»   »  ரஜினி படத்தில் விஜய், அஜீத், விக்ரம்!

ரஜினி படத்தில் விஜய், அஜீத், விக்ரம்!

Subscribe to Oneindia Tamil
Vijay
இந்தி ஸ்டைலுக்கு தமிழ் சினிமாவும் மாறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் குசேலன் படத்தில் கமல் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. இப்போது விஜய், விக்ரம், அஜீத் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். அனைவரும் சேர்ந்து ரஜினியுடன் ஒரு பாடலில் ஆடவுள்ளனராம்.

மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் படம்தான் குசேலன். பி.வாசு இயக்குகிறார். ரஜினிக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கிறார். ரஜினியின் நண்பராக, 2வது ஹீரோவாக பசுபதி நடிக்கிறார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படம் உருவாகிறது. அதிலும் ரஜினிக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பி.வாசுவுக்கு வித்தியாசமான ஒரு ஐடியா தோன்றியது. அதாவது இந்தியில் பல முன்னணி ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது, ஆடிப் பாடுவது சாதாரணமான விஷயம். ஆனால் தமிழில் அது நடக்கவே முடியாத மகா பெரிய சிரமம்.

குசேலன் படம் மூலம் ஏன் அதை செய்யக் கூடாது என்று யோசித்தார் வாசு. அவரது இந்த சிந்தனைக்கு ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம்தான் முக்கிய காரணம். அப்படத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர், நடிகையர் ஒரு பாடலில் தோன்றி நடித்திருப்பார்கள்.

எனவே குசேலனிலும் அதுபோன்ற ஒரு பாடல் காட்சியை சேர்க்க நினைத்தார் வாசு. இதை ரஜினியிடமும் கூற, குஷியாகிப் போன அவர் உடனே ஓ.கே. சொல்லி விட்டார்.

இதையடுத்து முதலில் கமலை அணுகினார் வாசு. ரஜினி நடிக்க வந்தது முதல் இன்று வரை அவருக்கு நெருங்கிய தோஸ்த் ஆக இருப்பவர் கமல். எனவே மீண்டும் ரஜினியின் படத்தில் இடம் பெறுவது குறித்து சந்தோஷம் தெரிவித்தாராம் கமல்.

இதையடுத்து அஜீத்தை அணுகினார் வாசு. அவருக்கும் ரஜினியுடன் பாடல் காட்சியில் தோன்ற பரம சந்தோஷம். எனவே அவரும் ஓ.கே. சொல்லி விட்டார். இதையடுத்து விக்ரமை அணுகி அவரது சம்மதத்தையும் பெற்று விட்டாராம் வாசு. லேட்டஸ்டாக விஜய்யின் சம்மதமும் கிடைத்துள்ளதாம்.

இதேபோல அர்ஜூன், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஸ்டார்களையும், திரிஷா போன்ற நடிகைகளையும் அணுகியுள்ளாராம் வாசு. அவர்களின் சம்மதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளதாம்.

தெலுங்குப் பதிப்பிலும் இந்த கோரஸ் பாட்டு இடம் பெறுகிறதாம். அதற்காக சிரஞ்சீவி, நாகார்ஜூனா, என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு உள்ளிட்ட பிரபலங்களை அணுகியுள்ளாராம் வாசு.

இதுகுறித்து வாசுவிடம் கேட்டபோது, இப்படி ஒரு ஐடியா இருக்கிறது. ஆனால் யார் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டுமே என்றார் அவர்.

இப்படி ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஸ்டார்கள், எல்லாம் சேர்ந்து இடம்பெறும் காட்சியை இதற்கு முன்பு மாறுவேடக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளில்தான் பார்த்திருக்கிறோம். இப்போது நிஜமாவே அது நடக்கப் போவது உண்மையிலேயே ரசிகர்களுக்கு பெரிய விருந்துதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil