For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்!

  By Sudha
  |

  1999 Movie DVD
  டொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999' திரைப்படத்தின் டிவிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

  நார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம் இந்த 1999.

  படத்தின் கதை இது:

  தாயில்லாத அன்பு என்ற இளைஞன் தந்தையுடன் ஸ்காபுரோவில் வாழ்ந்து வருகிறான். தனிமையில் தள்ளப்பட்டு அன்புக்காக ஏங்கும் இவன், லோக்கல் சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான்.

  இந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு. இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன் அகிலன். தனது முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறி, பல்கலைக்கழக இறுதியாண்டில் பயின்றுகொண்டிருக்கும் இவன், தன்னைப்போல பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக நிதி திரட்டி அவர்களுக்கு உதவுவதையே தனது கடமையாகக் கொண்டவன்.

  இம்மூவருமே இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தில் குழந்தைப் பருவத்திலேயே தம் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள்.

  டொரன்டோ மாநகரத்தில் ஒரு அமைதியான சனிக்கிழமையில், இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கை எப்படி முற்றாக மாறுகிறது என்பதுதான் 1999.

  1990களில் நடைபெற்ற பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அதில் சம்பந்தப்பட்ட பலரின் அனுபவங்களையும் கருத்துக்களையும் ஆராய்ந்து, சண்டைக்காரர்கள் என்று சமுதாயத்தால் முத்திரை குத்தப்பட்டாலும் அவர்களுக்குள்ளும் அன்பு, பாசம், நேசம் போன்ற உன்னதமான உணர்வுகள் இருப்பதையும், இவர்கள் இப்படியான நிலைக்கு மாறக் காரணம் என்ன?, இவற்றை எப்படித் தவிர்க்கலாம்?, இதில் பெற்றவர்களின் பங்கு என்ன?, எமது சமுதாயத்தின் பங்கு என்ன? ,இதிலிருந்து தமிழர் அறியக்கூடியது என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைதேடும் முகமாகவும் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது 1999.

  தீபா மேத்தா பாராட்டு!

  இத் திரைப்படத்தைப் பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குநர் தீபா மேத்தா, தனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது என்றும், அதன் உண்மைத் தன்மை தனது மனத்தை நெகிழ வைத்துள்ளது என்றும் பாராட்டினார்.

  பிரபல தென்னிந்திய இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, ஜனநாதன் போன்றோரின் பாராட்டையும் இத் திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இத் திரைப்படம் வன்கூவர் சர்வதேச திரைபட விழாவில் டாப் 10 படங்களில் ஒன்றாகக தேர்வு செய்யப்பட்டு விருதளிக்கப்பட்டது. நார்வே தமிழ் திரைபட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான 'நள்ளிரவுச் சூரியன்' என்ற விருதையும், டொரன்டோ ரீல் வார்ல்ட் என்ற திரைபட விழாவில் பார்வையாளர்களின் விருதையும் பெற்றது.

  இது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடைபெற்ற, பல திரைப்பட விழாக்களில் தெரிவாகி பல விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இத்திரைப்படத்திற்கான பாடல்கள், பின்னணி இசையை ராஜ் (ராஜ்குமார் தில்லையம்பலம்) அமைத்துள்ளார். இதில் வரும் பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம், திப்பு, ஹரிணி, கார்த்திக் போன்ற பிரபல தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர்களோடு ஈழத்து, கனடியப் பாடகர்களும் பாடியுள்ளார்கள்.

  படத்தின் இயக்குநர் லெனின் எம் சிவத்துக்கு சொந்த ஊர் யாழ்ப்பாணம். ஆனால் சிறுவயதிலேயே புலம் பெயர்ந்த தமிழராய் கனடாவில் செட்டிலாகிவிட்டார். ஈழத் தமிழர்களின் முதல் முழுநீளத் திரைப்படம் இந்த 1999 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  வணிக ரீதியிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களைச் சென்று சேர வேண்டியது அவசியம் என்பதால், இதனை டிவிடி வடிவில் இப்போது வெளியிட்டுள்ளனர். இத் திரைப்படத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோக உரிமையை வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் (VN Music Dreams, Oslo, Norway) பெற்றுள்ளது. இத் திரைப்படத்தின் டிவிடிக்கள் மிகவிரைவில் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கிடைக்கும்.

  இந்த டிவிடி வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் கனடிய தலைநகர் டொரன்டோவில் நடந்தது. 1999 திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பாளரான ரமேஷ் செல்லத்துரை வெளியிட, முதல் பிரதியை வசீகரன் இசைக் கனவுகள் நிறுவனத்தின் உரிமையாளர் வசீகரன் சிவலிங்கம் பெற்றுக் கொண்டார்.

  "இது இன்றைய புலம் பெயர் தமிழர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தமிழருமே பார்க்க வேண்டிய படைப்பு. இன்றைய தலைமுறை தமிழர்கள் எப்படி உள்ளனர் என்பதை அப்படியே படம் பிடித்துள்ளார்கள். படம் தொடர்பான விபரங்களுக்கு www.1999movie.com , www.vnmusicdreams.com என்ற இணையத் தளங்களைப் பார்க்கவும். vnmusicdreams@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்," என்றார் வசீகரன்.

  இந்தப் படத்தை பகவான் நிறுவனத்துடன் கற்பனாலயா நிறுவனம் கூட்டாகத் தயாரித்துள்ளது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X