twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பசுபதி 50, வடிவேலு 25, நான் 25- ரஜினி

    By Staff
    |

    Rajini, K Balachander and P Vasu
    குசேலன் படத்தில் பசுபதியின் பங்கு 50 சதவிகிதம், வடிவேலுவின் பங்கு 25 சதவிகிதம், என்னுடைய பங்கு 25 சதவிகிதமாக இருக்கும். ஆனால் இந்தக் கதை நடப்பது என்னைச் சுற்றித்தான் என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    சிவாஜிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படமான குசேலனின் பூஜை இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் நடந்தது. இந்தப் பூஜைக்கு தென்னிந்திய திரையுலகமே திரண்டு வந்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பிரபல நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களே நின்றிருந்தனர்.

    நாடு முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட நிருபர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், இண்டர்நெட் பத்திக்கையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். இரண்டு பிரபல தொலைக்காட்சிகள் இந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பும் செய்தன.

    9.30-க்கு ரஜினியின் கார் ஏவி.எம்முக்குள் நுழைய, பூஜை தொடங்கியது. சில நிமிடங்களில் பூஜை முடிந்துவிட, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்த ரஜினி, இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சகஜமாகப் பேசினார்.

    அவர் அளித்த பேட்டி-

    எனது குருநாதர் கேபி சார் படத்தில் மீண்டும் நடிப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. கேபி சாரும் கவிதாலயாவும் எனக்கு பணம் மட்டுமல்ல, புகழும் தருகிற மாதிரியான படங்களைத்தான் இதுவரை தந்திருக்கிறார்கள்.

    நான் நடித்த படங்களில் படித்தவர்களும் பெரியவர்களும் பெரிதும் பாராட்டிய படம் ராகவேந்திரா. நெற்றிக்கண் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் திலகம் சிவாஜி சாரும், கன்னட நடிகர் ராஜ்குமாரும் என்னைப் பாராட்டிய போது பெருமையாக இருந்தது.

    எனக்கு சூப்பர்ஸ்டார் எனற அந்தஸ்தைத் தந்த படம் அண்ணாமலை. முத்து படமோ என்னை இன்டர்நேஷனல் ரேஞ்சுக்கு கொண்டு போயிடுச்சி. என் படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைச்சது அந்தப் படத்துலருந்துதான். எனவே என்னோட திரையுலக வாழ்க்கையில எல்லா நேரத்திலயும் கேபி சார் படங்கள் முக்கிய திருப்பு முனையா அமைஞ்சிருக்கு.

    இப்ப குசேலன் பத்தி பேசலாம்...

    இந்தப் படத்தில் என் வேடம் குறித்து நிறைய பேசறாங்க. இந்தப் படத்துல எனக்கு மிக முக்கியமான வேடம். என் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ரொம்பப் பிடித்தமான ஒரு வேடத்துல நான் நடிக்கிறேன். படம் ரிலீசான பிறகு ரொம்பவும் பேசப்படப் போகிற வேடமாக அது இருக்கும்.

    ஆனா கதைப்படி, இந்தப் படத்துல, பசுபதியோட ரோல் 50 பர்சென்ட், வடிவேலுக்கு 25 பர்சென்ட். எனக்கு 25 பர்சென்ட் (சிரிப்பு).

    அசோக்ராஜ் எனும் பெயரில் வரும் இந்தப் பாத்திரமும் எனக்கு முக்கிய திருப்பு முனையா அமையும்.

    இந்தப் படத்துல கதாநாயகி மீனா. முதல்ல அவங்க என்கூட குழந்தையா நடிச்சாங்க, அப்புறம் ஜோடியா நடிச்சாங்க, இப்ப அம்மாவா.... (பலமாக சிரித்து விட்டு) எனக்கில்லீங்க, இந்தப் படத்துல இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கிறாங்க மீனா.

    படத்தோட க்ளைமாக்ஸ்தான் மிக முக்கியம். சந்திரமுகிக்கு நிகரான உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸை இந்தப் படத்தில் பார்க்கப் போறீங்க. இந்தப் படம் ரொம்ப நல்லா வரும்னு எல்லாருக்கும் சொல்லிக்கிறேன், என்றார்.

    இயக்குநர் பி.வாசு கூறுகையில், இந்தப் படம் ரஜினி சாரைச் சுற்றித்தான். அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேணாம். அவருக்கும் பிடித்த மாதிரி, அவரது ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி அந்த பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கு. மற்றபடி இதில் அவருக்கு சின்ன வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. சந்திரமுகி மாதிரி இது ரஜினி சார் படம். அவ்வளவுதான்... என்றார் வாசு.

    கே.பாலச்சந்தர் வாழ்த்திப் பேசினார்.

    ரஜினியின் பேட்டிக்குப் பிறகு புகைப்படக்காரர்கள் நெரிசலால் அங்கிருந்து ரஜினியால் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. உடனே சிறிது நேரம் நின்ற ரஜினி, ஓகே படம் எடுத்துக்கோங்க என்று புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார். சில நிமிடங்களுக்குப் பிறகே புறப்பட்டுச் சென்றார்.

    ரஜினிக்கு 2 சண்டை

    முதலில் ஒரிஜினல் கதையை மாற்றாமல் எடுக்க வேண்டும் என்று கூறி வந்த ரஜினி பின்னர் பி.வாசு கூறிய காரணங்களைக் கேட்டு அவரது கருத்துக்கு உடன்பட்டுள்ளாராம். இதையடுத்து ரஜினியின் கேரக்டர் படத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாம்.

    அதன்படி படத்தில் ரஜினிக்கு 2 சண்டைக் காட்சிகள் உண்டாம். இதில் ஒரு சண்டையை தளபதி திணேஷ் கவனிக்கிறார்.

    மேலும் படத்தில் ஐந்து பாடல்களும் இருக்கிறது. இதில் நான்கு பாடல்களில் சூப்பர் ஸ்டாராக ஆடிப் பாடுகிறார். நயனதாராவுடன் 2 டூயட் பாட்டுக்களும் உண்டாம்.

    சண்டைக் காட்சிகள் மற்றும் டூயட் பாடல்களைப் படமாக்க மேலும் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி. முன்னதாக அவர் 15 நாள் கால்ஷீட் மட்டுமே கொடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

    'சிவாஜி' தந்த போனஸ்!!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்குப் பெரும் வசூல் கிடைத்ததைத் தொடர்ந்து ஏவி.எம். நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் போனஸாக தந்துள்ளது.

    சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய பிரமாண்ட படமான சிவாஜி உலகமெங்கும் வசூலில் புதிய சரித்திரம் படைத்தது எல்லோரும் அறிந்ததே.

    இதுவரை தமிழில் வெளியான ஒரு படம் இந்த அளவுக்கு வசூலில் சாதனை படைத்ததில்லை. மேலும் வெளிநாடுகளிலும் கூட சிவாஜிக்கு பெரும் வரவேற்பும், வசூலும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், சிவாஜி படத்தில் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை தனது நிறுவன ஊழியர்களுக்கு போனஸாகக் கொடுத்திருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.

    அங்கு பணிபுரியும் 347 ஊழியர்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் போனஸாக வழங்கியுள்ளது ஏவிஎம்.

    இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து போனஸ் தொகையையும் கொடுத்தபோது ஊழியர்கள் அனைவரது கண்களிலும் ஆனந்த மழை!

    லாபத்தை ஊழியர்களோடு பகிர்ந்து கொண்ட ஏவி.எம்மைப் பாராட்டுவோம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X