»   »  சிறந்த நடிகர் விருது பெறுவானா தர்ஷீல்?

சிறந்த நடிகர் விருது பெறுவானா தர்ஷீல்?

Subscribe to Oneindia Tamil
Dharsheel
'தாரே ஜமீன் பர்' படத்தில் தனது அசத்தல் நடிப்பால் எல்லோரையும் கண் கலங்க வைத்த சிறுவன் தர்ஷீல் சபாரியின் பெயர், பிலிம்பேர் விருதுக்கான சிறந்த நடிகர் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தர்ஷீல் மிகவும் குறைந்த வயதில் சிறந்த நடிகர் விருதைப் பெற்று உலக சாதனை படைப்பானா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

53வது பிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகர் விருதுக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் தர்ஷீல் சபாரியும் ஒருவர்.

முதலில் தர்ஷீல் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. வேறு பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான். இதனால் கோபமடைந்த தர்ஷீல், நான் அமீர் கான், ஷாருக்கானுக்கு சற்றும் குறைந்தவன் இல்லை. மிகவும் சிரமப்பட்டுத்தான் நடித்துள்ளேன். எனவே எனது பெயரை சிறந்த நடிகர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று சண்டையிட்டான்.

இதையடுத்து இப்போது சிறந்த நடிகர் பிரிவில் தர்ஷீல் பெயரை சேர்த்து விட்டனர். இது எனது தன்னம்பிக்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று தர்ஷீல் தனது மொச்சைப் பற்கள் தெரிய சிரித்தபடி கூறியுள்ளான்.

'தாரே ஜமீன் பர்' படம் டிஸ்லெக்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கதை. இஷான் என்ற கதாபாத்திரத்தில் தர்ஷீல் நடித்திருந்தான். அமீர் கான் இயக்கி, தயாரித்த அந்தப் படத்தில் அமீரையும் மிஞ்சும் வகையில் இருந்தது தர்ஷீலின் நடிப்பு.

படம் பார்த்த அனைவரையும் அழ வைத்தான். தான் மற்ற சிறுவர்களைப் போல இல்லாவிட்டாலும் கூட மாற்றுத் திறமையால் அவர்களை மிஞ்சி சாதனை படைக்கும் சிறுவனாக நடித்திருந்த தர்ஷீல் அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டியிருந்தான்.

இப்படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் கண்ணீர் விட்டது நிஜம். அதற்கு பாஜக தலைவர் அத்வானியும் விதிவிலக்கல்ல. அந்த அளவுக்கு அனைவரையும் உருக வைக்கும் வகையில் படத்தை இயக்கியவர் அமீர் கான். இது அமீரின் முதல் டைரக்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சிக்கு காட்சி குழந்தைகளின் சேட்டைகள், டிஸ்லெக்சி பிரச்சனை உள்ள குழந்தையின் சிக்கல்கள், ஒரு நல்ல ஆசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என படம் பார்ப்பவர்களை உறையச் செய்திருந்தார் அமீர்.

இப்படத்தில் நடிப்பதற்காக பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளார் தர்ஷீல். மும்பையில் உள்ள கிரீன்லான்ஸ் உயர் நிலைப் பள்ளியில்தான் படிக்கிறார் தர்ஷீல். பள்ளியில் உள்ள அத்தனை பேரின் செல்லமும் இவர். காரணம், வாயைத் திறந்து சிரித்தால் வெளியில் பளிச்செனத் தெரியும் பெரிய பற்கள். இது எனக்கு ரொம்பப் பெருமையாக இருப்பதாக தர்ஷீல் சிரித்தபடி கூறுகிறான்.

படப்பிடிப்பின்போது தினசரி காலை 5 மணிக்கெல்லாம் எழுப்பி விட்டு விடுவார்களாம். இரவு 10 மணிக்குத்தான் தூங்க விடுவார்களாம். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு வாத்தியாரும் கூடவே இருப்பாராம். கிடைக்கிற கேப்பில் பாடம் நடத்தி விடுவாராம் அந்த வாத்தியார். இதனால் படத்தில் நடித்ததோடு, பாடத்தையும் கோட்டை விட்டு விடாமல் பார்த்துக் கொண்டாராம் தர்ஷீல். இந்த ஏற்பாட்டை செய்தது தயாரிப்பாளர் அமீர் கான்.

இப்படிக் கஷ்டப்பட்டு நடித்து, சாதாரண கேட்டகிரியில் சேர்த்தால் தர்ஷீலுக்கு கோபம் வராமல் என்ன செய்யும். அதனால்தான் பொங்கி விட்டான். இப்போது அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதால், அமீர் கான், அமிதாப் பச்சன், ஷாருக் கான் போன்ற ஜாம்பவான்களுடன் போட்டி போட்டு புதிய சாதனை படைத்துள்ளான் தர்ஷீல்.

