»   »  தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் பாபாசாகேப் அம்பேத்கர்!

தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் பாபாசாகேப் அம்பேத்கர்!

By Sudha
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் சுமார் 300 திரையரங்குகளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் (தமுஎகச) சங்கத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3-ல் வெளியிடப்பட்ட இத் திரைப்படம் சென்னையில் 10 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் 11 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் குறிப்பாக, தென் மாவட்டங்களில் இத் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் எவரும் முன்வரவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பெரும்பாலானவை ஒருசில தனியார் நிறுவனங்கள் வசம் குத்தகைக்கு உள்ளதால், அவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை மட்டுமே திரையிட அந்த திரையரங்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புறநகர் பகுதிகளிலும், கிராமப்புறங்களில் உள்ள மிகக் குறைவான திரையரங்குகளிலும் மட்டுமே அந்த திரையரங்க உரிமையாளர்கள் விருப்பப்படி திரைப்படங்களைத் திரையிடக்கூடிய சூழ்நிலை உள்ளது.

மேலும், தீபாவளி, புது வருடப் பிறப்பு, பொங்கல் போன்ற தொடர் பண்டிகை காலமாக இருப்பதாலும், கவர்ச்சிமிக்க திரைப்பட நடிகர்களின் திரைப்படங்களைத் திரையிட்டு லாபம் பார்ப்பதிலேயே திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளதாலும் 'அம்பேத்கர்' போன்ற வரலாற்று திரைப்படங்களைத் திரையிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இத்தனைக்கும் இத் திரைப்படத்துக்கு தமிழக அரசு நிரந்தரமான வரிவிலக்கும் அளித்துள்ளது.

இது பொதுவான காரணமாகக் கூறப்பட்டாலும், சில மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி இத் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முன்வரவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிப் பிரச்னையை காரணம்காட்டி இத் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் எவரும் முன்வரவில்லை.

இது ஒருபுறம் இருக்க, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திடம் தெளிவான கொள்கை முடிவு இல்லாததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இத் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டியதால், திரைப்படத்தின் ஒரு பிரிண்ட்டை விலைக்கு வாங்கி அதை எல்லா இடங்களிலும் திரையிட சில அமைப்புகள் முயன்றபோது தங்களிடம் 2 பிரிண்ட்கள் மட்டுமே உள்ளதாகவும், ஐந்தாறு மாதங்கள் கழித்த பின்னர்தான் விலைக்கு தருவதைப் பற்றி முடிவு செய்ய முடியும் என்றும் திரைப்பட மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் கூறிவிட்டதால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.

மேலும், இத் திரைப்படத்தை திரையிடுவதற்காக அந்த கழகத்துக்கு செலுத்த வேண்டிய கட்டண வரைமுறையிலும் தெளிவான அணுகுமுறை இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே, "அம்பேத்கர்' திரைப்படத்தை திரையிட 'தாமிரபரணி பண்பாட்டு அரங்கம்' சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் இத் திரைப்படத்தை திரையிட தமுஎகச முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தமுஎகச பொதுச்செயலர் ச. தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை
கூறியதாவது: அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்காக தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளோம். அதன்படி, திரையரங்குகளை தமுஎகச ஏற்பாடு செய்ய வேண்டும். திரைப்படத்தை நகர்ப்புறத்தில் திரையிட ஒரு காட்சிக்கு ரூ.4,000-மும், கிராமப்புறத்தில் திரையிட ரூ.2,000-மும் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஈரோட்டில் தற்போது இத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. தேனியில் மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் விரைவில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் பெரியார் தி.க. உதவியுடன் திரையிட ஏற்பாடு செய்துள்ளோம்.

திருநெல்வேலி பூர்ணகலா திரையரங்கில் இம் மாதம் 12, 13 ஆகிய இரண்டு நாள்களும் திரையிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமுஎகச மாவட்டச் செயலர் பாஸ்கரன் செய்துள்ளார். திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து திரையிட்டு வருகிறோம். திரையரங்குகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளோம்.

ஒரு தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இளைய தலைமுறையினர் பார்த்து பயன்பெறும் வகையில் எல்லோரும் இலவசமாகப் பார்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஏதேனும் ஒரு காட்சியாவது இத் திரைப்படத்தை திரையிட அரசு உத்தரவிட வேண்டும். இத் திரைப்படத்துக்கு அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட வேண்டும்," என்றார் தமிழ்ச்செல்வன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Dr Babasaheb Ambetkar, a film based on Dr Ambetkar's life history will be screened allover the state in 300 plus screens.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more