twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'உலக நாயகி ஸ்ருதி!'-பாலச்சந்தர்

    By Staff
    |

    Kamal, Sruthi, K Balachander and Gowthami
    கமல் மகள் ஸ்ருதி இசையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வல்லமை பெற்றவர்... ரஹ்மானைப் போல சர்வதேச அளவில் பல சாதனைகள் படைத்து உலக நாயகியாக வருவார் ஸ்ருதி என்று வாழ்த்தினார் இயக்குநர் கே பாலச்சந்தர்.

    ஸ்ருதி ஹாசன் முதல்முறையாக இசையமைத்த கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த விழாவுக்கு கமலின் குரு கே பாலச்சந்தர், கமல் நடித்த முதல் படமான களத்தூர் கண்ணம்மாவைத் தயாரித்த ஏவிஎம் நிறுவன அதிபர் சரவணன் மற்றும் கமல்ஹாசனின் மதிப்புக்குரிய இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.

    விழாவில் தன் மகளை இசையமைப்பாளராக முறைப்படி அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். பின்னர் எம்எஸ்வியின் காலில் விழுந்து தந்தையும் மகளும் ஆசிபெற்றனர். ஸ்ருதிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார் எம்ஸ்வி.

    விழாவில் பேசிய கே பாலச்சந்தர், "இது இரண்டு யுகங்களின் சந்திப்பு. ஸ்ருதிஹாசன் இசையமைத்த பாடல்களை கமல் எனக்கு திரையிட்டு காட்டினார். அதைப்பார்த்துவிட்டு, இந்த பெண் இந்திய அளவில் புகழ் பெறுவார் என்று சொன்னேன். வருகிற நூற்றாண்டில் ஸ்ருதிஹாசன் மிகப்பெரிய இசையமைப்பாளராக இருப்பார். அவர், உலக நாயகியாக வருவார்.

    ஒரு விழாவில் நான் பேசும்போது, கமலஹாசனுக்கு வேகத்தடை வேண்டும் என்றேன். அவர் பேசும்போது, வேகத்தடையை நான் தாண்டி போய்விடுவேன் என்றார். வேகத்தடை, தாண்டுவதற்காக போடப்படுவது அல்ல. மெதுவாக செல்லவேண்டும் என்பதற்காக போடப்படுவது.

    ஸ்ருதிஹாசன், பவுண்டரியை தாண்ட வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டரியை தாண்டி ஆஸ்கார் விருது பெற்றது போல் ஸ்ருதியும் பவுண்டரியை தாண்டி, புகழ் பெற வேண்டும்..", என்றார் பாலச்சந்தர்.

    ஏவிஎம் சரவணன் பேசுகையில், "உலக சினிமாவின் தரத்துக்கு தமிழ் சினிமாவை உயர்த்திய நாயகன் கமல்ஹாசன் மட்டுமே", என்றார்.

    கமல் பெருமிதம்...

    கமல்ஹாசன் பேசுகையில், "எனக்கு தெரிந்த இசை, ரசிகர்களின் கைதட்டல்தான். நான் கை காட்டினால், உடனே நிறுத்தி விடுவார்கள். எனக்கு புரிந்தது, இந்த இசைதான். என் மகள் ஸ்ருதி, இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். இந்த விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களை எல்லாம் அழைத்து வந்து பேச வைத்திருக்க வேண்டும். நேரம் கருதி செய்யவில்லை. அதற்கு இன்னொரு மேடை கிடைக்கும்.

    ஏவி.எம்.சரவணன் 4-வது தலைமுறையாக என் மகளை இசையமைப்பாளராக பார்க்கிறார். ஏவி.எம்.சரவணன் இரண்டாவது தலைமுறை. நான் மூன்றாவது தலைமுறை. என் மகள் சுருதி நான்காவது தலைமுறை. நான்காவது தலைமுறையை பார்க்க வைத்ததற்காக,ஸ்ருதிக்கு நன்றி.

    அக்ஷரா வயதில், என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி விட்டார், பாலசந்தர் சார். அவருடைய கண்டுபிடிப்பு நான் என்று சொல்வதை விட, அவர் என்னைக் கண்டுபிடித்தார் என்று சொல்வது சரியாக இருக்கும். அடுத்த தலைமுறை வரை என்னை கொண்டு வந்ததற்காக, அவருக்கு என் நன்றி.

    கவுதமி...

    கவுதமி இங்கே பேசும்போது, ஸ்ருதியை இசையமைப்பாளராக்கியது என் கனவு, திட்டம் என்றார். இரண்டும்தான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அந்த அளவுக்கு ஸ்ருதியின் இசை நன்றாக வந்திருப்பதில், மகிழ்ச்சி.

    என் ரசிகர்கள் முன்னிலையில் ஸ்ருதியை அறிமுகம் செய்வதில், எனக்கு பெருமை. 4 வயதில், களத்தூர் கண்ணம்மா படத்தில் வசனம் சொல்லிக் கொடுப்பதில் இருந்து என்னுடன் இருந்தவர் எங்க அண்ணன் சந்திரஹாசன். இன்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்திருப்பதில் பெருமைதான். இந்த பயணம் தொடரும்...', என்றார்.

    நிகழ்ச்சிகளை கவுதமி தொகுத்து வழங்கினார்.

    ஸ்ருதிஹாசன் நன்றி கூறுகையில், தன்னுடைய கனவு நிறைவேறியதில் கவுதமிக்கு முக்கிய பங்குண்டு என்றும், அவர் தன்னை மிகவும் உற்சாகப்படுத்தியதாகவும் கூறினார்.

    கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் விழாவுக்கு வந்திருந்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X