twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படம் நல்லால்லேன்னா யார் சொன்னாலும் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள்! - ரஜினி

    By Staff
    |

    படம் நல்லா இல்லேன்னா யார் சொன்னாலும் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள் என்றார் ரஜினிகாந்த்.

    சரத்குமார்-ஸ்ரேயா நடிப்பில், ராதிகா தயாரித்த ஜக்குபாய் படம் வெளியாவதற்கு முன்பே இன்டர்நெட்டில் லீக்காகிவிட்டது.

    இதனால் அதனுடைய டிவிடியும் மக்களுக்கு சர்வசாதாரணமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

    உடனே சரத்குமாரும் அவர் மனைவி ராதிகாவும் முதல்வரிடம் முறையிட்டனர். அவரது உத்தரவின்பேரில், ஒரு இணையதள உரிமையாளர் கோவையில் கைது செய்யப்பட்டார். டிவிடி விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். டிவிடி விற்றவர்களில் ஒருவர் போலீஸ் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை இன்னும் ஒருவரையும் கைது செய்தது போலீஸ்.

    இந் நிலையில் திருட்டு விசிடி ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை, சென்னை போர்பிரேம்ஸ் பிரிவியூ அரங்கில் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் திடீர் சர்ப்ரைஸாக ரஜினி மற்றும் கமல் பங்கேற்றனர்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல், இந்த திருட்டு விசிடி விற்பதால் கிடைக்கும் பணம் தீவிரவாதச் செயல்களுக்குத்தான் துணை போகிறது. எனவே மக்கள் இதனைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

    சேரன் நேற்று பேசியதன் தொடர்ச்சியாக இன்றும் ரசிகர்களை விட்டு விசிடி விற்பவர்களை வெட்டணும், ஒழிக்கணும் என்றார்.

    ஆனால் ரஜினி மட்டுமே மிகச் சிறப்பாகப் பேசினார். அவரது பேச்சு ராதிகா, சரத் குமாருக்கும் கூட குட்டு வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

    திரையுலகினர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பத்திரிகையாளர் கூட்டம் போட்டுக் கொண்டிருக்காமல், ஆரோக்கியமாக ஏதாவது செய்துவிட்டு அதைச் சொல்வது சரியாக இருக்கும் என்பதை வெளிப்படையாகவே கூறினார்.

    கூட்டத்தில் ரஜினி பேசியது:

    இந்த பிரஸ் மீட்டுக்கு வரணும்னு சரத்தும் ராதிகாவும் நேத்திலிருந்து என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. இது ஜக்குபாய் சந்பந்தப்பட்ட பிரஸ் மீட். அங்க நாம எதுக்கு.. என்றுதான் முதலில் யோசித்தேன். திரையுலக ஒற்றுமையைக்கு உங்க சப்போர்ட் வேணும் என்றார்கள். வந்துவிட்டேன்.


    இந்த ஜக்குபாய் திருட்டு விசிடி பத்தி நிறைய பேசினாங்க. அதையெல்லாம் அப்புறமா பார்ப்போம்.

    அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். முதல்ல இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க!.

    இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண உங்களுக்கு இதைவிட நல்ல வாய்ப்பு இல்லை. நீங்க பத்துகோடி கொடுத்து விளம்பரம் பண்ணியிருந்தா கூட கிடைக்காத அளவு பப்ளிசிட்டி இப்போ மீடியா உங்களுக்கு குடுத்திருக்கு. இதை யூஸ் பண்ணிக்கங்க. முதல்ல ரிலீஸ் பண்ணிடுங்க.

    இன்னொன்னு, இந்தக் கதையப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஒரு பிரெஞ்சுப் பட தழுவல்தான் இந்த ஜக்குபாய். இது நான் நடிக்கிறதா இருந்த படம்.

    ஆனா, ஜக்குபாய்னு இந்த டைட்டில் வச்சது சரியில்ல போல... அதனால இந்தப் படத்தை நான் அறிவிச்ச பிறகு மூணு மாசமா ஒரு இன்ச் கூட மூவ் ஆகல. சரி வேண்டாம்னு விட்டுட்டேன்.

    ஆனா கதை நல்லா இருக்கும். இதுல, வர்ற கேரக்டர் அலெக்ஸ் பாண்டியனை விட பத்துமடங்கு பவர்புல்லானது. அந்தக் கேரக்டருக்கு வயசான பிறகுதான், தனக்கொரு மகள் வெளிநாட்ல கோடீஸ்வரியா இருக்கிறது தெரிய வருது. கூடவே, அந்தப் பெண்ணை கொலை பண்ண சிலர் துரத்துவதும் தெரிய வருது.

    ஏன் இப்படி துரத்துறாங்க, எப்படி அதிலிருந்து தப்பிச்சு பெண்ணை இந்தியாவுக்கு கூட்டிட்டு வர்றார் ஹீரோங்கிறதுதான் கதை.

    இன்னொன்னு இந்தப் படத்துல நான் வயசான கெட்டப்ல வர்ற மாதிரி இருக்கும். நமக்கு ஏற்கெனவே வயசாகிப் போச்சி. படத்திலயும் வயசான கெட்டப்பா... இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு சின்னப்பையனா நடிச்சிட்டு அப்புறமா வயசான ரோல்ல நடிக்கலாம்னு நினைச்சேன்.

    கொஞ்ச நாள் கழிச்சி, நான் சரத்தை வச்சி ஜக்குபாய் ஆரம்பிக்கிறேன்னு ரவிக்குமார் சொன்னார். நானும் சரின்னுட்டேன்.

    இப்போ வந்து, இந்தப் படம் திருட்டு விசிடில, இன்டர்நெட்ல வந்துடுச்சின்னு சொன்னாங்க. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு ராதிகாவும் சரத்தும் வருத்தப்பட்டாங்க, நியாயம்தான்.

    ஆனா பாருங்க... இதைவிட ஒரு நல்ல பப்ளிசிட்டி உங்களுக்குக் கிடைக்காது. அஞ்சு கோடி, பத்துகோடி செலவு பண்ணாலும் கூட கிடைக்காத பப்ளிசிட்டி இது.

    இதையும் நீங்க யோசிக்கணும். அதனால இப்பவே படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க. சக்ஸஸ் ஆகிடும்.

    அடுத்து இங்க சிலர் பேசும்போது ரசிகர்களுக்கு காசு கொடுத்து, திருட்டு விசிடி விக்கிறவங்களை அடிக்கச் சொல்லலாம்னு யோசனை சொன்னாங்க.

    நோ நோ... அது தப்பு... லா அண்ட் ஆர்டரை மீறும் செயல். இன்னொன்னு ரசிகர்களை தப்பா பயன்படுத்தக் கூடாது.

    சினிமாவுக்குள்ளிருந்துதான்...

    இந்தப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?. சினிமாவுக்குள்ளிருந்ததான். யரோ பண்ணலை... இங்க இருக்கிற யாரோதான் இந்த வேலைய செய்றாங்க. அதுக்கு மக்களை ஏன் பிளேம் பண்ணனும்?.

    தியேட்டர்லருந்து பிரிண்ட் வெளியில போகுதுன்னு தெரிஞ்சா அந்த தியேட்டரை தடை பண்ணுங்க.

    ஒரு லேப்லருந்து வெளியில போதுன்னு தெரியுதா... அந்த லேப்பை நிப்பாட்டுங்க. எபெக்ட்ஸிலிருந்து போகுதா... அதையும் கட் பண்ணுங்க. சும்மா யாராவது ஒருத்தர் மேல பழிபோடக் கூடாது.

    உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்... படம் நல்லாருந்தாதான் யாரும் பார்ப்பாங்க. நல்லால்லேன்னா, எப்பேர்ப்பட்ட படத்தையும் தூக்கிப் போட்டுடுவாங்க. யார் சொன்னாலும் பார்க்க மாட்டாங்க.

    அதனால திருட்டு விசிடி தடுப்பது எப்படின்னு நமக்குள்ள கூடிப் பேசணும். அதுக்கு பிரஸ்ஸை கூப்பிட்டு என்ன பண்ணப் போறீங்க?. எல்லாவற்றையும் ஆலோசனை செய்து தெளிவா முடிச்சிட்டு பிரஸ்ஸுக்கு சொல்லணும்.

    அப்புறம் இங்க சேரனும் கமலும் ஒரு விஷயம் சொன்னாங்க. 'எங்களுக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. இதைவிட்டுட்டு நாங்க எங்க போவோம்னெல்லாம்' சொன்னாங்க ஒருவேளை நான் முன்ன கண்டக்டரா இருந்ததால, திரும்பவும் கண்டக்டர் வேலைக்கே போயிடுவேன்னு நினைச்சிட்டாங்க. இல்ல... எனக்கும் சினிமாதான் எல்லாம்!" என்றார்.

    விழாவில் முதலில் பேசிய ராதிகாவும், சரத்குமாரும் எங்க நிலைமையைப் பார்த்தீர்களா என்று கண்ணீர் வடித்தனர். ஆனால் ரஜினி பேசியதில் இருவருமே ஆடிப் போனார்கள். சிறிது நேரம் கழித்து கண்ணீர் மூடிலிருந்து கலகல மூடுக்கு தங்களை மாற்றிக் கொண்டனர்.

    ரஜினி பேசும்வரை குதித்துக் கொண்டிருந்த சேரன், ரசிகர்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என அவர் சொன்னதைக் கேட்டதும், சத்தமில்லாமல் வெளியேறினார்.

    பேசி முடித்த பிறகு திரையுலகினரைப் பார்த்து, Am I right? என்று ரஜினி கேட்க, அவர்கள் சூப்பர் தலைவா என்றதும் சிரித்தபடி வெளியேறினார் ரஜினி!.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X