For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மிஷ்கின் சொன்னதும், அவருக்கு திரும்பக் கிடைத்ததும்!

  By Chakra
  |
  Mysskin
  அப்படி என்னதான் சொல்லிவிட்டார் இயக்குநர் மிஷ்கின்? எதற்காக உதவி இயக்குநர்கள் கொதிக்கிறார்கள்?

  இதோ மிஷ்கின் பேட்டியின் ஒரு பகுதி:

  கேள்வி: தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டார்களே...

  பதில்: அதுதான் சார் என் கோபமும். இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் குறைஞ்சிருச்சு. இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர்களை நினைச்சா எனக்கு கோபம் வருது. இப்ப என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டா, பாரதிராஜா, இளையராஜாவெல்லாம் படிச்சுட்டா சினிமாவுக்கு வந்தாங்கன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலேயே திட்டி அனுப்பிச்சுட்டேன்.

  அவங்க வாழ்க்கையை, கிராமங்களை, மனிதர்களை படிச்சவங்க. படிக்காம படைப்பாளி ஆக முடியாது. சினிமா எடுக்கணும்னு சென்னைக்கு வர்ற சராசரி 21 வயது இந்திய இளைஞனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? வீட்டுக்கு பக்கத்தில் யாராச்சும் ஓடிப்போயிருப்பாங்க. அப்பா அம்மாவை போட்டு அடிச்சிருப்பாரு. இரண்டு கொலை தற்கொலை பார்த்திருப்பாங்க. ஒரு காதல் பண்ணியிருப்பான். ஆயிரம் தடவை சுய இன்பம் அனுபவிச்சிருப்பான். இதை தாண்டி என்ன வாழ்க்கை?

  -என்று கூறியுள்ளார் மிஷ்கின்.

  இதைக் கண்டித்து மிஷ்கினுக்கு உதவி இயக்குநர் பாலமுரளிவர்மன் என்பவர் எழுதியுள்ள ஒரு கடிதம் இது.

  "மிஷ்கின எனப்படும் மனநோயாளிக்கு...

  "இந்த உலகின் மிகமுக்கியமான பிரச்னையாக இருப்பது எதுவென்றால், முட்டாள்கள் அதீத தன்னம்பிக்கையோடும் அறிவாளிகள் அவநம்பிக்கையோடும் தம்மீதே கொண்டிருக்கும் சந்தேகங்களோடும் வாழ்வதுதான்."-ஷேக்ஸ்பியர்.

  இதே சிக்கல் திரையுலகிலும் நீடிக்கிறது. தமிழ்த்திரையுலகில் ஒருவன் வெற்றியாளனாக உருவாகும்முன் சந்திக்கின்ற எண்ணற்ற போராட்டங்களுக்குள் முதன்மையானது, புத்திசாலிகளுக்கும் தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்பவர்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

  உடம்பெல்லாம் வாயாக, வாயெல்லாம் கொழுப்போடு திரியும் இந்த மிஷ்கின் சாதித்தது என்ன ? இந்த சமூகத்தில் எதை மாற்றியமைத்துவிட்டார் ? மாபெரும் படைப்பாளியான ரித்விக் கடாக் ஒருமுறை சொன்னார். “மக்கள்தாம் எப்போதுமே மகத்தானவர்கள் என நான் நம்புகிறேன். அவர்கள்தாம் தங்களை தாங்களே மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். நான் எதையும் மாற்றியமைப்பதில்லை."

  இதுதான் தன்னுடைய கலையையும், மக்களையும் மதித்து நேசிக்கும் உயரிய கலைஞனின் பண்பு. மகத்துவமிக்க படைப்புகள் மக்களிடமிருந்துதான் உருவாகின்றன. வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு எதை உன்னதமாக படைத்துவிட முடியும். இத்தகைய உயர்வான குணங்களை மனநோயாளியான உன்னிடம் எதிர்பார்க்கக்கூடாது என்பது எமக்குப் புரிகிறது. ஆனால் திரைப்பட இயக்குனர் என்பவன் இந்திய நாட்டின் பிரதமர் அல்ல என்கிற எதார்த்தத்தை நீ புரிந்து கொள்ளவேண்டும்.

  உன்னைப்போன்றவர்களும் உண்டுக் கொழுப்பதற்காக தன் உயிர் உருக்கி, உடல் வருத்தி உழைக்கின்ற ஏழை விவசாயியை விட நீ ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதை தினமும் கொழுத்த வாயை திறப்பதற்கு முன் நீ எண்ணிப்பார்க்க வேண்டும். அத்தகைய உயர்வான விவசாய குடும்பங்களிலிருந்தும் உழைக்கும் மக்களிடமிருந்தும் உருவாகி தங்களது வாழ்க்கையை படைப்பாக்க வேண்டுமென்கிற லட்சிய வேட்கையுடன் உதவி இயக்குனர்களாக வந்திருக்கிற எளிய குடும்பத்து இளைஞர்களை நீ இழிவான குடிபிறப்பிலிருந்து வந்தவன் என்பதற்காக உனக்கு சமமாக கருதி இளக்காரமாக பேசுவதை எங்களால் அனுமதிக்க முடியாது.

  நீ நிமாய்கோஷ் போலவோ, எழுத்தாளர் ஜெயகாந்தன், அவள் அப்படித்தான் ருத்ரய்யா மாதிரியோ தமிழ்த்திரைப்படத்திற்கான புதிய பரிணாமத்தை கொடுத்தவனா? அல்லது பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா மற்றும் பாலா போல திரைப்படத்தின் போக்கை திசை திருப்பிவிட்டவனா? புடோவ்கின், ஐசன்ஸ்டீன் போல திரைப்படத்திற்கென கோட்பாடுகளை உருவாக்கி தந்தவனா? உனக்கேன் இவ்வளவு நீளமான நாக்கு?

  பெண் சுகத்துக்காகவும், பெட்டி நிறைய பணம் சம்பாதிக்கவும் உன்னைப் போன்றவர்கள் சினிமாவை தேர்ந்தெடுத்திருக்கலாம். என் போன்றவர்கள் சமூக மாற்றத்திற்கான களமாக திரைப் படத்தை கையில் எடுத்திருக்கிறோம். எனக்கு சினிமா ஒரு ஆயுதம். நான் திரைத்துறைக்கு வராமல் போயிருந்தால் ஆயுதம் தூக்கியிருப்பேன். அடக்கி ஒடுக்கப்படும் எம்மக்களுக்கான கருவியாக சினிமாவை கருதும் என்போன்ற இளைஞர்களும் இருபத்தியொரு வயதுள்ள எல்லா சராசரி இந்திய இளைஞர்களும் நீ சொன்ன இலக்கணத்திற்கு பொருந்தமாட்டார்கள்.

  என்னை உனக்கு தெரியுமா? எங்களோடு கைகோர்த்து களமாடுகிற தம்பிகளை நீ அறிவாயா? உன்னைப்போல சுயநலமாக ஒரு நாளும் நாங்கள் இருந்ததில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக எந்த நிலையிலும் தெருவில் இறங்கி போராடுகிறோம்.

  நீ என்றைக்காவது முன் வந்திருக்கிறாயா? உன் தலைக்கொழுப்பு உன்னை தரையில் இறங்க அனுமதித்திருக்கிறதா? இயக்குனர் சங்கத்தின் 40-வது ஆண்டுவிழா நடந்தபோதே இறுமாப்புடன் விலகி இருந்தவன்தானே நீ !

  உன்னைப்பற்றிய உனது மதிப்பீடுதான் எவ்வளவு மடத்தனமானது? இரண்டு லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன் என்று சொல்லிக் கொள்கிறாயே அந்த புத்தகங்கள் உனக்கு கற்றுக்கொடுத்தது என்ன? படிப்பு மனிதனை பண்படுத்ததானே செய்யும். தன் அகங்காரத்தை ஒடுக்கி உனக்குள் உன்னை தேடச் செய்யவில்லையெனில் நீ ஏதோ தவறான புத்தகங்களை படிக்கிறாய் என்பது புரிகிறது.

  அதிகம் படிக்க படிக்க மனம் விழிப்பு கொள்ளும். வாய் தானாக மூடிக்கொள்ளும் ஆனால் நீ ஒவ்வொரு முறையும் திருவாய் திறப்பதில் ஒன்று புரிகிறது. வாங்கிய புத்தகங்களை நீ படிப்பதே இல்லை. மேசை மீது பரப்பி வைத்துக் கொண்டு வருகிறவர்களிடம் எல்லாம் நடைபாதை வியாபாரி போல விரித்துக் காட்டுவதிலேயே நிறைவு பெற்றுவிடுகிறாய்.

  இதுவரை உனக்கு இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. மூன்றாவதில் பெரும் சிக்கல். இடைவெளிக்குப் பின் நான்காவதாக ஒரு படம். இதைத்தவிர வேறென்ன செய்துவிட்டாய்? உன்னுடைய படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது பற்றி திரையுலகில் பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. நீ ஒரு கைதேர்ந்த திருடன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பிறகு எதற்காக இவ்வளவு ஆணவம்?

  உனக்கு நினைவிருக்கிறதா ? நாங்கள் ஐந்துபேர் உன்னை ஒரு நாள் சந்தித்தோம். இயக்குனர் திரு.சேரன் குறித்து எவ்வளவு கேவலமான தொனியோடு நீ பேசினாய் ? “சேரனுக்கே ஒண்ணும் தெரியலங்க . யுத்தம் செய் ஷூட்டிங்ல மொத அஞ்சுநாள் ரொம்ப தடுமாறி போயிட்டாரு, எதுவுமே அவருக்கு புரியல, எம் பேட்டனையே அவரால புரிஞ்சுக்க முடியல. என்னடா இந்த மனுசன் இப்படி இருக்காரேனு நெனச்சேன், அப்பறந்தான் கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு செட்டானாரு"

  சொன்னியா இல்லியா ...? நல்ல தாய் தகப்பனுக்கு பொறந்திருந்தா உன்னால இத மறுக்க முடியாது. தமிழ்த்திரையில் அண்ணன் சேரன் ஆழமான தடம் பதித்தவர். அவருடைய எல்லா படைப்புகளுமே தமிழர் வாழ்வை உணர்வுப் பூர்வமாக எங்கள் நெஞ்சில் விதைத்தவை. அவரைப்பற்றியே ஏளனமாக பேசிய போதுதான் உன்னுடைய மனவிகாரத்தை நாங்கள் புரிந்து கொண்டோம்.

