twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு பரிதாப நினைவஞ்சலி!

    By Shankar
    |

    Thiagaraja Bagavadhar
    தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை மிக்க தியாகராஜ பாகவதர் (உண்மையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அன்றைக்கு அவர் பெயருக்கு முன் யாரும் போடவில்லை. பின்னாளில் சினிமா ஆய்வாளர்கள் அப்படி அழைக்கின்றனர்!) நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

    தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மக்களை தனது இனிய குரல் மற்றும் நடிப்பால் மயக்கியவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்றும் பாகவதர் என்றும் அன்றைய நாட்களில் அவரை மக்கள் அழைத்து மகிழ்ந்தனர்.

    திருச்சி பாலக்கரைதான் அவரது சொந்த ஊர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், நல்ல இசைஞானம், கணீர் குரல் வளம் அவருக்கு. எனவே பவளக் கொடி என்ற படத்தின் மூலம் கடந்த 1934-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    தொடர்ந்து நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட 14 படங்களில் நடித்து பிரபலமானார்.

    அன்றைக்கு பாகவதர் மேலிருந்து அபரிமிதமான ஈர்ப்பு, நாடகத்தைத் தவிர மாற்று பொழுதுபோக்கே இல்லாத சூழல் காரணமாக அவரது ஹரிதாஸ் படம் 3 வருடங்கள் சென்னையில் ஓடி சாதனைப் படைத்தது.

    சந்திரமுகி படம் வரும் வரை, தமிழில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை பாகவதர் படத்துக்கே இருந்தது.

    ஆனால் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்குப் பிறகு, புகழ் வெளிச்சம் மங்கிய நிலையில் பாகவதர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். ஆனால் வறுமையிலும் பெருமையை காத்தார். கம்பீரத்தை இழக்காத வாழ்க்கை வாழ்ந்தார். தன்னைத் தேடி வந்த வாய்ப்புகள், பண உதவிகளை மறுத்துவிட்டார்.

    1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உடல் நலிந்து சென்னை பொது மருத்துவமனையில் இறந்தார். திருச்சிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க இறுதி ஊர்வலம் நடந்தது. திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

    இப்போதும் ஒரு சாமானிய மனிதனின் கவனிக்கப்படாத சமாதியாகவே பாகவதர் அடக்கம் செய்யப்பட்ட இடம் காட்சி தருகிறது.

    மூன்றே பேர்...

    இந்நிலையில், தியாகராஜ பாகவதரின், 53வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவஞ்சலிக்கு தமிழ் சினிமாவிலிருந்து மட்டுமல்ல, அக்கம்பக்கத்திலிருந்தும் கூட யாரும் வரவில்லை.

    தியாகராஜ பாகவதரின் சின்னம்மா சம்பூரணத்தம்மாளின் மகள் ஆனந்தலட்சுமி, அவரது கணவர் தெட்சிணாமூர்த்தி, இவர்களது மகன் தனபால் ஆகிய மூவர் மட்டுமே பாகவதர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த நேற்று வந்தனர்.

    1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ராஜமுத்தி சினிமாவில் இடம் பெற்ற, "மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ' என்ற பாடலை உரக்கப் பாடி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ் சினிமாவில் ஒரு பெரும் மன்னரின் கம்பீரத்தோடு ஆட்சி செலுத்திய முதல் சூப்பர் ஸ்டார் பாகவதரின் நினைவு நாளை அனுசரிக்கவும் நேரமின்றி திரையுலகம் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாத குடும்பத்தினர், அவரவர் பணி அவரவருக்கு... யாரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று கூறி தங்கள் அஞ்சலியை முடித்துச் சென்றனர்!

    மேன் மக்களல்லவா!

    English summary
    The 53rd death anniversary of M K Thiyagaraja Bhagavadhar, the first superstar of Tamil cinema has been observed by just 3 of his close relatives on Tuesday at Trichy Sangiliyandapuram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X