இந்த விருது தர்ஷீலுக்குக் கிடைத்தால் புதிய உலக சாதனையும் அவருக்குக் கிடைக்கும். அதாவது தர்ஷீலுக்கு வயது இப்போது 9தான் ஆகிறது. இதற்கு முன்பு பேப்பர் மூன் (1973) என்ற படத்தில் நடித்ததற்காக டத்தும் ஓ நீல் என்ற 10 வயது சிறுமி சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

தர்ஷீலுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தால், உலகிலேயே மிகவும் குறைந்த வயதில் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற முதல் கலைஞர் என்ற பெருமையும், சாதனையும் கிடைக்கும்.

தாரே ஷமீன் பர் படத்தில் ஓவியப் போட்டியில் ஆசிரியர் அமீர் கானை வெல்வான் தர்ஷீல். நிஜத்திலும் வென்றால் தர்ஷீலை விட அமீர் தான் மிகவும் பெருமைப்படுவார். குழந்தைகள் ஜெயித்தால் அதை விட என்ன சந்தோஷம் வேண்டும்...!!

(இந்திப் படம் பார்க்காதவர்கள் இந்த மிக நல்ல படத்தை 'மிஸ்' பண்ணக் கூடும். எதையெதையோ தமிழில் ரீமேக் செய்யும் புண்ணியவான்கள் இதையும் ரீமேக் செய்தால் தமிழில் நல்ல படங்களை வரவேற்போருக்கு பெரிய உதவியாக இருக்கும்)

பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல்:

சிறந்த படம்:

தாரே ஜமீன் பர், சக்தே இந்தியா, குரு, ஜப் வி மெட், ஓம் சாந்தி ஓம்.

சிறந்த இயக்குநர்:

அமீர் கான் (தாரே ஜமீன் பர்), அனுராக் பாசது (லைப் .. இன் ஏ மெட்ரோ), பாரா கான் (ஓம் சாந்தி ஓம்), இம்தியாஸ் அலி (ஜப் வி மெட்), மணிரத்னம் (குரு), ஷிமித் அமீன் (சக்தே இந்தியா).

சிறந்த நடிகர்:

தர்ஷீல் சபாரி (தாரே ஜமீன் பர்), அபிஷேக் பச்சன் (குரு), ஷாருக்கான் (ஓம் சாந்தி ஓம், சக்தே இந்தியா), ஷாகித் கபூர் (ஜப் வி மெட்), அக்சய் குமார் (நமஸ்தே லண்டன்)

சிறந்த நடிகை:

திபிகா படுகோன் (ஓம் சாந்தி ஓம்), ஐஸ்வர்யா ராய் பச்சன் (குரு), கரீனா கபூர் (ஜப் வி மெட்), மாதுரி தீக்சித் (ஆஜா நாச்லே), ராணி முகர்ஜி (லாகா சுனாரி மெய்ன் தாக்), வித்யா பாலன் (பூல் புலய்யா)

சிறந்த துணை நடிகர்:

அமீர் கான் (தாரே ஜமீன் பர்), மிதுன் சக்ரவர்த்தி (குரு), அனில் கபூர் (வெல்கம்), இர்பான் கான் (லைப் இன் ஏ மெட்ரோ), ஷ்ரேயாஸ் தல்பாடே (ஓம் சாந்தி ஓம்)

சிறந்த துணை நடிகை:

கொங்கனா சென் சர்மா (லைப் இன் ஏ மெட்ரோ, லாகா சுனாரி மெய்ன் தாக்), ராணி முகர்ஜி (சாவரியா), ஷில்பா சுக்லா (சக்தே இந்தியா), டிஸ்கா சோப்ரா (தாரே ஜமீன் பர்).

சிறந்த இசையமைப்பாளர்:

ஏ.ஆர்.ரஹ்மான் (குரு), மோன்டி சர்மா (சாவரியா), பிரீத்தம் (ஜப் வி மெட், லைப் இன் ஏ மெட்ரோ), விஷால் - சேகர் (ஓம் சாந்தி ஓம்).

சிறந்த பாடலாசிரியர்:

குல்ஸார் (குரு), ஜாவேத் அக்தர் (ஓம் சாந்தி ஓம்), பிரசூன் ஜோஷி (தாரே ஜமீன் பர்), சமீர் (சாவரியா), விஷால் தல்தானி (ஓம் சாந்தி ஓம்)

சிறந்த பின்னணிப் பாடகர்:

ஏ.ஆர்.ரஹ்மான் (குரு), கேகே (ஓம் சாந்தி ஓம்), ஷான் (சாவரியா), சோனு நிகாம் (ஓம் சாந்தி ஓம்), சுக்வீந்தர் சிங் (சக்தே இந்தியா).

சிறந்த பின்னணிப் பாடகி:

ஷ்ரேயா கோஷல் (குரு, ஜப் வி மெட்), சுனிதி செளகான் (ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிட்டெட், ஆஜா நாச்லே), ஆலிஷா சினாய் (கே லவ் ஸ்டோரி ஹை)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil