»   »  இந்திரலோகத்தில் .. மாணிக்கம் நாராயணன் திருப்தி

இந்திரலோகத்தில் .. மாணிக்கம் நாராயணன் திருப்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vadivel with Shreya
வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படம் சற்று வித்தியாசமான படம். படத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அப்படத்தைத் தயாரித்த மாணிக்கம் நாராயணன் திருப்தி தெரிவித்துள்ளார்.

செவன்த் சேனல் நிறுவனத்தின் அதிபரான மாணிக்கம் நாராயணன் தமிழ் திரையுலகுடன் நீண்ட காலமாக தொடர்பு கொண்டிருக்கக் கூடியவர். பல சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்து வருபவர்.

தற்போது அவர் திரைப்படத் தயாரிப்பில் முன்பை விட தீவிரமாக இறங்கியுள்ளார். கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தை காஜா மொஹைதீன் தயாரிக்க தடுமாறிக் கொண்டிருந்தபோது தைரியமாக வாங்கி தயாரித்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது.

தற்போது அவரது தயாரிப்பில் வெளியாகியுள்ள படம்தான் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். படம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் தட்ஸ்தமிழுக்காக அவரை சந்தித்தோம்.

நம்முடன் மாணிக்கம் நாராயணன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்:

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ரிசல்ட் உங்களுக்கு திருப்தி தந்துள்ளதா?

கண்டிப்பாக. நல்ல படத்தை எடுத்த திருப்தி எனக்கு உள்ளது. சமூகத்தில் இன்று தேவைப்படக் கூடிய பல நல்ல கருத்துக்கள் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளன. இப்படம் சற்று வித்தியாசமானது. உலகெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு தயாரிப்பாளராக வடிவேலுவின் நடிப்பு எனக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது.

படத்தின் ஒரு வரிக் கதை வித்தியாசமாக உள்ளது. ஆனால் திரைக்கதையில் மேலும் விறுவிறுப்பு இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

அப்படி நினைக்கவில்லை. திரைக்கதையும், படமாக்கப்பட்ட விதமும் ரொம்ப நன்றாகவே உள்ளது. எனக்கு அதில் பரம திருப்திதான்.

வடிவேலு படம் என்பதால் பெரும்பாலான ரசிகர்கள் வெறும் காமெடியை மட்டும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வெறும் துணுக்குத் தோரணமாக ஒரு படத்தைக் கொடுக்க நான் விரும்பவில்லை.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்காக அனைத்து மீடியாக்கும் என்னைப் பாராட்டியிருக்க வேண்டும் என நான் நினைத்தேன். ஆனால் சிலர் என்னை சபித்து விமர்சனம் செய்துள்ளனர். சிலர் மிகக் கடுமையான முறையிலும் விமர்சனம் செய்துள்ளனர்.

சமூகக் கருத்துக்களுடன் கூடிய படங்களை இப்போது எத்தனைத் தயாரிப்பாளர்கள் தரத் தயாராக உள்ளனர்.? ஆனால் வனமுறை, ஆபாசம் ஆகியவற்றுடன் கூடிய படங்ளைத்தான் மீடியாக்காரர்கள் தூக்கி வைத்து பாராட்டுகின்றனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

கடுமையாக விமர்சிக்கக் கூடிய அளவுக்கு இப்படம் மோசமானதாக இல்லை. ஆனால் சில ஆன்லைன் மீடியாக்கள் கடுமையான விமர்சனத்தை எழுதிய பிறகுதான் மற்றவர்களும் இப்படி விமர்சிக்க ஆரம்பித்தனர். சில ஆங்கில நாளிதழ்களும் கூட கடுமையாக விமர்சித்துள்ளன.

விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, ஆங்கில மீடியாக்களுக்கு இந்தப் படம் புரியவில்லை. அவர்கள் எழுதிய விமர்சனங்களைப் பார்த்தாலே அது புரியும்.

விமர்சனங்களை எழுதியவர்கள் ஒன்று தமிழை தெரியாதவர்களாக இருக்க வேண்டும், அல்லது படத்தை சரியாக பார்க்காதவர்களாக இருக்க வேண்டும்.

இந்திரலோகத்தில் .. படத்தில் பல இடங்களில் தூய தமிழில் வசனங்கள் இடம் பெற்றிருக்கும். அதை தமிழர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யார் என்ன கருத்து சொன்னாலும் அதை மறுக்க மாட்டேன், மாறாக வரவேற்கிறேன்.

படத்தில் காமெடி சரியாக இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. ஏன் இப்படி ...

இதுவும் மீடியாக்களின் தவறான கண்ணோட்டம்தான். வடிவேலுவை வைத்து காமெடிப் படம் மட்டுமே கொடுக்க வேண்டும் சிலர் ஒரு வட்டத்தைப் போட்டு வைத்துக் கொண்டுள்ளனர். அதை தவறு என்று நிரூபிக்க நான் விரும்பினேன்.

வடிவேலு காமெடியன் மட்டுமல்ல. பல்வேறு திறமைகளும் அடங்கிய பன்முகக் கலைஞர். அவரை ஒரு மாறுபட்ட கோணத்தில் இப்படம் காட்டியது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை காமெடிப் படமாக பார்க்காதீர்கள். இது முற்றிலும் வித்தியாசமான படம். வடிவேலு படமாக பார்க்காமல், கமல் படமாகவோ அல்லது விஜய் படமாகவோ அல்லது வேறு ஹீரோவினுடைய படமாகவோ நினைத்துக் கொண்டு பாருங்கள்.

ஆனால் வடிவேலு படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன்தான் தியேட்டர்களுக்கு மக்கள் வருகிறார்கள். அது அவர்களின் தவறா? இது வழக்கமான வடிவேலு படம் இல்லை என்று நீங்கள் முன்கூட்டியே பப்ளிசிட்டி செய்திருக்கலாமே?

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இனிமேல், இதுபோன்ற படங்களை எடுக்கும்போது, இந்தக் கோணத்தில் நான் யோசித்துப் பார்ப்பேன். மக்களை படத்திற்கேற்ப ஆயத்ததப்படுத்துவதும் அவசியமானதுதான்.

பாக்ஸ் ஆபிஸில் படத்திற்கு ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?

ஒப்பனிங் அசாதாரணமாக இருந்தது. அதே டிரெண்ட் 5வது நாள் வரை தொடர்ந்தது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான். குறிப்பாக வளைகுடா நாடுகள், இலங்கையில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோல தமிழகத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில், சத்யம் தியேட்டரில், திங்கள்கிழமை வரை அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

ஏவி.எம். ராஜேஸ்வரி, ஆல்பர்ட், மாயாஜால் ஆகிய தியேட்டர்களும் மக்கள் ஆரவாரத்தோடு படத்தை பார்த்து மகிழ்கின்றனர்.

கோவையிலேயே மிகப் பெரிய தியேட்டரான அர்ச்சனாவில், ஞாயிற்றுக்கிழமை இரவுக் காட்சி அரங்கு நிறைந்த காட்சியாக ஓடியுள்ளது. சமீப காலத்தில் இது பெரும் சாதனையாக அங்கு கூறப்படுகிறது.

ராகம் தியேட்டரில், திங்கள்கிழமையன்று, ஞாயிற்றுக்கிழமை வசூலானதை விட கூடுதலாக ரூ. 2000 வசூலித்துள்ளது. இப்படி எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நாகர்கோவில், பண்ருட்டி, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் படம் பெருத்த வரவேற்போடு ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இப்படத்தை வெற்றிப் படமாக நீங்கள் சொல்ல வருகிறீர்கள்?

அதில் என்ன சந்தேகம். இந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட் படம், இந்திரலோகத்தில் நா. அழகப்பன். மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நான் ஒரு படம் செய்யப் போகிறேன் என்றார் மாணிக்கம் நாராயணன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil