For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தியேட்டர்களுக்கு வெளியே தீபாவளி!

  By Shankar
  |

  Theaters
  முன்பெல்லாம் ஊர்களில் ஒரு தியேட்டரை சொந்தமாக வைத்திருந்தால் அவர்தான் பெரிய 'தலை'. ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவியையே அவருக்குதான் தருவார்கள்!

  எண்பதுகளில் இப்படி பஞ்சாயத்து தலைவரான பலரை நான் பார்த்திருக்கிறேன்!

  அதேபோல, தீபாவளிக்கு நிறைய படங்கள் வெளியாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை குறைந்தது 6 படங்களாவது வெளிவந்து கொண்டிருந்தன.

  ஆனால் இன்றைக்கு அதெல்லாம் சாத்தியமில்லாத சமாச்சாரம். பிரதான காரணம், மக்களுக்கு மாற்றுப் பொழுதுபோக்குகள் நிறைய கிடைப்பதுதான்.

  ராசிபுரம், கிருஷ்ணகிரி போன்ற சிறு நகரங்களுக்கு அருகிலும் பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளிட்ட பல சமாச்சாரங்கள் கடைவிரித்துவிட்டன. சுற்றுலாத் தளங்கள் எல்லாவற்றிலும் பண்டிகைக் காலங்களில் கூட்டம் நெருக்கியடிக்கிறது. போதாக்குறைக்கு இரண்டு நாளைக்கு விடிய விடிய டிவிகளில் தீபாவளி நிகழ்ச்சிகள் வேறு!

  எனவே விசேஷ நாளை சினிமா தியேட்டரில் கழிக்கும் நிலை அடியோடு மாறிவிட்டது.

  இன்னொன்று தியேட்டர்கள் பற்றாக்குறை. தமிழகம் முழுவதும் ஒரு காலத்தில் 2500 அரங்குகள் இருந்தன. டூரிங் கொட்டகைகளையும் சேர்த்து. சினிமா கொட்டகை இல்லாத ஊரில் குடியிருப்பது வேஸ்ட் என்பார்கள் முன்பு தமாஷாக!

  ஆனால் இன்று மிஞ்சிப் போனால் 1000 அரங்குகள் தேறுவதே கடினம் என்ற நிலை. சென்னையில் பழைய திரையரங்குகள் மூடப்பட்டாலும், அவற்றுக்கு பதில் நான்கைந்து திரைகள் கொண்ட மல்டிப்ளெக்கள் நிறைய வந்துவிட்டன.

  ஆனால் மற்ற நகரங்களில் நிலைமை அப்படியில்லை. அங்கெல்லாம் திரையரங்குகள் கல்யாண மண்டபங்களாகி நீண்ட வருடங்களாகிவிட்டன. கிட்டத்தட்ட டூரிங் கொட்டகைகளே இல்லாத நிலை. பல ஊர்களில் டூரிங் கொட்டகைகள் இருந்த இடங்கள் களத்து மேடாகக் காட்சியளிக்கின்றன!

  இருக்கிற திரையரங்குகளும் கூட நல்ல வசதியான, ஆரோக்கியமான சூழலில் இல்லை. நல்ல ஒலியமைப்பு, துல்லியமான காட்சி திரையிடல் போன்ற வசதிகளோடு உள்ள அரங்குகள் 600-700 தான் என்கிறார்கள் சினிமா வர்த்தக ஆய்வாளர்கள். மக்கள் தியேட்டர்களை விட்டு ஓட, தாறுமாறான டிக்கெட் கட்டணங்களையும் ஒரு முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.

  திரையரங்குகள் எண்ணிக்கை மீண்டும் பெருகும் சூழல் உருவாகுமா? மீண்டும் இது ஒரு லாபகரமான வர்த்தகமாக மாறுமா?

  "நிச்சயம் தியேட்டர் நடத்துவது லாபகரமான தொழில்தான். ஆனால் அதை நடத்தும் முறைதான் முக்கியம். இப்போது மக்கள் மனநிலை மாறியிருக்கிறது. நிறைய வசதிகள் வேண்டும் என்கிறார்கள். சுத்தமான அரங்கு, துல்லியமான ஒலியமைப்பு, தரமான உணவுப் பொருள்கள், இணக்கமான அணுகுமுறை என ஆரோக்கியமான மாறுதல்கள் இருந்தால் நிச்சயம் மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.

  அதேபோல, நான் நீண்ட நாள்களாக சொல்லிவரும் விஷயம், 150 பேர் அமரும் வகையில் மினி தியேட்டர்களை அமைக்க வேண்டும் என்பது. பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். குறைந்த ஊழியர்கள் போதும். மக்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இத்தகைய திரையரங்குகள் ஊர்தோறும் அமைய அரசு உதவ வேண்டும். அப்போது இந்தத் தொழிலுக்கே புத்துயிர் கிடைக்கும்," என்கிறார் விநியோகஸ்தர் சங்கத் தலைவரான கலைப்புலி சேகரன்.

  இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார் அபிராமி மெகா மால் உரிமையாளரும், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன்.

  "வெறும் சினிமா ஹாலாக மட்டும் இருந்தால் இனி வேலைக்காகாது. அதனால்தான் அபிராமி காம்ப்ளெக்ஸ் மெகா மாலாக மாறியது. மாற்று பொழுதுபோக்கையும் முடிந்த வரை நாமே தரவேண்டும். தரமான அரங்குகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு அபிராமியே ஒரு சிறந்த உதாரணம்," என்கிறார்.

  வரும் நாட்களில் தியேட்டர்களுக்கு உள்ளே தீபாவளி கொண்டாடும் நாள் வருமா?

  English summary
  The quality and number of theaters in Tamil Nadu are declining slowly. Because of this trend, people lost their interest in viewing films in cinema halls. Now most of the viewers gone out of theaters in festival days.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X