twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குசேலன் பிரச்சனை தீர்ந்ததாமே!

    By Staff
    |

    Rajini
    கடந்த 20 நாட்களாக இழுபறியாக இருந்து வந்த குசேலன் பட விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

    தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கிடையே ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இப்பிரச்சினை இத்தோடு நிறுத்திக் கொள்வதாகவும், நஷ்டஈடு குறித்த அனைத்தையும் சுமூகமாகப் பேசித் தீர்த்துக் கொள்வதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    மேலும் இப் பிரச்சினையில் தனக்கு சம்பந்தமில்லாவிட்டாலும், தானே முன்வந்து நஷ்ட ஈடு வழங்குவதாக அறிவித்த ரஜினிக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர நேற்று மாலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஆர்எம் அண்ணாமலை ஆகியோர் கலந்து பேசினர். பின்னர் அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை:

    சினிமா என்ற கலை உலகம் வெற்றி தோல்வி என்று மாறி மாறி வரக்கூடிய வியாபாரம் என்று திரையுலக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்.

    இது நீருக்குள் இருக்கும் மீனுக்கு விலை பேசுவது போலத்தான். சுறா மீன்கிடைக்கும் என நினைத்து விலை பேசினால் அயிர மீன் கிடைக்கலாம். அயிரை மீனுக்கு விலை கொடுத்து வலை வீசினால் சுறா மீனும் கிடைக்கலாம். இது அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

    இந் நிலையில் குசேலன் பட விவகாரம் கிட்டத்தட்ட இருபது நாட்களாக நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. வருடத்திற்கு 100 படங்கள் ரீலீசானால் 10 படங்கள் மட்டுமே வெற்றி பெறுவது கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருவதாகும்.

    இந்த நிலையில் கலையுலகை சேர்ந்த நாங்கள் மனம் விட்டு பேசினோம். அதன்பலனாக கசப்பான நிகழ்வுகள் முடிவுற்று நல்ல நிலை உருவாகி உள்ளது.

    குசேலன் படம் தயாரித்த கவிதாலயா, செவன்ஆர்ட்ஸ் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் படத்தை வெளியிட்ட சாய்மீரா நிறுவனத்திற்கும் மற்றும் ஐங்கரன் பிலிம் இண்டர் நேஷனல் நிறுவனம் ஆகியவற்றிற்கும் குசேலன் படத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்ததாக சில பத்திரிக்கைகள் வெளியிட்ட தவறான செய்தி பற்றி விரிவாக பேசி விவாதித்தோம்.

    திரையுலகம் என்பது ஒரு கூட்டு குடும்பம் மாதிரி. இதில் அண்ணன்- தம்பிகளுக்குள் சிறு சிறு கருத்து வேற்றுமைகள் வருவது போல எங்கள் அமைப்புகளில் வந்தது. அதை மனம் விட்டுப் பேசி தீர்த்துக்கொண்டோம்.

    அதன்படி இனிவரும் காலங்களில் காலம் காலமாக திரையுலகில் கடைபிடித்து வரும் வியாபார தர்மங்களை கடைபிடிப்பது என்றும், தன்னிச்சையாக எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை என்றும் ஏற்கனவே சில பத்திரிக்கைகளில் குசேலன் படம் சம்பந்தமாக வெளிவந்த சில கருத்துக்கள் எங்களால் சொல்லப்படவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய 3 பிரிவினரும் கலை உலகிற்கு முப்பெரும் சக்தியாக முத்தமிழாக இருந்து வருகிறோம்.

    எதிர்காலத்திலும் இது தொடரும். நடந்ததெல்லாம் மறந்திருப்போம். நடப்பதையே நினைத்திருப்போம். ஒற்றுமையே ஓங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

    முன்னதாக காஞ்சிபுரம்-செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆலோசனாக் கூட்டத்தில் ரஜினி குசேலன் விவகாரத்தைக் கையாண்ட விதத்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

    ரஜினியை அவமரியாதை செய்யும் எண்ணம் எங்களுக்கில்லை. எங்கள் பிரச்சினைகளை அவராகவே முன்வந்து கூப்பிட்டுக் கேட்டார். 35 சதவிகித நஷ்ட ஈடு தரவும் முன் வந்தார். இத்தனாக்கும் படத்தின் தயாரிப்பாளர் அவரில்லை. ரஜினி படங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு என்றார் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X