twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன் படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்!

    By Staff
    |

    Junior NTR and Nayanthara
    ஜூனியர் என்டிஆர், நயனதாரா ஆகியோர் நடித்து ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படமான அதுர்ஸ், கர்நாடகாவில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

    இந்த நஷ்டத்திற்குக் காரணம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை.

    கன்னடப் படங்களுக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில் இறங்கியுள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது.

    அதில் ஒன்று, புதிய கன்னடப் படங்களை எப்போது வேண்டுமானாலும் திரையிடலாம். அதேசமயம், பிற மொழிப் படங்களை வெள்ளிக்கிழமை மட்டும்தான் திரையிட வேண்டும் என்பது.

    கடந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி விஜய் நடித்த வில்லு படத்தை திரையிட திட்டமிட்டிருந்தார் பட விநியோகஸ்தர் எஸ்.குமார். ஆனால் வெள்ளிக்கிழமைதான் திரையிட வேண்டும் என்று கூறி படத்தை திரையிட விடாமல் தடுத்து விட்டனர். இதனால் குமாருக்கு கிட்டத்தட்ட ரூ. 40 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

    தற்போது அதுர்ஸ் படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர் ஹரிநாத் ரெட்டிக்கும் அதே அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்தப் படத்தை புதன்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்தார் ரெட்டி. ஆனால் அப்படி செய்யக் கூடாது அது விதி மீறல் என்று தடை போட்டது வர்த்தக சபை. அதையும் மீறி திரையிட்டார் ரெட்டி.

    இதனால் எரிச்சலான திரைப்பட வர்த்தக சபை, உள்ளூர் கன்னட மீடியாக்களைத் தொடர்பு கொண்டு அதுர்ஸ் படம் குறித்த ஒரு விளம்பரத்தைக் கூட ஏற்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாம். இதனால் அதுர்ஸ் குறித்த ஒரு விளம்பரமும் வெளியாகவில்லை.

    இதனால் படம் வெளியான தகவலே பலரை அடையவில்லை. இதனால் ரூ. 40 லட்சம் வரை ரெட்டிக்கு நஷ்டமாகியுள்ளதாம்.

    கடந்த சனிக்கிழமை ரெட்டி சிட்டி சிவில் கோர்ட்டை அணுகி, சட்டப்பூர்வமாக தான் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு இடையூறு செய்யக் கூடாது என்று திரைப்பட வர்த்தக சபைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட், அவருக்கு சார்பாக உத்தரவைப் பிறப்பித்து, திரைப்பட வர்த்தக சபையின் தடைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    பிற மொழிப் படங்களுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வருவது வர்த்தக சபையின் தலைவரான நடிகை ஜெயமாலாதான் என்று குற்றம் சாட்டுகிறார் குமார்.

    ஜெயமாலாவால் எனக்கு 40 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வில்லு படத்தை உரிய நேரத்தில் திரைக்கு வர அவர் அனுமதித்திருந்தால் இந்த நஷ்டம் எனக்கு ஏற்பட்டிருக்காது.

    பிற மொழிப் படங்களை வாங்கி விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் குறித்த தனது போக்கை ஜெயமாலா மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    ஆனால் தான் பிற மொழிப் படங்களுக்கு விரோதி இல்லை என்கிறார் ஜெயமாலா. இதுகுறித்து அவர் கூறுகையில், கன்னடத் திரையுலகை காப்பதுதான் எனது முதல் பணி. பிற மொழிப் படங்கள் மூலம் கன்னட திரையுலகம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.

    அதிலிருந்து கன்னடத் திரையுலகை காத்து, மீட்க வேண்டியது எனது கடமை. அதை மட்டும்தான் செய்து வருகிறேன். மற்ற படி பிற மொழிப் படங்களுக்கு எதிராக நான் செயல்படவில்லை.

    பண்டிகைகள் உள்ளிட்ட விசேஷ நாட்களில் வெள்ளிக்கிழமையோ அல்லது வியாழக்கிழமையோ கூட அவர்கள் பிற மொழிப் படங்களை திரையிட்டுக் கொள்ளட்டும். ஆனால் திங்கள் அல்லது புதன்கிழமைகளில் ரிலீஸ் செய்வதை ஏற்க முடியாது. அது கன்னடப் படவுலகை பெரிதும் பாதிக்கும் என்றார் ஜெயமாலா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X