For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து வந்த ரஜினி! - வைரமுத்து

By Shankar
|

Vairamuthu and Rajini
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினியை விஞர் வைரமுத்து சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

ரஜினியின் உறவினர் தவிர்த்து, வெளிநபர்களில் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசிய இரண்டாமவர் வைரமுத்து. இவருக்கு முன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார்.

ரஜினியுடனான தனது சந்திப்பு குறித்து வைரமுத்து குமுதம் பத்திரிகைக்கு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் சில பகுதிகள்:

120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன். பரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது.

வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன்.

எத்தனை வதந்திகள்! எத்தனை தொலைபேசி அழைப்புகள்!

'வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்" என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: 'புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்."

பொய்களில் பிறந்த கற்பனைகளையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிட்டு நிஜத்தைப் போல நிமிர்ந்து வெளிவந்துவிட்டார் ரஜினி.

மருத்துவத்தின் அறிவும் மனிதர்களின் அன்பும் அவரை இன்று மீட்டெடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டன கண்களில்.

நோயின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டாலும் அது பிடித்த பிடியின் தடம் ஆங்காங்கே பதிந்திருக்கிறது உடம்பில். ஆனால், மேகம் விலகிய இடுக்கில் சூரியன் சுடர்வி டுவது மாதிரி ஜொலிக்கின்றன அவர் கண்கள்.

அவர் புன்னகையை மறைக்காத இளந்தாடி முளைத்திருக்கிறது முகத்தில். பிள்ளை பெற்ற பெண்ணை அடிவயிற்றுச் சுருக்கங்கள் அடையாளம் காட்டுவதுபோல் சின் னதாய்ச் சாட்சி சொல்கிறது வடிந்தும் வடியாத வீக்கம்.

வெள்ளைப் பட்டையிட்ட கறுப்பு நீளக்கால்சட்டையும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.

பழைய ரஜினியில் தொண்ணூறு விழுக்காடு பார்த்தேன். ஆனால் சொல்லில் அதே அழுத்தம். அசைவுகளில் அதே வேகம். உரையாடலில் அதே உற்சாகம். சிரிப்பில் அதே தெறிப்பு.

''ராணா படத்தின் கதை விவாதத்தில் இந்த வாரம் கலந்து கொண்டீர்களாமே? ரவிகுமார் சொன்னார்.""

''ஆமா: சில மாறுதல்களோடு படப்பிடிப்பைத் தொடங்கவேண்டியிருக்கிறது.""

''சில மாதங்கள் கழிந்தாலும் பரவாயில்லை. முழு பலம் பெற்று உங்கள் உடலே உங்களுக்குக் கட்டளையிடும்போது களத்துக்கு வாருங்கள். நீங்கள் தொடாத உயரமில்லை; அடையாத வெற்றியில்லை; சேர்க்காத செல்வமில்லை. இனி உடல்நலம்தான் முக்கியம்.""

வாய்விட்டுச் சிரித்தார் ரஜினி. பழைய சிரிப்பு; பளிச்சென்ற சிரிப்பு; தங்கச் சில்லறை அள்ளிப் பளிங்குத் தரையில் எறிவது மாதிரி கலகலவென்ற சிரிப்பு.

''அது எப்படி பாலசந்தர் சாரும் சோ சாரும் நீங்களும் கூடிப் பேசியதைப் போல் ஒரே கருத்தைச் சொல்கிறீர்கள்?""

''அன்புக்கு வாய்கள்தான் வேறு வேறு; வார்த்தைகள் ஒன்று.""

''ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை நேரும்; இந்த நோயினால் நீங்கள் அடைந்த நன்மையென்ன?""

''மனைவி மக்களின் அன்பை அனுபவித்தேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் பேரன்பின் பெருக்கத்தை அறிந்துகொண்டேன். இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வை மறுபரிசீலனை செய்கிறேன்.""

மது - புகை இரண்டிலிருந்தும் அவர் முற்றிலுமாக விடுபட்டுவிட்டார். ரசிகக் கண்மணிகளே! மதுவையும் புகையையும் தொடாதவர்கள் தொடாதீர்கள்; தொட்டவர்கள் விட் டுவிடுங்கள்.

அரசியல் நோக்கித் திரும்பியது பேச்சு.

இந்நாள் முதலமைச்சர், அவரிடம் பாசத்தோடு பேசிய பரிவைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடல் பத்திரிகையில் மறுநாள் பதிவான பிறகு முன்னாள் முதலமைச்சரோடு ரஜினி பேசியிருக்கிறார். பத்திரிகையில் வந்த உரையாடலைக் கண்டுகொள்ளாமல் கண்ணியம் காத்து அன்பு காட்டிய கலைஞரின் நாகரிகத்தைப் புகழ்ந்து சொன்னார்.

90 நிமிடங்களுக்கு மேல் பேசியிருப்போம். விடைகொண்ட போது படியிறங்கி என்னோடு பயணித்து கார்க் கதவு வரை வந்து கைகூப்பினார்.

மீண்டும் அவர் முகம் பார்த்தேன்.

''இளமை இனிமேல் போகாது

முதுமை எனக்கு வாராது""

- என்ற வரிகள் என் நெஞ்சில் வந்து போயின. நிமிர்ந்து நின்ற ரஜினியிடம் பழைய கம்பீரம் பார்த்தேன்.

''விதியை நினைப்பவன் ஏமாளி - அதை

வென்று முடிப்பவன் அறிவாளி""

ரஜினி அறிவாளி!"

-இவ்வாறு அந்தக் கட்டுரையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

English summary
Poet Vairamuthu recently met Superstar Rajinikanth and after the meet the poet told that Rajini is perfectly fine and speedily returning to his usual form.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more