For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  புதுமுக நடிகர்களுக்கு கிடுக்கிப்பிடி!

  By Staff
  |

  Akil with Meera Nandan
  நடிகர் சங்கத்தில் உறுப்பினர்கள் ஆனால்தான் புதுமுக நடிகர், நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு, சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2007-08ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

  பின்னர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவுக்கு பின்னர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

  அப்போது அவர் கூறுகையில், சாதாரண நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்து மாநில முதல்வராக பதவியேற்ற முதல் நடிகரான மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிப்பிலே இமயமாக திகழ்ந்து உலகமே பார்த்து வியந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனித்துவமான நடிப்பாலும், பகுத்தறிவாலும் இன்றளவும் எல்லோராலும் ரசிக்கப்படும் நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகிய மூவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் திருவுருவச் சிலைகள் அமைக்கப்படவுள்ளது.

  நடிப்புக் கலையை வளர்த்தெடுக்க வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடிகர் சங்கத்தில் நடிகர் சங்க அறக்கட்டளையின் சார்பாக வரும் ஆகஸ்ட் மாதம் நடிப்பு பயிற்சி கல்லூரி துவங்கப்படுகிறது.

  இதில் மூன்று வருடங்கள் திரைப்படம் தொடர்பான படிப்பு மற்றும் ஒரு வருட பட்டய படிப்பு ஆகியவற்றை அறிமுகம் செய்யவும், இவ்வாண்டு 100 மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் திட்டமிடப் பட்டுள்ளது.

  2.5% சம்பளத்தை நன்கொடையாக தர வேண்டும்:

  சங்க உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காக தமிழ்த் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 2.5 சதவீதத்தை சங் கத்திற்கு நன்கொடையாக அளிக்க வேண்டும்.

  இந்நடவடிக்கை குறித்து முன்னணி நடிகர், நடிகைகளுடன் விரைவில் கலந்து பேசி சமூகமான முடிவு காணப்படும்.

  தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தும் போது அவர்களை நடிகர் சங்க உறுப்பினராக்கிய பிறகே நடிக்க பயன்படுத்த வேண்டும்.

  இதுவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் வரும் 30ம் தேதிக்குள்ளாக உறுப்பினராக சேர வேண்டும். இல்லையேல், நடிகர் சங்க உறுப்பினர்கள் அவர்கள் இருக்கும் இடம் சென்று அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்வர்.

  சிவாஜி மணிமண்டபத்துக்கு வேறு இடம்:

  சிவாஜிகணேசனுக்கு பெரிய அளவில் மணிமண்டபம் கட்ட விரும்புகிறோம். இம்மணிமண்டபம் குறித்து சிவாஜியின் மகன் பிரபுவுடன் நடிகர் சங்கம் சார்பில் பேசப்பட்டுள்ளது.

  மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு மூலம் சென்னை அடையாறில் சிறிய இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தைவிட மாற்று இடம் அரசு ஒதுக்கி தந்தால் உதவியாக இருக்கும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

  தமிழ் சினிமாவின் 75ம் ஆண்டையொட்டி சென்னையில் பிரமாண்டமாக நட்சத்திர கலை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அழைக்க உள்ளோம்.

  நடிகர் சங்கத்தில் மூன்று கோடியே 49 லட்சம் ரூபாய் இருப்பு உள்ளது என்றார் சரத்குமார்..

  சங்கப் பொதுச் செயலர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, நடிகர்கள் நெப்போலியன், எஸ்.வி. சேகர், நடிகைகள் ராதிகா, மும்தாஜ், விந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்

  பொதுக்குழுவில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்ற நடிகர், நடிகைகளுக்கு நன்றி தெரிவித்தும், அன்றைய தினம் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X