»   »  வடிவேலுவுக்கு காத்திருக்கும் மனோபாலா

வடிவேலுவுக்கு காத்திருக்கும் மனோபாலா

Subscribe to Oneindia Tamil
Vadivelu
பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் மனோபாலா. இம்முறை அவர் கையில் எடுத்திருப்பது அந்தக் காலத்து காமெடி களேபரமான காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக்.

போன தலைமுறையினர், இப்படி ஒரு படம் இனிமேல் வருமோ என்று இன்றும் புளகாங்கிதப்பட்டுக் கொள்ளும் படம்தான் காதலிக்க நேரமில்லை. நாகேஷ், பாலையா, முத்துராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரின் அட்டகாச காமெடியும், அதிரடி நடிப்பும், அருமையான பாடல்களும், அழகான காட்சி அமைப்பும் இன்றும் கூட நம் கண்களை விட்டு அகலாதவை.

பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரின் முத்திரைப் படங்களில் முக்கியப் படம் இது. காமெடியையும், காதலையும் அவர் கலந்து கொடுத்த விதம், நாகேஷ், பாலையா சம்பந்தப்பட்ட காமெடிக் கலாட்டாக்கள் இன்று வரை ஏ கிளாஸ் ரகத்திலிருந்து இம்மியும் இறங்காதவை.

60களில் இந்தப் படம் மெகா ஹிட் ஆன படம். இப்போது இப்படத்தை மனோபாலா ரீமேக் செய்யவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கத்திற்குத் திரும்பும் மனோபாலாவுக்கு இப்படம் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

அந்தக் காலத்தினரை அக மகிழ வைத்த காதலிக்க நேரமில்லையை, இந்தக் காலத்தினருக்கும் ஏற்றபடி கலக்கலாக கொடுக்கப் போகிறாராம் மனோபாலா.

இளம் நாயகர்கள் பிருத்விராஜ், வினய் ஆகியோர் முத்துராமன், ரவிச்சந்திரன் நடித்த பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். நாகேஷ் வேடத்திற்கு, கருப்பு நாகேஷ் வடிவேலுவை போட தீர்மானித்துள்ளார் மனோபாலா.

வடிவேலு இன்னும் உறுதியாக சொல்லவில்லையாம். இருந்தாலும் வடிவேலுவைத் தவிர வேறு யாரையும் போட விரும்பவில்லையாம் மனோபாலா. மகா நடிகர் பாலையா கேரக்டருக்கு ராதாரவியை நாடியுள்ளார் மனோ.

அனைத்து முக்கியக் கலைஞர்களையும் முடிவு செய்த பின்னர் அதிகாரப்பூர்வமாக படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளாராம் மனோபாலா.

மறுபடியும் சிரிச்சு வயிற்றைப் புண்ணாக்க நாங்க ரெடி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil