twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆந்திர இடைத்தேர்தலுக்கு பிறகே சிரஞ்சீவி புதிய கட்சி!

    By Staff
    |

    Chiranjeevi
    தெலுங்கு புத்தாண்டு தினமான உகாதியன்று புதிய அரசியல் கட்சியை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தொடங்குவார் என்ற ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பு பொய்யானது. கட்சி தொடங்குவது 2 மாதங்களுக்கு தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

    ஆந்திரத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார். அவரது கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தையும் தேர்ந்தெடுத்திருந்தார்.

    ஆனால் இதற்கு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆந்திர சட்டசபை தேர்தலின்போது திமுக சார்பில் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்படும்போது வீண்குழப்பம் ஏற்படும் என்றும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தனது கட்சியின் சின்னத்தை மாற்ற சிரஞ்சீவி முடிவெடுத்தார். வரும் ஏப்ரல் 7 ம் தேதி தெலுங்கு புத்தாண்டு தினமான உகாதி நாளன்று தனது புதிய கட்சியை சிரஞ்சீவி தொடங்குவார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

    ஆந்திர மக்களும், சிரஞ்சீவி சார்ந்த காப்பு சமூகத்தினரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் நாளைதான் உகாதி. இதுவரை கட்சி தொடர்பான எந்த மூச்சையும் விடாமல் கப் சிப்பென்று இருக்கிறார் சிரஞ்சீவி.

    நாளை கட்சி தொடங்குவது சத்தியமாக சாத்தியமே இல்லை என்றும் பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து சிரஞ்சீவியின் மைத்துனரும் அவரது செய்தித் தொடர்பாளருமான அல்லு அரவிந்த் நிருபர்களிடம் கூறுகையில்,
    புதிய கட்சி தொடங்குவது பற்றி தனது முடிவை இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் அறிவிப்பார். ஆந்திர மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் சிரஞ்சீவிக்கு தெரியும்.

    அரசியலில் குதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் சிரஞ்சீவி இருக்கிறார். எந்த முடிவை எடுத்தாலும் நன்கு யோசித்துத்தான் அவர் தீர்மானிப்பார். ஆனால் அவர் சொந்தமாக கட்சி தொடங்கப்போவதாக தெரிவிக்கவில்லை என்று அல்லு குழப்பியுள்ளார்.

    ஆனால் ஆந்திராவில் தற்போது தெலுங்கானா பகுதியில் நடக்கவுள்ள லோக்சபா இடைத்தேர்தல் அரசியலில் சிக்க விரும்பாமல்தான் சிரஞ்சிவி தயக்கம் காட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது.

    'தனித் தெலுங்கானா'வை வலியறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி.க்கள் ராஜினாமா செய்ததால் காலியான தொகுதிகளுக்கு இந்த இடைத்தேர்தல் நடக்கிறது.

    இப்போது கட்சி தொடங்கினால் தனித் தெலுங்கானா பற்றி சிரஞ்சீவியின் நிலையை தெரிவிக்க வேண்டியிருக்கும். தெலுங்கானாவுக்கு ஆதரவாக இருந்தால் ஆந்திராவின் ராயலசீமா, கோதாவரி பகுதி மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டதால் இடைத்தேர்தலுக்குப் பிறகு கட்சியை தொடங்க சிரஞ்சீவி முடிவெடுத்திருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

    இந்தநிலையில், சிரஞ்சீவியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் தெலுங்கு தேச கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் வித்யாதர் ரெட்டியை அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நீக்கியுள்ளார்.

    அதேபோல், கோதாவரி பகுதியில் சிரஞ்சீவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சத்யநாராயணனும் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    இந்நிலையில் மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ஹரிராம் ஜோகையா சிரஞ்சீவி புதிய கட்சி தொடங்குவதற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த விவகாரம் ஆந்திராவில் ஆளும் காங்கிரசுக்கு புதிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

    பரபரப்பான இந்த சூழ்நிலையில் சிரஞ்சீவியின் புதிய கட்சியை எதிர்பார்த்து ஆந்திரா அரசியல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X