிர்ப்பு!

    குடும்பப் பிரச்சினையில் மகளுக்கே முன்ஜாமீன் தரக் கூடாது என்று தந்தை கூறுகிறார். இதிலிருந்தே தந்தையின் நிலையை அறிந்துகொள்ள முடியும் என்று நாகேஷ்பாபு கூறினார். அதற்கு விஜயகுமார் தரப்பில், குடும்பத்தின் ஒட்டுமொத்த மானத்தையும் வனிதா வாங்கிவிட்டார். விஜயகுமாரின் கையை வனிதாவின் கணவர் அடித்து உடைத்துள்ளார் என்று வக்கீல் பதிலளித்தார்.

    அப்போது நீதிபதி அக்பர் அலி, விஜயகுமார் தரப்பில் என்ன கூற விரும்புகிறார்கள் என்பதை கேட்டு முடிவு செய்யலாம். எனவே அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யட்டும் என்றார்.

    அரசுத் தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். வனிதாவுக்கு முன்ஜாமீன் கொடுப்பதற்கு அவர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.

    மேலும் வனிதாவின் மனுவுக்கு அவர் பதில்மனு தாக்கல் செய்தார். அதில், "வனிதாவுக்கும், அவரது கணவர் ஆகாஷுக்கும் விஜய் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற குழந்தைகள் உள்ளனர். ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை வனிதா சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டார்.

    தற்போது ஆனந்தராஜ் என்பவர் வனிதாவுடன் வசிக்கிறார். 2 குழந்தைகளும் அவர்களுடன் வசிக்கின்றனர். ஸ்ரீஹரியும், ஜோவிகாவும் தீபாவளி கொண்டாடுவதற்காக விஜயகுமார் வீட்டுக்கு 4-ந் தேதி வந்தனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக வனிதாவும், ஆனந்தராஜும், விஜயகுமார் வீட்டுக்கு வந்தனர்.

    ஆனால் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் ஸ்ரீஹரி வர மறுத்துவிட்டான். எனவே விஜயகுமார் குடும்பத்தினர் முன்னிலையில் அவனை வனிதா அடித்தார். மேலும் அசிங்கமாக பேசியபடி விஜயகுமாரின் மனைவியையும் அடிக்கத் தொடங்கினார்.

    இதில் தலையிட்ட விஜயகுமாரையும், வனிதா அசிங்கமாக திட்டினார். அதோடு ஆனந்தராஜுடன் சேர்ந்து அவரை தாக்கவும் செய்தார். விஜயகுமாரின் கையை ஆனந்தராஜ் முறுக்கியதோடு, அவரையும், அவரது மனைவியையும் கடுமையாக மிரட்டினார்.

    இதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. இதனால் ஆஸ்பத்திரியில் விஜயகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரால் முழுமையான புகாரை உடனடியாக தர முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வந்த பிறகே புகார் கொடுத்தார்.

    7-ந் தேதியன்று விஜயகுமார், மஞ்சுளா, அருண் விஜய் மீது வனிதா புகார் கொடுத்தார். அதற்கான சட்ட ஆலோசனை பெறப்பட்டு 22-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விஜயகுமார் 17-ந் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு 20-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த பிரச்சினை தொடர்பாக நடராஜன், சரஸ்வதி, சங்கர், பணியாள் கற்பகம் உட்பட பலரை விசாரித்து அவர்களின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. மேலும் பல சாட்சிகளை விசாரித்த பிறகுதான் விசாரணை முழுமை அடையும்.

    வனிதா தலைமறைவு!!

    இந்த நிலையில் வனிதா தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். எனவே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமுதாயத்தில் செல்வாக்கு பெற்றவர் வனிதா. எனவே அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் வழக்கின் சாட்சிகளை கலைத்துவிடுவார். இது விசாரணைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்...", என்று கூறப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X