  இங்கே இருக்கிற உதவி இயக்குனர்களுக்கு வாழ்க்கை அனுபவம் இல்லை என்கிறாய்! அமெரிக்காவில் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞன் தன் வேலையை விட்டுவிட்டு உன்னிடம் உதவி இயக்குனராக வரப்போவதை சொன்ன நீ, 'அவன் பேசுறத கேக்குறப்பவே தெரியுது. நிச்சயமா நான் சொல்றேன் அவன் டைரக்டராயிடுவாங்க'. 'எத வெச்சு சொல்றீங்க?' நான் கேட்டதும் ஒருகணம் என்னை உற்றுப்பார்த்து விட்டு 'எனக்கு தெரியும்' என்றாய்.

  இங்கிருக்கிறவர்களுக்கே வாழ்க்கை அனுபவம் இல்லை எனும்போது, இவர்களே மனிதர்களை படிக்காதவர்களாக உன் பார்வைக்கு படும்போது அமெரிக்காவில் இருப்பவனுக்கு மட்டும் என்ன அனுபவ அறிவு இருந்துவிட முடியும் ?

  யாராவது ஒரு உதவி இயக்குனர் தனியாக சிக்கிவிட்டால், மேதாவித்தனத்தை காட்டுவதுதான் ஒரு இயக்குனருக்கு பெருமையா? 'தம் அடிப்பியா? சரக்கடிப்பியா? இதெல்லாங்கூட செய்யாம நீ என்னடா அஸிஸ்டென்ட் டைரக்டர்? எதுக்கு சினிமாவுக்கு வந்த?' என்று கலங்கடித்திருக்கிறாயே? உன்னளவில் வாழ்க்கை அனுபவம் என்பது குடிப்பதும் புகைப்பதும் தானா?

  நீ முதலில் ஒன்றை புரிந்து கொள். பாட்டும் இசையும், கூத்தும் கலையும் எம் தமிழர் மரபில் உயிரோடு கலந்தவை. எங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஆதார காரணிகளாக இருப்பதும் கலைகள்தான். உதவி இயக்குனர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனுக்கும் அவனது வாழ்க்கை அனுபவச் செறிவோடுதான் நிறைவடைகிறது. எல்லோரிடமும் ஓராயிரம் கதைகள் நிறைந்து கிடக்கின்றன. சொல்லவும், எழுதவும், திரைப்படமாக உருமாற்றுவதற்குமான வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

  நீ என்னோடு புறப்பட்டு வர முடியுமானால் சொல். தஞ்சை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூர்களுக்கும் செல்வோம். எங்கள் மனிதர்களை பார். எம்மக்களின் வாஞ்சை மிகுந்த நேசத்தை உணர். இவர்களை பற்றியா இந்த வெள்ளந்தியான மனிதர்களின் குடும்பப் பின்னணி பற்றியா கொச்சைப்படுத்தினோமென்று குறுகிப் போவாய்- நீ மனிதனுக்குப் பிறந்திருந்தால்!.

  தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மீது நீ ஏன் வார்த்தைகளை அமிலமாக அள்ளி வீசுகிறாய்? உன்னுடைய உள்மனதில் இருப்பது என்ன? நீ யார்? எவ்விடத்திலிருந்து புறப்பட்டவன்? உன்னுடைய வேர் எங்கிருக்கிறது? எல்லாம் எங்களுக்கு தெரியும். உன்னுடைய திரைப்படங்களில் நீ ஏன் பெரும்பாலும் மலையாளிகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறாய் என்கிற உண்மையும் எங்களுக்கு தெரியாமல் இல்லை.

  இங்கே பிழைக்க வருபவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. மாறாக எங்களை எதிரியாக கருதுகிற எவனுக்கும் இங்கு இடம் தர முடியாது. இனியும் உன் தடித்த நாக்கு எங்களுக்கு எதிராக நீளுமானால் நீ தமிழ்நாட்டிலிருந்து இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள நேரிடும் என்பதை மனதில் கொள். முந்தைய தலைமுறை போல இளம் தலைமுறை பெருந்தன்மை என்ற பெயரில் உறங்கிக்கிடக்காது என்பதை சூடு சொரணை உள்ள தமிழனாகவும், உருப்படியான உதவி இயக்குனராகவும் உனக்கு சொல்லிக்கொள்கிறேன்.அரையிருட்டு அறைக்குள்ளும் கருப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளும் உனக்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும்.

  கண்களை விரி ! காதுகள் திற ! வாயை மூடு !

  -பாலமுரளிவர்மன்.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more