twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருத்தம் தெரிவித்தார் ஆர்யா!

    By Chakra
    |

    சென்னை: தமிழ் திரையுலகம் பற்றி நான் மோசமாக விமர்சிக்கவில்லை. ஒருவேளை என்னால் யாராவது காயப்பட்டிருந்தால் அதற்காக வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார் நடிகர் ஆர்யா.

    தமிழ் சினிமாவில் சுமாராக நடிக்கத் தெரிந்தாலும் நல்ல சம்பளம் வாங்கலாம் என்றும், மலையாளத்தில் நன்கு நடிக்கத் தெரிந்தால்தான் குப்பை கொட்ட முடியும் என்றும் துபாய் மலையாளிகள் சங்க விழாவில் பேசியதாக நடிகர் ஆர்யா மீது புகார் எழுந்தது. இதனால் கொதிப்படைந்த பெப்ஸி தலைவர் விசி குகநாதன் ஆர்யாவைக் கண்டித்தார். ஆனால் நடிகர் சங்கம் ஆர்யாவை ஆதரித்தது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்தது.

    திரையுலகில் இரு அணிகளாகப் பிரிந்து மோதும் நிலை உருவானது.

    ஆனால், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசி குகநாதன், நேற்று அறிக்கை விடுத்தார். அதில் நட்சத்திரங்கள் கவனமாகப் பேசவேண்டும், பிழைக்க வந்த இடத்தை பிழையாகப் பேசக்கூடாது என்றார்.

    இப்போது ஆர்யாவும் தன் பங்குக்கு வருத்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கை:

    என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும், என்னை ஆளாக்கி ஆதரித்துக்கொண்டிருக்கும் தமிழ் திரையுலகினருக்கும் எனது நன்றி கலந்த அன்பு வணக்கங்கள்.

    எந்த பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல் நடிப்பு தொழிலில் மட்டும் முழுமையாக மனதை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் என்னைப் பற்றி கடந்த ஒரு வாரகாலமாக சில விமர்சனங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை படித்திருப்பீர்கள்.

    அதுகுறித்து என் உண்மை நிலையை விளக்குவது தான் இந்த அறிக்கையின் நோக்கம்.

    பிரச்சினைக்குள்ளான அந்த துபாய் மேடை உட்பட பல மேடைகளில் இன்று எனக்கு இடம் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணமே தமிழ்த் திரை ரசிகர்கள் எனக்கு தந்திருக்கும் அங்கீகாரம் தான் என்ற அடிப்படையை அறியாதவன் அல்ல நான்.

    நான் அறிமுகமான 'உள்ளம் கேட்குமே...' படத்தில் என்னை உற்சாகப்படுத்தி நான் கடவுள் படத்தில் என்னை நடிகனாக அங்கீகரித்து, மதராசபட்டினம் படத்தில் எனக்கு தனி அடையாளத்தை தந்து, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் என்னை வெற்றிக் கதாநாயகனாக்கிய தமிழ் ரசிகர்களின் ஆதரவிற்கும், எல்லையில்லா அன்பிற்கும் அளவு கடந்த பாசத்திற்கும் காலம் பூராவும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

    தமிழ் திரையுலகம் எனக்கு தொடர்ந்து தந்து வரும் வரவேற்புதான் திரையுலகில் இன்று என் சுவாசம் என்பதை நன்கறிந்து நான் தமிழ் திரையுலகைப்பற்றி தவறாக விமர்சிப்பேனா? கனவிலும் நான் எண்ணத்துணியாததை நான் பேசியதாக எழுந்துள்ள விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளன என்பதுதான் உண்மை.

    நான் அப்படிப்பட்ட எந்த விமர்சனத்தையும் வெளியிடவில்லை என்பதை பணிவன்போடு உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவை எல்லாவற்றையும் மீறி என்னால் யாராவது காயப்பட்டிருந்தால் அவர்களுக்கு என் வருத்தங்களை இதயசுத்தியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனக்காக குரல் கொடுத்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகளுக்கும், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க உதவிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம. நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கும் என் இதயபூர்வமான நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

    நடிகன் என்ற நிலையில் ஆரம்ப படிக்கட்டுகளில் இருக்கும் எனக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்திட வேண்டிக்கொள்கிறேன்..."

    இவ்வாறு அறிக்கையில் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X