»   »  சென்னையில் பிரெஞ்சு பட விழா

சென்னையில் பிரெஞ்சு பட விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Suhasini
சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நான்கு நாள் பிரெஞ்சு திரைப்பட விழா இன்று தொடங்கியது. நடிகை சுஹாசினி மணிரத்தினம் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கார்ட்டூனிஸ்ட் மற்றும் திரைக்கதை ஆசிரியர் மதன் கலந்து கொண்டார்.

இந்த படவிழாவில் திரையிடப்படும் அனைத்துப் படங்களும் அட்டகாசமான சிக்ஸ் டிகிரீஸ் தியேட்டரில் திரையிடப்படுகிறது.

விழாவில் பேசிய மதன், பிரெஞ்சுப் பட விழாவில் இடம் பெறும் படங்களை திரையிட சத்யம் தியேட்டர்ஸ் எடுத்துக் கொண்ட முயற்சிகளை பாராட்டினார். அவர் கூறுகையில், நம்மில் பலருக்கு ஐரோப்பிய படங்களின் அழகும், படமாக்கமும் தெரியாது. இப்போது அதற்கான வாய்ப்பை சத்யம் தியேட்டர்ஸ் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இது எதிர்காலத்திலும் தொடரும் என்றார்.

சுஹாசினியும் சத்யம் தியேட்டர்ஸைப் பாராட்டிப் பேசினார். மேலும், தனக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நட்பையும், உறவையும் விவரித்தார். தான் அலயன்ஸ் பிரான்காய்ஸின் முன்னாள் மாணவி எனவும் பெருமையாக கூறினார்.

மொத்தம் 7 படங்கள் இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில் அஸூரே எட் அஸ்மாரா என்பது கார்ட்டூன் படமாகும். இன்று மாலை அது திரையிடப்படுகிறது.

பிரெஞ்சுப் படத் தொடக்க விழாவில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள், அலயன்ஸ் பிரான்காய்ஸ் அமைப்பைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

சென்னையில் சமீப காலமாக பல்வேறு நாட்டுத் திரைப்பட விழாக்கள் நடந்து வருவது அதிகரித்துள்ளது. சமீபத்தில் இலங்கைத் திரைப்பட விழா நடைபெற்றது. அதை ராதிகா தொடங்கி வைத்தார். தற்போது பிரெஞ்சுப் பட விழா தொடங்கியுள்ளது.

இதேபோல நல்ல தமிழ்ப் படங்களின் விழாவையும் நம்மவர்கள் நடத்துவது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக பெரியார், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற நல்ல படங்களை உள்ளடக்கிய பட விழாக்கள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என்ற நல்ல பட ஆர்வலர்களின் ஆவலாக உள்ளது.

நடத்துவார்களா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil