twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் திரைப்படம் சரித்திரம் படைக்கும்-ரஜினி

    By Sudha
    |

    Rajini and Aishwarya Rai
    கோலாலம்பூர்: எந்திரன் திரைப்படம் புதிய சரித்திரம் படைக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    கோலாலம்பூரில் நடந்த எந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய சிறப்புரை..

    இது வித்தியாசமான சரித்திரம் படைக்கப்போகும் படம்.

    இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.150 கோடியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் என்பதால் எந்திரன் சரித்திரம் படைக்கப்போகிறதா... அல்லது ஷங்கர், ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இணைந்து பணியாற்றியதால் சரித்திரம் படைக்கப்போகிறதா... இல்லை. ஹாலிவுட் படங்களின் தயாரிப்புக்கு இணையாக சொல்லும் அளவுக்கு இந்தியாவிலேயே எந்த படமும் இதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல்படம். அதனால்தான் இந்தப் படம் ஒரு சரித்திரம் என்றேன்.

    இதற்கு கலாநிதி மாறன்தான் காரணம். இதைவிட அதிக பட்ஜெட்டில்... ரூ 1000 கோடியில் கூட எதிர்காலத்தில் படம் தயாரிக்கலாம். ஆனால் இந்த மாதிரி ஒரு விஞ்ஞானப் படம் தயாராவது தமிழில் இந்தியாவில் இதுதான் முதல்முறை.

    முதலில் வேறு ஒரு நிறுவனம் இதை தயாரிப்பதாக இருந்தது. சில சூழ்நிலைகளால் அதிலிருந்து வெளியே வர நேர்ந்தது. அதன் பிறகு கலாநிதி மாறனை சந்தித்தோம். இந்தப் படத்தின் கதையை கேளுங்கள்.. என்று ஷங்கர் சொன்னார்.

    கலாநிதி உடனே உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு பட்ஜெட் எத்தனை நாட்களில் முடிப்பீர்கள் என்று கேட்டார். ஷங்கரும் பட்ஜெட் சொன்னார். நாலு நாள் கழித்து முடிவு சொல்கிறேன் என்று கலாநிதி மாறன் கூறினார்.

    பிறகு நாங்கள் அவரை சந்தித்தபோது 'சிவாஜி' படத்தின் மொத்த வசூல் விவரத்தையும் தியேட்டர் வாரியாக அவர் வைத்திருந்தார். இதை சிவாஜி பட தயாரிப்பாளர் கூட வைத்திருந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு பிராக்டிக்கலாக இருக்கிறார். இதைவிட பெரிய படமாக எந்திரனை பண்ணலாம் பிரமாண்டமாக செய்வோம் என்றார். அவர்தான் கலாநிதி மாறன்.

    எதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்வது, பெரிதாக செய்வது, வெற்றிகரமாக செய்வது... அதனால்தான் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள், பெரிய தொழில் அதிபர்கள் எல்லாரும் கலாநிதி மாறன் யார் என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவர் அறிமுகத்துக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர் ஸ்டார்களுக்கெல்லாம் ஸ்டார். இவர் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக கட்டாயம் வருவார்.

    சிவாஜி படத்தில் நடிக்கும்போது கமல்ஹாசனிடம் ஷங்கரை பற்றி கேட்டேன். கெட்டிக்காரர், ஆனால் அதிகம் வேலை வாங்குவார், என்றார். ஷங்கருடன் பணியாற்றியது சந்தோஷமாக இருந்தது. என்னைப் பற்றி பெருமையாக பேசினார்கள். பெருமைப்படும் அளவில் நான் ஒன்றும் செய்யவில்லை.

    என் படங்களில் பஞ்ச் டயலாக் நானே யோசித்து சேர்ப்பேன். எந்திரனில் அப்படி நானாக எதையும் செய்யவில்லை. எல்லாமே ஷங்கர் பார்த்துக் கொண்டார். குழந்தைக்கு விதம் விதமாக மேக்கப் போட்டு ஆடு, பாடு என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது தப்பு தப்பாக செய்தாலும் கைதட்டிப் பாராட்டுவார்கள். என் ரசிகர்களான நீங்கள் எல்லாம் என்னை அப்படித்தான் அழகு பார்க்கிறீர்கள்.

    ஷங்கர் சேர்த்துள்ள கூட்டணி மிகப்பெரிய கூட்டணி. இந்த மாதிரி கூட்டணி சேர்ந்தால் 234 தொகுதியும் ஓகேதான். வைரமுத்து பேசும்போது, இந்தியாவிலிருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் இயக்குனர் ஷங்கர்தான் எனச் சொன்னார். அதை நானும் ஆமோதிக்கிறேன்.

    எம்.ஜி.ஆருக்கு வாலி எப்படியோ; அப்படித்தான் எனக்கு வைரமுத்து. அவர் எனக்கு எழுதிய பாடல்களை பார்த்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கு. அந்தப்பாடல்கள் எனக்கே பல முறை இன்ஸ்பிரேஷனா அமைஞ்சிருக்கு. அந்த வரிகளுக்கேற்ப நான் வாழ்ந்திருக்கேன்.

    'ரஜினி கபர்தார்'...

    ஐஸ்வர்யா ராய் வழக்கமான நடிகை அல்ல. இதற்கு முன் பல உலக அழகிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா மாதிரி யாரும் இல்லை. அழகுடன் அபார அறிவும் கொண்டவர் அவர். அவருடன் காதல் காட்சிகளில் நடிக்க எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவர் நம்ம வீட்டுப் பொண்ணு. எதிரில் அமிதாப் நின்றபடி 'ரஜினி கபர்தார்' என்று கூறுவது போலிருக்கும் (ஐஸ்வர்யா ராய் விழுந்து விழுந்து சிரிக்கிறார்)

    ஒரு மனிதனுக்கு ஈகோ இருக்கக்கூடாது. ஈகோவை அழிப்பது ஆன்மிகம். ஈகோ சிறிதும் இல்லாததால் இவ்வளவு புகழ் கிடைத்தும் எல்லா புகழும் இறைவனுக்கே என்கிறார் ரகுமான். யோகி, மகான் என்றால் இமயமலையில்தான் இருக்க வேண்டும் என்று அல்ல. கோட் சூட் போட்டுக்கொண்டும் இருக்கலாம்.

    69ல் ஞாபகம் வந்தது..

    எத்தனை உச்சிக்கு போனாலும் எல்லா மனிதர்களும் கீழே இறங்கி வந்தாக வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு குட்டி கதை சொல்கிறேன்.

    ஒரு இடத்தில் 70 மாடி கட்டிடம் இருந்தது. மேல் மாடிக்கு போக லிப்ட்டில் ஏறினோம். பாதியில் லிப்ட் நின்றுவிட்டது. அதுக்கு மேல போக லிஃப்ட் கிடையாது. படிகளில் ஏறித்தான் போக வேண்டும். 'சரி, ஆளுக்கு ஒரு கதை சொல்லுவோம். கால் வலி தெரியாமல் மேலே போய்விடலாம் என்றார்கள். அப்படியே ஒவ்வொருவரும் கதை சொன்னார்கள். 69வது மாடி வந்தபோதுதான் நான் சொன்னேன், 'ஐயோ' வீட்டு சாவியை எடுத்துவர மறந்துவிட்டேன்' என்றேன்.

    'சரி, கீழே போய் எடுத்து வருவோம்', என்று இறங்கினோம். கீழே இறங்கி மேலே போவதுதான் வாழ்க்கை. உச்சிக்கு ஒருத்தன் போயிட்டா, அங்கேயே இருந்திட முடியாது. காணாம போயிடுவான். திரும்ப கீழே வந்துதான் ஆக வேண்டும். பையனுக்குக் கல்யாணம்.. கீழே இறங்கி வரணும்... பொண்ணுக்கு கல்யாணம்... கீழே இறங்கணும். அதுதான் சந்தோஷம். கீழே வருவதும் போலே போவதும்தான் வாழ்க்கை. அதை சந்தோஷமா செய்யலாம்" என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X