twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மே 23-ல் தசாவதாரம்?

    By Staff
    |

    Kamal
    தசாவதாரம் படம் எப்போது வரும் என்ற கேள்விக்கான விடை அந்தப் படத்தைவிட சுவாரஸ்மாக இருக்கும் போலிருக்கிறது. படத்தில் கமல் ஏற்றுள்ள பத்து வேடங்கள், மெகா பட்ஜெட், படப்பிடிப்பு நடத்தப்பட்ட நாட்கள், ஆடியோ வெளியீடு என பலவிதங்களிலும் புதிய சாதனையைப் படைத்த இந்தப் படம், ரீலீஸ் தேதியைத் தள்ளிப் போடுவதிலும் கின்னஸுக்கு நிகரான சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது.

    இதுவரை 13 முறை ஆடியோ வெளியீட்டுத் தேதியையும், படத்தின் ரிலீஸ் தேதிகளையும் தள்ளிப் போட்டு வந்துள்ளது ஆஸ்கார் நிறுவனம்.

    இறுதியாக மே 9-ம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 9-ம் தேதியன்று கூட அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாறாக, இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக படத்தின் டிரெய்லர் காட்சிகள் சில இருப்பதாகக் கூறி இந்து மத அமைப்புகள் கோர்ட்டுக்குப் போய்விட்டன.

    இந்நிலையில் தசாவதாரம் இம்மாதம் 23 அல்லது ஜூன் 6ம் தேதியில் நிச்சயம் ரிலீசாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.

    கோர்ட், கேஸ் என தொடர்ந்து இப்படம் சிக்கல்களைச் சந்தித்து வருவதால் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதியாகச் சொல்ல முடியாமலிருந்ததாகவும், இப்போது சட்டச் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் மே 23 அல்லது ஜூன் 6-ல் படத்தை ரிலீஸ் செய்துவிடும் திட்டத்திலிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சட்டச்சிக்கல்கள் மட்டுமல்ல.... கிராபிக்ஸ் வேலைகளும் கூட இன்னும் முழுமையாக முடியாமல் இழுத்துக்கொண்டே போவதும் ரிலீஸ் தள்ளிப் போகக் காரணமென்கிறார்கள் யூனிட் ஆட்கள். தற்போது படத்தின் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றனவாம்.. படத்தின் கிளைமாக்ஸான சுனாமி காட்சிகளுக்குத்தான் கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதாம். அதற்காகத்தான் ஜூன் 6-ம் தேதியை முன்கூட்டியே அறிவித்திருக்கிறாராம் ரவி.

    படத்தின் ட்ரைலர் தற்போது அனைத்து தியேட்டர்களிலும் காண்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் தசாவதாரம் திரையிடப்பட உள்ளது. டைம்ஸ் அட்வர்டைசிங் குழு இதன் மார்கெட்டிங்கை கவனித்துக் கொள்கிறது. அனைத்து முன்னணி சில்லறை விற்பனை மையங்களிலும் டிக்கெட்டுகளை விற்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ஒரு பிரபல கார்ப்பரேட் நிறுவனத்துக்கு 11 மாத குத்தகை அடிப்படையில் ரூ.90 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம். எப்படிப் பார்த்தாலும் ரூ.30 கோடி வரை ரிலீஸுக்கு முன்பே லாபம் என்பதால் ஆனந்தக் கடலில் முழ்கியுள்ளார் ரவிச்சந்திரன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X