For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிவாஜி .. நெகிழ்ந்த பாலுமகேந்திரா!

  By Staff
  |

  Balu Mahendra and K. Bhagyaraj
  மறைந்த திரையுலக சாதனையாளர்களுள் ஒருவரான சிவாஜிகணேசனைப் பற்றி எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் சிவாஜியைப் பற்றி நினைவு கூர்ந்த இயக்குநர் பாலு மகேந்திரா கண்ணீர் விட்டு அழுதார்.

  சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்த இந்த விழாவில் ஏவி எம் சரவணன், இயக்குநர் கே. பாக்யராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

  சிவாஜி கணேசனை பற்றிய புத்தகத்தை பட அதிபர் ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

  மற்ற சாதனையாளர்கள் ஷம்மிகபூர், பி.சி.பரூவா, குருதத், மெகபூப்கான், சோராப் மோடி 5 பேர்களை பற்றிய புத்தகங்களை ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் பாலு மகேந்திரா பெற்றுக்கொண்டார்.

  விழாவில், டைரக்டர் பாலு மகேந்திரா பேசியதாவது:

  சின்ன வயதில் நான் தீவிர சிவாஜி ரசிகன். சிவாஜி நடித்த படங்களை முதல்நாள், முதல் காட்சி பார்த்து விடும் தீவிர ரசிகன். சிவாஜி நடித்த படங்களைப் பார்த்துவிட்டு வந்து, அந்த படத்தின் கதைகளை என் நண்பர்களிடம் சொல்வேன்.

  எனக்கு 14 வயது இருக்கும். சிவாஜி கொழும்பு வந்திருந்தார். என் குடும்பம் கிழக்கு இலங்கையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்தது. சிவாஜியைப் பார்க்கப் போகவேண்டும் என்று என் பெற்றோர்களிடம் அடம் பிடித்தேன். அனுமதி கிடைக்கவில்லை. வீட்டைவிட்டு ஓடிவந்து விட்டேன். எங்க கிராமத்தில் இருந்து கொழும்பு 250 மைல் தூரம்!

  கொழும்பு நகரில், மாலையில் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிவாஜி கலந்துகொண்டார். ஸ்டைலாக மேடை ஏறினார். அந்த மேடையில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். சிவாஜி, சிம்மக் குரலில் பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும் வரை நான் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கும்பிட்டபடி அமர்ந்திருந்தேன் (உடனே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்...).

  இன்றைய நடிகர்களுக்கெல்லாம் நடிப்பில் வழிகாட்டி சிவாஜிதான். அவர் சாகவில்லை. நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சிவாஜி போன்ற மேதைகள் வாழ்ந்த சினிமாவை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்க வேண்டும்.

  ஒருமுறை நான் பிரபுவை பார்ப்பதற்காக, அவர்கள் வீட்டுக்கு சென்றேன். அப்போது சிவாஜி மாடியில் இருந்து இறங்கி வந்தார். நான், பிரபுவைப் பார்க்க வந்ததாக அவரிடம் கூறினேன். ஏனப்பா, என்னைப் பார்த்தால் நடிகராக தெரியவில்லையா? என்றார் அவருக்கே உரிய தோரணையில்.

  சிவாஜியை வைத்து படம் டைரக்டு செய்ய முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கு மிச்சமிருக்கும் ஒரே வருத்தம் என்றார் பாலுமகேந்திரா.

  தாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் பேசியதாவது:

  தெய்வப்பிறவி படப்பிடிப்பு எங்கள் ஸ்டூடியோவில் நடைபெற்றபோது, படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக நான், சிவாஜியைச் சந்தித்தேன். அப்போது அவருடன் பழகும் பாக்கியம் பெற்றேன்.

  உலகிலேயே ஒரு நடிகர் நின்று நடித்த இடத்தில், அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு இருப்பது, ஏவி.எம். ஸ்டூடியோவில்தான்.

  சிவாஜி நல்ல நடிகராக, நல்ல மனிதராக, நல்ல தந்தையாக, நல்ல தாத்தாவாக, நல்ல கொள்ளு தாத்தாவாக வாழ்ந்தார். இந்தியாவிலேயே சிவாஜி குடும்பம் மாதிரி ஒற்றுமையான கூட்டு குடும்பம் வேறு எந்த நடிகர் குடும்பத்திலும் இல்லை என்றார்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X